மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்தியப் பண்பாட்டில் முகலாயர்களின் தடங்கள்
அப்துல் சத்தார், 1-15 அக்டோபர் 2025



இந்தியாவில் பாடத்திட்டத்திலிருந்து முகலாயர்களின்  வரலாற்றை மெல்ல மெல்ல அகற்றத் தொடங்கி உள்ளார்கள். NCERT மூலமாக டெல்லி சுல்தான்கள், முகலாயர்களின் வரலாற்றை அடியோடு நீக்கி விட்டார்கள். இந்த அநீதி இன்று நேற்றல்ல! காலம் காலமாகத்  தொடர்கிறது.  ஒற்றைச் சிந்தனை உடைய கல்வியாளர்களின் காழ்ப்பு உணர்வாலும், பாஜகவின் இஸ்லாமிய விரோதப் போக்காலும், இஸ்லாமிய வரலாறும் அடையாளங்களும் மறைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்த முகலாயர்களின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரு கிறது.

முகலாயர்கள் கட்டிய அரண்மனையிலிருந்து கொடி ஏற்றுவார்கள். ஆனால் அந்த வரலாறு அவர்களுக்குத் தேவையில்லை. முகலாயர்கள் கட்டிய கட்டிடங் களைச் சுற்றுலாத் தலமாக்கிக் காசு பார்ப்பார்கள். ஆனால் அந்த வரலாறு அவர்களுக்குத் தேவையில்லை. முகலாயர்கள் என்றால் ஜிஸ்யா வரி விதித்தவர்கள், கோயிலை  இடித்தவர்கள்,  கொடுங்கோலர்கள், பல இன்னல்களை விளைவித்தவர்கள் என்று பதிவு செய்கிறார்கள். எனினும் இந்திய வரலாற்றில் முகலாயர்களின் தடங்களைப் பதிவு செய்து உண்மை வரலாற்றை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

  • 1526இல்  நடந்த முதலாம் பானிபட் போரில் முகலாய மன்னர் பாபர்தான் முதன் முதலில் பீரங்கியைப் பயன்படுத்தினார். இவரை இந்தியாவின் மீது படை எடுக்க அழைத்தவர்கள் இங்கிருந்த இந்து மன்னர்கள்.
  • காதுகுத்தும் பழக்கமே மக்களிடத்தில் இருந்தது. முகலாயர்களின் காலத்திலிருந்துதான் மூக்குத்தி அணியும் பழக்கம் தோன்றியது.
  • பசலி என்ற ஆண்டு கோயில் திருவிழா அழைப்பிதழ்களில்  குறிக்கப்படுகிறது இதனை அறிமுகப்படுத்தியவர் அக்பர். ஜூலையில் பசலி ஆண்டை பார்சி இனமக்கள் கொண்டாடுகிறார்கள்.
  • அமிர்தசரசில்  உள்ள  பொற்கோயில் கட்டுவதற்கான நிலம் முகலாய மன்னர் அக்பர் நான்காவது சீக்கிய குருவான ராம்தாஸுக்குக் கொடுத்தது.
  • ரோஜா, மல்லிகை மலர்கள் முகலாயர் களின்  வருகைக்குப்  பின்பு  இங்கு அறிமுகமானது.
  • மகாபாரதமும் ராமாயணமும் பாரசீக மொழியில் அபுல் பைசி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
  • கிரேக்க நாட்டு மருத்துவ முறைகள், அரபு பார்சி மருத்துவ முறைகள் கலந்து யுனானி மருத்துவ முறை உருவானது. இது முகலாயர்கள் காலத்தில் செழித்து வளர்ந்தது.
  • முகலாயர்கள் காலத்தில்தான் உருது மொழி உருவானது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு தனது திருமண பத்திரிகையை உருது மொழியில்தான் அச்சடித்தார்.
  • முகலாயர் ஆட்சிக் காலத்தில் டெல்லியின் வழியாகச் செல்லும் பயணிகளுக்காக பரீத்கான் என்பவரால் கட்டப்பட்டதுதான் இன்றைய திகார் ஜெயில் ஆகும்.
  • மராத்திய அரசர் சிவாஜியின் தந்தை ஷாஜி ஷாஜகான் ஆட்சியில் பணியாற்றியுள்ளார்.
  • முகலாயர்களின்  ஆட்சிக்  காலத்தில் ஷரீஅத் சட்டத்தை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கவில்லை.
  • சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • முகலாய மன்னர் ஔரங்ஜேபின் மகள் ஜாபர் நிஸா மூலம்தான் சுடிதார் என்னும் பெண்களின் உடை அறிமுகமானது.
  • இந்தியாவின் தோட்டம் என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷாலிமர், நிஷா தோட்டங்கள் ஜஹாங்கீர் காலத்தில் உருவானவை.
  • கங்கைக் கரையில் உள்ள காசி மடம் கட்டப்பட்டுள்ள இடம் ஷாஜகானின் மகன் தாராசுகோவால் குமரகுருபருக்கு வழங்கப்பட்டது.
  • அக்பரின் ஆட்சிக் காலத்தில்தான் அலகா பாத் என்ற நகரம் உருவானது.
  • விடுதலை தினத்தன்று பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை ஷாஜகானால் கட்டப்பட்டது.
  • குங்குமப்பூவை இந்தியாவில் பிரபலமாக்கியவர் ஜஹாங்கீர்.
  • வெயிலின் தன்மையைக் குறைக்கப் பயன்படும் சர்பத் எனும் குளிர்பானம் முகலாய மன்னர் பாபர் மூலமாகத்தான் அறிமுகமானது.
  • சமோசா என்ற பிரபலமான தின்பண்டத்தை முகலாயர்கள் அறிமுகம் செய்தனர். அயினி அக்பரி என்ற நூலில் சமோசா பற்றிய குறிப்பு உள்ளது.
  • குல்பி எனும் ஐஸ்கீரிம் முகலாய மன்னர்களுக்காகத்தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
  • சமையல் பாத்திரங்களுக்கு வழங்கப்படும் தேக்ஸா என்ற சொல் முகலாயர்களின்  சமையலறையிலிருந்துதான் உருவானது.
  • ஜஹாங்கீர் குங்குமப்பூவை பிரபலமாக்கினார். அவரின் சமையல்காரர் உருவாக்கியதுதான் ஜாங்கிரி எனும் இனிப்புப் பண்டம்.
  • இன்று பயன்படுத்தப்படும் தந்தூரி அடுப்பை அறிமுகம் செய்தவர்களும் முகலாயர்கள்தான்.
  • மாம்பழத்தில் பலவித ஒட்டுரக பழங்கள் உருவாக்கப்பட்டு  இன்றுள்ள  பல பழங்கள் உருவாயின.
  • யுனானி மருத்துவமுறை முகலாயர்கள் காலத்தில் தான் வளர்ந்தோங்கியது.
  • டெல்லி சுல்தான்களின் பாடங்களும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி நகரை உருவாக்கியவர் இல்டுமிஷ் ஆவார்.  டெல்லியை ஆண்ட முதல் முஸ்லிம் மன்னர் குத்புதீன் ஐபக். முதல் பெண்ணரசி ரஸியா பேகம்.
  • பொருள்களுக்கு  விலை  நிர்ணயம் செய்யும் முறையைக் கொண்டு வந்தவர் அலாவுதீன் கில்ஜி. ரூபாய் நாணயங்களைச் செப்பு, தோல்களில் அமைத்த மன்னர் முகம்மது பின் துக்ளக்.
  • டெல்லி சுல்தான்களுக்கு நீதிமன்ற மொழி யாக பாரசீகம் இருந்தது.
  • குதிரையின் மீது அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டு முகலாயர்கள் காலத்தில் பிரபலமானது.
  • நவாபுகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் கபாப் எனும் இறைச்சி உணவு. அதேபோல் குலாப்ஜாமுன் என்ற பிரபலமான இனிப்புப் பண்டம் தயாராகி பிரபலமானதும் இவர்களால் தான். பாசந்தி பாதுஷா போன்ற இனிப்பு வகைகளும் அறிமுகமானது அப்பொழுதுதான்.
  • ஐதராபாத் நிஜாம் என்ற பட்டம் அவுரங்கஜேப் காலத்தில் தக்ஷின வைசிராய் என்று இருந்தது. பின்பு தான் நிஜாம் சுதந்திரமாக ஆளத் தொடங்கினார்.
  • தசரா பண்டிகையில் பங்குபெறும் கொண்ட பள்ளி பொம்மைகளை அறிமுகம் செய்து வைத்தவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில்  இருந்து  குடியேறிய இஸ்லாமியப் பெருமக்கள் தான்.
  • இங்கு முகலாயர்கள் பற்றிய தகவல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளோம். நிர்வாக முறையிலிருந்து பல அம்சங்கள் இன்றும் பின்பற்றப்படுகின்றன.  முகலாயர்களை வரலாற்றில் இருந்து எடுத்து விட்டால், இஸ்லாமிய அடையாளங்களை மறைத்து விட்டால், தங்களது கொள்கை வென்று விடும் என்று ஒரு கூட்டம் நினைத்துக் கொண்டிருந்தால்  அத்தீய  திட்டத்தை முறியடிக்க நாம் உண்மை வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும்.

உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்