ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனுடன் பேசிப் பழகுவது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணர்வுகளையும், தேவைகளையும் பேச்சின் மூலமே புரிய வைக்க முடியும். அத்தகைய பேச்சை பிறர் புரிந்து கொள்ளுமாறு பேசினால் தான் பலன் அளிக்கும். நாம் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதற்கேற்ப நமது பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மேடைப் பேச்சால் ஆட்சியைப் பிடித்ததுதான் திமுகவும், அதிமுகவும். அதற்குக் காரணம், சிந்தனையைத் தூண்டக்கூடிய பல பேச்சாளர்கள், தலைவர்கள் இருந்தார்கள். இருக்கின்றார்கள். ரசிக்கும்படி மட்டுமின்றி தமது கொள்கைகளை வலிமையாகப் பேச்சினால் எடுத்து வைக்க வேண்டும். மேடைப் பேச்சு மட்டுமல்ல; சாதாரண உரையாடலில்கூட நாம் சாதிக்க முடியும். அதற்கு அடிப்படை புரிந்துகொள்ளுமாறு பேசுவதாகும்.
தனக்குச் சரளமாகப் பேச வராது என்று தெரிந்த இறைத்தூதரில் ஒருவரான மூஸா(அலை) அவர்கள் தனக்கு நன்றாகப் பேசக் கூடிய ஆற்றலை வழங்குமாறு இறைவனிடம் கேட்டார்கள்.
‘என் இறைவா, என் நெஞ்சத்தை விரிவாக்கியருள்வாயாக! மேலும், என் செயல்களை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக. என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக; நான் கூறுவதை மக்கள் புரிந்து கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 20:25-28)
பிறர் தம் பேச்சைக் கவனித்துக் கேட்பதில்லை. மதிப்பதில்லை. புரிந்துகொள்வதும் இல்லை எனச் சிலர் கூறுவார்கள். அதன் காரணமாக மனதளவில் கேட்பவர்களை வெறுக்கின்றனர். இது கேட்பவரின் தவறில்லை, பேசுபவரின் தவறு.
நாம் பேசுவதை அவர்கள் புரிந்துகொண்டார்களா? என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே நாம் பேசிக் கொண்டேயிருந்தால் அவர்கள் நம் பேச்சை முழுமையாகக் கவனிக்க மாட்டார்கள். இத்தகைய தவறிலிருந்து விடுபட நம் பேச்சு தொடர்பான சிறிய கேள்விகளை அவ்வப்பொழுது கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பேசுவதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்பது தெரிய வரும். நீங்கள் பேசும் பொழுது இடைஇடையே மறுக்கப்படுவதையும், கேலி செய்யப்படுவதையும் உணர்ந்தால் அவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
யாரிடம் எப்படிப் பேச, பழக வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளாத வரை, உங்களுக்கு உங்களைத் தவிர வேறு எதிரி யாருமில்லை. புதிய கருத்துள்ள சிந்தனையான பேச்சை ஏற்க மறுப்பவர்கள்தான் உலகில் அதிகமானோர் உள்ளனர். அதன் காரணமாக நட்பு வட்டத்திலிருந்து விலகிச் செல்பவர்களும், ஏற்காதவர்களும் உள்ளனர். எனவே பேசும் பொழுது நாகரிகமாகவும், வலுவான ஆதாதரங்களுடனும் பேசுங்கள். நீங்கள் பேசுவது பொய் எனத் தெரிந்தால் அதனைக் கேட்டாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சில நேரங்களில் புதியவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலைகள் கூட வரும். இவ்வுலகில் அந்நியர்கள் என்று யாருமில்லை. எனவே தயங்காமல் புதியவர்களுடன் பேசிப் பழகுங்கள். ஆனால் அவ்வாறு பேசும் பொழுது சுய தம்பட்டம், தற்பெருமை அடிக்கக்கூடாது. மாறாக பிறர் நலம், சமுதாயச் சிந்தனை, மார்க்க விஷயங்களைப் பேசவேண்டும்.
முக்கியமாகப் பேசும் பொழுது நினைவு கொள்ளுங்கள். பேசுவது பேச்சோடு முடிவதில்லை. கருத்துகளும் உள்ளமும் சந்திக்கின்றன. அதனால் பெரும் அனுபவங்களும் நிலைத்திருக்கக் கூடியவை.
நம்முடைய வாய் மட்டும் பேசக்கூடாது. உடலும் பேச வேண்டும். இதை உடல்மொழி(Body Language)என்று கூறுவார்கள். ஒருவரைச் சந்திக்கும் பொழுது மலர்ந்த முகத்துடன் சந்திக்க வேண்டும். அத்துடன் கை குலுக்குவதையும் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது பிறர் நம்மை அணுகிப் பேசவும், நட்பு மலரவும் தூண்டும். இது இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
பேசும் பொழுது கண்கள் சந்திக்க வேண்டும். அப்போதுதான் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்கின்றார்களா என்பதையும் பேச்சு உண்மையா என்பதையும் அறிய முடியும். வாயால் சொல்ல முடியாதவற்றைக் கூட கண்களால் சொல்ல முடியுமல்லவா?
மற்றொரு மிக மிக முக்கியமான விஷ யம். தெரிந்தது, தெரியாதது எல்லாவற்றையும் பேசிவிடக் கூடாது. மேலும் புறம் பேசுதல் என்பது அறவே கூடாது. இதைப் பலர் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள். புறம் பேசுதல் பற்றியும், அதன் கேடு பற்றியும் குர்ஆனில் ஓர் அத்தியாயமே உள்ளது.