மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்குக் கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.(நபி மொழி)
இயற்கையில் நாம் காணுகின்ற அனைத்தும் பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. அது தாவர இனமாகட்டும் இன்னபிற உயிரினங்கள் ஆகட்டும். அதுபோல உயரிய படைப்பான மனிதனிலும் நிற வேற்றுமை காணப்படுகிறது. கருப்பு, சிவப்பு, இரண்டிற்கும் இடைப்பட்ட மா நிறத் திலும் நிற மாற்றங்கள் உள்ளன.
அறிவியல் அடிப்படையில் இதற்கான காரணங்களை ஆய்வு செய்யும் போது அறிவியலõளர்கள் சில அடிப்படைத் தரவுகளைத் தருகின்றனர். முதலாவதாக மனித இனம் ஓர் ஆண் பெண்ணிலிருந்து தோன்றியது. பின்னர் அது கிளைகளாகப் பிரிந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில் மனிதர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டனர். அத்தகைய வாழ்வாதாரப் பகுதிகளின் தட்ப வெப்ப நிலைக்கேற்ப மனிதர்களின் தோல் நிறங்கள் மாற்றமடைந்து பின் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மரபணு மூலம் கடத்தப்பட்டது. எனவே நம்முடைய மூல தாய் தந்தையர் எந்த நிறத்தில் படைக்கப்பட்டு இருந்தாலும் பின்னர் அது பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப நிறங்கள் மாற்றமடைந்தன.
ஆனால் இந்த நிற வேற்றுமை தொடக்கத்தில் எவ்விதமான அணுகுமுறையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது என்பது தெரியவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல ஒரு பகுதி மக்கள் இன்னொரு பகுதி மக்களைச் சென்று பார்க்கும் நிலை உருவான போது இந்த நிற வேற்றுமை பேசு பொருளானது. சிவப்பின் கவர்ச்சி மோகமாய் மாறி நம்மை ஆட்டுவிக்கத் தொடங்கியது. மூளையைக் கட்டிப் போட்டு உணர்வைத் தூண்டி விட்டது. விளைவு ‘சிவப்பாய் உள்ளவன் பொய் சொல்ல மாட்டான். கருப்பாய் உள்ளவன் கயவன்’ என்ற மனநிலையை ஏற்படுத்தியது. இன்று பொதுவில் சிவப்பு நிறம் பார்வைக்குக் கவர்ச்சி உடையதாகவும் ஈர்ப்புடையதாகவும் அதே நேரம் கருமை நிறம் சிவப்புக்கு மாற்றமாயும் பார்க்கப்படுகிறது.
இதனால் கருமை நிறத்தை மறைக்க பல தரப்பட்ட இரசாயன கலவைகளை முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு நாங்களும் சிவப்பு தான் என்று அலைந்து திரியும் அவலங்களும் நடக்கத்தான் செய்கிறது. இதற்கு பெண்கள் பலியாகின்றனர். நாமும் சிவப்பைப் பெற்றே தீர வேண்டும் என்ற மன நோய் அவர்களிடம் அதிகரிப்பதைப் பயன்படுத்தி ஆறே வாரங்களில் சிவப்பழகு என்ற அதிவேக விளம்பரங்களும் அரங்கேறியது.
இத்தகைய வீண் போக்குகள் ஒரு புறம் இருக்க உண்மையில் கருப்பு வெறுப்புக்குரியதா? இது குறித்து அறிவியல் கூறுவ தென்ன? நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் ஹெல்த், அமெரிக்கா (National Institues of Health, USA), யுனிவர்சிட்டி ஆப் சான்பிரான் சிஸ்கோ (UC San Francisco), யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா (University of Pennsylvania) இதர ஆய்வுகளின் அறிக்கையின்படி பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மெலனின் இது தோலுக்கு நிறமளிக்க கூடிய ஒரு நிறமி (pigment). மெலனின் என்ற சொல் மெலனோஸ் என்ற கிரேக்க மொழியில் இருந்து உருவானது. இந்த மெலனின் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் தோலின் மேற்புறம் காணப்படும் மெலனோசைட் என்ற செல்களினால் சுரக்கப்படுகின்றது. இது மனிதர்கள், அனைத்து பாலூட்டி இனங்களிலும், தாவரங்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றிலும் பரவலாகக் காணப்படுகிறது.
இத்தகைய மெலனின் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது:
யூமெலனின்(eumelanin) இது கருப்பு அல்லது பழுப்பு நிறங்களில் பொதுவாக விலங்குகள், தாவரங்களில் காணப்படுகிறது.
பியோமெலனின்(pheomelanin) இது மஞ்சள் அல்லது சிவப்பு.
அலோமெலனின்(allomelanin) இது தாவரங்களில் காணப்படுகிறது.
முதலில் கூறியதைப் போல வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மனிதர்களுக்குச் சூரிய கதிர்வீச்சுத் தாக்கத்தால் மெலனின் அதிகம் சுரக்கும். இதனால் தோல் கருமை நிறமுடையதாய் மாறும். அதே நேரம் சூரிய வெளிச்சம் குறைவான பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு மெலனின் குறைவாய்ச்சுரக்கும். இதன் காரணமாகத் தோல் சிவப் பாய்க் காட்சியளிக்கிறது.
மெலனின் நம்முடைய தோலில் மட்டுமல்ல முடி, கண் கருவிழி, மூளையின் சில பகுதிகள், அட்ரீனல் சுரப்பி, காதின் உட்புறங்கள் ஆகிய வற்றிலும் காணப்படுகிறது.
மெலனின் வெறும் நிற மாறுதலை மட்டுமல்ல நம் உடலுக்குப் பல நன்மைகளை விளைவிக்கக் கூடியதாக விளங்குகிறது என்பதை அறிவியல் கண்டறிந்துள்ளது. அதைப் பற்றி விளக்கமாய் காண்போம்.
1. சூரியனின் புறஊதாக் கதிர்களால் சுரக்கும் இந்த மெலனின் தோலின் மேற்புறம் கவசமாய் நின்று மேற்கொண்டு புறஊதாக் கதிர்கள் தோலை ஊடுருவி உடலுக்குள் செல்லாமல் தடுக்கிறது. இதனால் தோலின் அடிப்பாகத்தில் உள்ள கொலாஜென்(collagen), எலாஸ்டின்(Elastin) இழைகளைப் பாதுகாக்கிறது. கொலாஜென் (collagen) தோலுக்கு வடிவத்தையும் அதற்கு ஆதரவாகவும் விளங்குகிறது. எலாஸ்டின்(உடூச்ண்tடிண) தோலுக்கு நெகிழ்வு தன்மையைக் கொடுக்கிறது. இதனால் மெலனின் தோலின் அடிப்படைப் பண்புகளைக் கட்டியமைக்கும் வேலையைச் செய்கிறது.
2. மெலனின் குறைவாய்ச் சுரக்கும் தோல்களில் சூரிய வெப்ப தாக்கத்தால் தோலில் அழற்சி உண்டாகிறது. கருமை நிறத் தோலுடைய மனிதர்களுக்கு மெலனின் உற்பத்தி அதிகம் இருப்பதன் காரணமாக புறஊதாக் கதிர்களைக் கிரகித்துக் கொள்கிறது. எனவே அழற்சி ஏற்படுவது குறைவு. மேலும் வயதான தோற்றதை ஏற்படுத்தும் தோல் சுருக்கங்களையும் அது தடுக்கிறது.
3. இன்றைய காலச் சூழ்நிலையில் காற்றில் பல விதமான மாசுக்களும் இரசாயனங்களும் கலந்து சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாசுக்கள் பல வழிகளில் உடலுக்குள் செல்கின்றன. அதிலும் குறிப்பாக தோலின் மூலமும் ஊடுருவுகின்றன. இதனால் DNA பாதிப்புக்குள்ளாகிறது. இத்த கைய மாசுக்களை மெலனின் தடுக்கிறது என்பதை நாம் அறிவோமா? இது எத்தகைய அரிய பேறு.
4. பொதுவில் நமது தோலின் மூலம் தினசரி 300 முதல் 400 மிலி அளவிலான நீர் ஆவியாகிறது. இந்த ஆவியாதல் மூலம் உடலின் சராசரி வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது. அதே நேரம் அதிகப்படியான நீர் ஆவியாகி வெளியேறும் போது சருமம் வறண்டு போகும். மெலனின் அதிகப்படியான ஆவியாதலைத் தடுத்து தோலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. இதனால் சருமம் வறண்டு போவதிலிருந்தும் நீர்த்துப் போவதிலிருந்தும் காக்கிறது. மெலனின் குறைவாய்ச் சுரக்கும் தோலுடையவர்களுக்கு நீர் ஆவியாவது அதிகமாவதால் வறட்சி ஏற்பட்டு அதிகத் தாகமும் தூண்டப்பட்டு விரைவில் சோர்வும் ஏற்படும்.
5. பல்வேறு சமயங்களில் உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது அந்தக் காயங்களை ஆற்றுவதில் மெலனின் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில ஆய்வுகளின்படி மெலனின் கெராடினோசைட்(ஓஞுணூச்tடிணணிஞிதூtஞு) செல்களை ஊக்கப்படுத்தி காயம் ஏற்பட்ட பகுதிக்கு அவற்றை விரைந்து அனுப்பி வெட்டு ஏற்பட்ட பகுதியை மூடவும் இதனால் கிருமிகள் தொற்றா வண்ணம் தடுத்து காயங்கள் விரைந்து குணமாகவும் வழி வகை செய்கிறது.
6. காயம் ஆற்றுவதில் இன்னொரு முக்கிய அம்சமான காயம் ஏற்பட்ட பகுதிக்கு ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் கடத்திக் கொண்டு செல்லும் புதிய இரத்த நாளங்களை உருவாக்கும் பணியை இந்த மெலனின் செய்கிறது.
7. காயங்கள் ஏற்படும் போது வீக்கம் உண்டாகும். அதிகப்படியான வீக்கம் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் காயங்கள் ஆற நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். மெலனின் வீக்கத்திற்குக் காரண மான சைடோக்கின்(cytokines) என்ற புரதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு அதன் மூலம் வீக்கம் அதிக மாவதைத் தடுக்கிறது.
8. காயங்கள் ஆறும் போது தோலில் வடு ஏற்படும். மெலனின் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாலும் சிதிலமடைந்த செல்களை மறு உற்பத்தி செய்வதினாலும் கருமை தோலுøடயவர்களுக்குக் கவனிக்கத்தக்க வடுக்கள் தோன்றுவதில்லை.
9. காதின் உட்புறத்தில் கோக்லியா (cochlea) என்னும் பகுதியில் காணப்படும் மெலனின் செவிப்புலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்காந்த அலைகளினாலும் புறஊதாக் கதிர்களாலும் காதின் உட்புறம் பாதிப்படைவதிலிருந்து மெலனின் பாதுகாக்கிறது.
10. அல்பினிசம்(ச்டூஞடிணடிண்ட்) என்பது ஒருவ ருக்கு மெலனின் குறைவாக இருப்பதால் ஏற்படும் கோளாறாகும். இத்தகையவர்கள் வெளிர் தோல், வெள்ளை முடி, நீல நிறக் கண்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
11. மெலனின் கண்களின் கருவிழிக்கு கருமை நிறத்தைக் கொடுப்பது மட்டுமல்ல கண்களின் விழித்திரையில் புறஊதாக் கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கவும் செய்கிறது, கருமை நிறமல்லாத மற்ற நிறமுடைய கண்களைக் கொண்டவர்களுக்கு மெலனின் குறைவாய்ச் சுரப்பதால் இந்த இயற்கைத் தடுப்பு குறைவு. எனவே இத்தகை யோர் மருத்துவர்களின் ஆலோசனையோடு அதற்குரிய கண்ணாடிகளை அணிவது அவசியம்.
12. சூரியனின் புறஊதாக் கதிர்களால் தோலில் காணப்படும் கொழுப்புப் பொருள் மாற்றமடைந்து வைட்டமின் Dயாக (VitaminD) மாறுகிறது. இந்த வைட்டமின் ஈ கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றைச் செரிக்கப்பட்ட உணவிலிருந்து கிரகித்துக் கொண்டு எலும்புகளுக்கு வலுச்சேர்க்கிறது. மெலனினால் அரிய பல நன்மைகள் இருப்பினும் சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் தடுப்பதால் வைட்டமின் D தயாரிப்பை அது குறைக்கிறது.
நிற வேற்றுமையை ஏற்படுத்தும் இந்த மெலனின் பல நன்மைகளை அளிப்பது உண்மையே. இறைவன் சிவப்பு நிறமுடையவர்களுக்கு மெலனின் குறைபாட்டைச் சரிசெய்ய வேறு சில நன்மைகளை உடலில் வழங்கியிருக்கக்கூடும். வருங்காலத்தில் அறிவியல் அதனைக் கண்டறியக்கூடும். நாம் இங்கு விளங்கிக்கொள்வது என்னவென்றால் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வு என்ற பேதமை பாராட்டலாகாது.
சிவப்பு சிறப்பானது என்றோ கருப்பு வெறுக்கத்தக்கது என்றோ கருதலாகாது. நிற வேற்றுமை என்பது ஓர் அடையாளமே அன்றி அது சம்பந்தப்பட்டவரின் பண்பைக் குறிக்கும் குறியீடு அல்ல.
‘வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற் றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன’. (திருக்குர்ஆன் 30:22)