மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பாளையங்கோட்டையில் பக்கீர்கள்
வரலாற்றாய்வாளர் செ.திவான், 1-15 அக்டோபர் 2025


இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பக்கீர்கள் 5

 

மேஜர் வெல்ஸ் நீதிபதி ஜார்ஜ் ஸ்ட்ராட்டனுடன் கலந்தாலோசித்தார். கம்பெனி அரசு சமயத் துறவிகள் அனைவரைப் பற்றியும் விசாரிக்கச் சுற்றறிக்கை அனுப்பியிருந்ததை மாவட்ட நீதிபதி காண்பித்தார். முஸ்லிம் பக்கீர்கள் பாளையங்கோட்டை இராணுவக் குடியிருப்புகளுக்குள் நுழைந்துவிட்டதால், கர்னல் வெல்ஸ் அச்சம் கொண்டார். மூத்த இராணுவ, சிவில் அதிகாரிகளுடன் விவாதித்து ஐரோப்பியர் அனைவரும் பாளையங்கோட்டையை விட்டு உடனே வெளியேற வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.

படை வீரர்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதே சிறந்தது என ஸ்ட்ராட்டன் கருதினார். கர்னல் வெல்ஸ் அவர்களது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, மூத்த இந்திய அதிகாரிகள் இருவரை நெல்லை நகரத்திற்குச் சென்று வருமாறு பணித்தார். ஓர் அதிகாரி போக மறுத்ததன் மூலம் வெல்ஸ் தனது ஐயத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.

450 முஸ்லிம் வீரர்கள் பணிநீக்கம்

இதற்கிடையில் நவம்பர் 19ஆம் நாள் மேஜர் வெல்ஸ் 450 முஸ்லிம் வீரர்களைப் பணியிலிருந்து நீக்கியும் 20 இந்திய அதிகாரிகளைச் சிறைப்படுத்தியும் படையைக் கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருப்பதாக அறிவித்தார். ஆளுநரும் அரசும் வெல்ஸின் நடவடிக்கையை ஏற்கவில்லை. வெல்ஸின் அதிரடி  நடவடிக்கை  அவப்பெயரைக் கொண்டு வந்ததாகக் கருதி அரசு அவரை பீதியாளர் எனக் கண்டித்தது. (முற்கூறிய வெல்ஸின் 310 பக்கங்களைக் கொண்ட நூலில் அதனை விரிவாகக் காணலாம்).

இதுபோன்ற பீதி அவமானப்படத்தக்கது, அடிப்படையற்றது எனவும் அரசு தெரிவித்தது. நியாயமான காரணமின்றி, போதுமான முகாந்திரமில்லாது, தேவையான முன் விசாரணை ஏதும் இல்லாமல் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் எடுத்ததற்காக புனித ஜார்ஜ்  கோட்டையிலிருந்த  இராணுவ நீதிமன்றத்தால்  மேஜர்  வெல்ஸ்  1807 பிப்ரவரி மாதம் விசாரணை செய்யப்பட்டார். நம்பிக்கையின்மையையும் ஒற்றுமையின்மை யையும்  ஏற்படுத்தக்கூடியதாக  அவரது நடவடிக்கை கருதப்பட்டது.

ஆட்களைத் திரட்டும் பணி

ஆங்கிலேயர் படையில் பணியாற்றிய ஷேக் ஹைதர், சிக்கந்தர்கான், ஷேக்தாவூது ஆகியோர் கம்பெனியரால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தென்னிந்தியாவில் இஸ்லாமியப் பக்கீர்களின் இயக்கத்திற்கு ஆட்களைத் திரட்ட அப்துல்லாகான் அயராது பணியாற்றினார். இவர் தீரன் திப்புசுல்தானின் படையில் பணி யாற்றியவர். இவரது ஏற்பாட்டினால்தான் பல வீரர்கள் பக்கீர்கள் வேடத்தில் பல பகுதிகளிலும் நாட்டில் உலா வந்தனர்.

இஸ்லாமியப் பக்கீர்களின் இயக்கம்

இஸ்லாமியப்  பக்கீர்களின்  இயக்கம் தென்னிந்தியாவில் இயங்கியது.  இராணுவத்தில்  ஆள்சேர்க்க திப்புவிற்கு உதவிய அப்துல்லாகான் இதன் பிரதான ஊக்கி. அவரது கட்டுப்பாட்டில் தூதர்கள் பலர் பக்கீர் வேடத்தில் தென்னாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ருஸ்தம் அலீ போன்ற பக்கீர்கள் பொம்மலாட்டக்காரர்களாக நாடு முழுவதும் சுற்றித் திரிந்தவர்கள். இந்தப் பக்கீர்கள் பிராந்திய மன்னர்களை  மீண்டும்  அதிகார பீடத்தில் அமர்த்த, உள்நாட்டுப் படை வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுத்திடத் தூண்டினர். பிரதான எடுத்துக்காட்டு: பக்கீர்களாகிய ஆலம் அலீ ஷா, நூர்கலில் ஷா, இரு முக்கிய படை வீரர்களை பெல்லõரியில் வென்றெடுத்த ஏழாம் படை 2ஆம் பிரிவைச் சேர்ந்த சுபேதார். G P. Chinnayan, Vellore Muthiny, 1982, 20 - 25.

இந்திய இராணுவ வீரர்கள் உணர்ச்சிவசப்படும் வகையில் முஸ்லிம் பக்கீர்கள் பரப்பிய செய்திகள் பற்றி எல்லா ஆங்கிலேய வரலாற்றறிஞர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

முஹம்மது ஜாபர்

திப்புவின் இராணுவப் பணியிலிருந்து கம்பெனி 1ஆம் படையின் 1ஆம் பிரிவில் போர் வீரராகப் பணியாற்றிய முஹம்மது ஜாபர் வேலூர் கோட்டையிலிருந்த மைசூர் இளவரசர்களுக்கும்,   தென்னிந்தியாவில் அரியணையிலிருந்து  அகற்றப்பட்டிருந்த சிற்றரசர்களுக்குமிடையே பிரதம தூதராகச் செயல்பட்டதாக பி.ஏ. அக்னீவ் கருதினார்.

திருச்சி, தஞ்சை, சங்கரன்கோவிலில் பக்கீர்கள்

திருச்சியில்  இஸ்லாமியப்  பக்கீர்கள் அதிக அளவில் ஆர்ப்பரித்துத் திரண்டனர். ஆங்கிலேயருக்கு அச்சத்தை ஊட்டினர். திருச்சி லால்குடியில் பக்கீர் இயக்கத் தலைவர் ஏற்பாட்டில் செயல்பட்ட இயக்கம் தொடர்ந்து செயல்பட்டது. தஞ்சாவூரில் நூர் அலீ என்ற பக்கீர் பறங்கியரை எதிர்த்துப் பரப்புரை மேற்கொண்டார்.  அன்றைய  திருநெல்வேலி மாவட்டம் இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பக்கீர்கள் செயல்பட்டனர். சங்கரன்கோவிலில் பக்கீர் இயக்கப் பணிகளைப் பாராட்டும் வகையில் செய்தவர் முஹையதீன் ஷா ஆவார். இந்தத் தலைவர்களைப் பற்றிய பெயர் விவரத்தை அறிந்தவர் கர்னல் கேம்பல் ஆவார்.

தீன் தீன் தீன்

கர்னல் ஜேம்ஸ் வெல்ஸின் நூலிலிருந்து தீன் தீன் தீன் என்ற முழக்கத்தை அறிய முடிகிறது. தீன் என்றால் இஸ்லாமிய மார்க்கம் என்று பொருள். பக்கீர்களின் முழக்கம் தீன் ஜாகா. தீன் விழித்துக்கொண்டால் என்று பொருளாகும்.

இஸ்லாமிய மார்க்கம் விழித்துக்கொண்டால் இறை மறுப்பாளர்கள் ஓடிவிடுவர். இது 1807 மார்ச் 2இல் விசாரணைக் கமிஷன் முன்பு சாட்சியம் அளித்த சுபேதார் குனோஜிராவ் கூறியது.(2.3.1807 திங்கட்கிழமை சுபேதர் குனோஜிராவ் அளித்த சாட்சியத்தின் போது கூறியது முற்கூறிய கர்னல் வெல்ஸ் நூல், சென்னை பக்கம் 112)

பாளையங்கோட்டையில்  பக்கீர்கள் எழுப்பிய முழக்கம், பள்ளிவாசல்களில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பச்சைக் கொடிகளைப் பறக்கவிட்ட பாங்கு, விடுதலை வேட்கையால் அன்றோ! முஸ் லிம்கள் திருக்குர்ஆன் காட்டிய வழியில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் போதித்த வழி முறைகளை நூற்றுக்கு நூறு சரிவரப் பின்பற்றினால் எல்லாம் வல்ல இறைவன் அவர் களை என்றும் பாதுகாப்பான் என்பது உறுதி.

மார்க்கத்தினை மனம்போன போக்கில் செல்லாமல் முந்தைய தலைமுறையினர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தங்கள் இன்னு யிரைத் தந்து தீனைக் காப்பாற்றியுள்ளனர். அந்த தீனை (மார்க்கத்தை) முழுமையாகக் காப்பாற்ற வேண்டியது அனைவரது பொறுப்பாகும். அதுவே இந்த நாட்டின் விடுதலைக்காக இன்னுயிர் தந்து சிறையில் வாடிய, நாடு கடத்தப்பட்ட, நல்ல உள்ளங்கொண்ட பக்கீர்களுக்கு நாம் காட்டும் மரியாதையாகும். நாளெல்லாம் அவர்களது செயல்களை நாம் நாட்டுக்குச் சொல்வோம்.


நிறைவு


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்