மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்திய நீரோ
நஸ்ரத் ரோஸி, 1-15 அக்டோபர் 2025


இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் அரசர்கள் அரக்கர்கள் போலவும் மக்களை வதைத்துக் கோயில்களை இடித்துப் பொக்கிசங்களை அபகரித்து இந்திய கலாச்சாரத்தையே நாசப்படுத்தியது போலவும் இந்துத்துவவாதிகள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் வருகிறார்கள்.

கஜினி முஹம்மது, முஹம்மது பின் துக்ளக், அலாவுதீன் கில்ஜி, இப்ராஹீம் லோடி ஆகியோர் மீதிருக்கும் வஞ்சகத்தை விட அவர்களுக்கு முகலாயர்கள் மீது தான் அதீத ஆத்திரமும் கோபமும் இருக்கிறது. முகலாயர்களிலும் ஔரங்கஜேப் மீது தான் கட்டுக்கடங்காத வெஞ்சினம் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

நிலவறையில்  பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்து பூரி ஜகன்னாத் கோயிலின் புனிதத்தைக் களங்கப்படுத்திய பிராமணர்களைக் கடுமையாகத் தண்டித்தார் என்பதுதான் அவர்களது கோபாவேசத்திற்குக் காரணமும் கூட! ஆனால் அது ஒருபுறமிருக்க இந்திய வரலாற்றை விரிவாக ஆராய்ச்சி செய்த S.B. பட்டாசார்ஜி தனது புத்தகமான 'Encyclopedia of Indian Events and Dates' (Sterling Publ., Delhi 1995, P.A 20) வில் இந்தியாவை முஸ்லிம் மன்னர்கள் வந்து சூறையாடும் முன்னர் இங்கே ஆட்சி செய்த ஹர்ஷதேவா என்ற கஷ்மீரை ஆண்ட அரசனைத் தான் ‘இந்திய நீரோ’ எனக் குறிப்பிடுகிறார்.

அதற்குக் காரணமாக அவர் கூறுவது, ‘புத்த, சமணக் கோயில்களிலுள்ள பொக்கிஷங்களைக் கொள்ளையடிக்கவும் பின் அவற்றை உருத்தெரியாமல்  இடித்துத் தள்ளவும் கஷ்மீரின் அரசன் ஹர்ஷதேவா ஓர் அமைச்சகத்தை அமைத்து அதற்கு பிரத்யேகமாக ஓர் அமைச்சரையும் அவருக்குக் கீழ் ஒரு படையையும் வைத்திருந்தார்’ என அன்றைய கால புலவரான கல்ஹனர் தனது ராஜதரங்கினியில் பதிவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களை  என்னவெல்லாம்  செய்தார்கள் என நமக்குப் பாடம் கற்பிக்கின்றனரோ அதைத் தொடங்கி வைத்தது கஷ்மீரின் இந்து மன்னன் தான் என்றும், 13ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களுடைய வருகை இங்கே வரும் முன்னரே தனது ஆடம்பரச் செலவுகளுக்குப் புத்த, இந்துக் கோயில்களைக் கொள்ளையடிக்கலாம் என 11ஆம் நூற்றாண்டிலேயே வழிகாட்டிச் சென்ற கொடூரன் ஹர்ஷதேவன் என்பதை ஆணித்தரமாகத் தனது புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

1034இல் மஹ்மூதின் மகன் மஸூத் கஸ்னாவியுடைய போக்குவரத்து கஷ்மீருக்கு ஹர்ஷதேவன் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது.  இஸ்லாமியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்த ஹர்ஷதேவன் பன்றி மாமிசம் சாப்பிடக்கூடிய இந்துவாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சியாளர் களிடம்  தனது வாலை ஆட்டவில்லை. மாறாக அவர் தனது சொந்த மதம் சார்ந்த கோயில்களையே  கொள்ளையடித்தும் இடித்தும் வந்தார். அவரால் மிச்சம் விடப்பட்ட கோயில்கள் என சுமார் நான்கு மட்டுமே இப்போது நம்மால் கணக்கெடுப் பின் கீழ் கொண்டுவரமுடிகிறது. அவருடைய தலைநகராக இருந்த ஸ்ரீநகராவில் ஒரு கோயிலைக் கூட மிச்சம் வைக்காமல் கொள்ளையடித்தார். ஹர்ஷதேவா, துருக்கியருடன் இவர் கொண்டிருந்த நட்பின் காரணமாக இவரை துருக்ஷா என்று கூட அழைக்கப்பட்டார் (ராஜ தரங்கினி பக்கம் 7:11-49)

கல்ஹனருடைய வம்சத்தார் ஹர்ஷதேவாவின் லோஹரா அரசுக்கு ஆஸ்தான எழுத்தர்களாக இருந்தவர்கள், கல்ஹனரின் தந்தை சம்பகன் ஹர்ஷதேவாவின் அரசவையில் எழுத்தராக இருந்து ராஜதரங்கினியை எழுதத் தொடங்கினார். இறுதியில் அரசர்கள் பற்றிய அந்த வரலாற்றுக் குறிப்பேட்டினை கல்ஹனர்தான் பூர்த்தி செய்தார். அந்த வகையில் ஹர்ஷதேவாவின் ஆட்சியில் மண்ணுக்குக் கூட வரி விதிக்கப்பட்டு மக்கள் கடும் அல்லலுக்கு ஆளானார்கள் என்றும், ஹர்ஷதேவாவின்  ஆடம்பரமான  செலவு களை ஈடு செய்ய முடியாமல் அரச இயந்திரம் தடுமாறியது என்றும் அதனைச் சரி செய்வதற்காக எல்லா கோயில் பொக்கிசங்களையும்  கொள்ளையடிப்பதும்  பின் அவற்றை இடித்துத் தள்ளுவதுமாக இருந்த இந்து மன்னன் ஹர்ஷதேவனை இந்திய நீரோ என வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக  இந்திய  தொல்லியல் ஆராய்ச்சியாளர் ரோமிலா தாப்பர் வழியாக ராம் புன்யானி போன்ற வரலாற்றாய்வாளர்கள் கூறுவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் பள்ளிப் பாடப் புத்தகங்களிலோ வேறு வரலாற்று நூல்களிலோ இவை நமக்கு போதிக்கப்பட்டிருக்காது. அப்படி ஒன்றிரண்டு இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் துருக்கியர்களுக்குத் தன் அரசவையில் நிரந்தர இடம் கொடுத்து வைத்திருந்த காரணத்தால்  அவர்களது யோசனைப்படியே  அவர் கோயில்களை இடித்து கொள்ளையடித்தார் என வன்மத்தைக் கக்கி எழுதி வைத்திருப்பார்கள்.

நாம் பெறும் தரவுகளைப் பிறருக்கு ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வதன் மூலம் இந்த வரலாறு சமூகப் புழுதியில் அடித்துச் செல்லப்படாமல் காப்பாற்றலாம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்