அண்மையில் நடந்து முடிந்துள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணித் தலைவர்களே எதிர்பாராத வண்ணம் அக்கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் அக்கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறியிருந்தன. அந்தக் கருத்துக் கணிப்புகளிலும் பாஜக கூட்டணி அதிகபட்சமாக 165 இடங்களைக் கைப்பற்றும் என ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்திருந்தது.
ஆனால் கருத்துக் கணிப்புகளையும், பாஜக கூட்டணித் தலைவர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தினந்தோறும் அங்குள்ள கள நிலவரத்தை எழுதி வந்தது. அதில் அதிக அளவில் பெண் வாக்காளர்களின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு இருப்பதாகவே தெரிவித்திருந்தது. எனவே பாஜக கூட்டணியின் வெற்றி எதிர்பார்த்ததுதான். ஆனால் வெற்றி விகிதம் தான் எதிர்பார்க்காதது.
வாக்கு விழுக்காடு இடங்கள்
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள், விழுக்காடு, பெற்ற இடங்கள், அதே போல் கீஒஈ கூட்டணி பெற்ற வாக்குகள், விழுக்காடு, பெற்ற இடங்கள் ஆகியன கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டணி பெற்ற வாக்குகள் விழுக்காடு இடங்கள்
பாஜக கூட்டணி 2,33,83,288 46.56 202
RJD கூட்டணி 1,85,89,587 37.94 35
வித்தியாசம் 47,93,701 08.62 167
மேற்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து பாஜக கூட்டணிக்கும் கீஒஈ கூட்டணிக்கு இடையேயுள்ள வாக்கு வித்தியாசம் 8.62 விழுக்காடே! இந்த 8.62 வாக்கு வித்தியாசமே பாஜக கூட்டணிக்கு 91 விழுக்காடு வெற்றியைத் தந்துள்ளது.
2020 தேர்தல்
2020ஆம் ஆண்டு அந்த மாநிலத்திற்கு நடை பெற்ற தேர்தலில் (அதாவது கடந்த தேர்தல்) இக்கூட்டணிகள் பெற்ற வாக்குகள் வாக்கு விகிதம், பெற்ற இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி பெற்ற வாக்குகள் விழுக்காடு இடங்கள்
பாஜக கூட்டணி 1,57,01,226 37.26 125
RJD கூட்டணி 1,56,86,458 37.23 110
வித்தியாசம் 1,12,768 0.03 15
மேற்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கீஒஈ கூட்டணி வெறும் 0.03 வாக்கு விழுக்காடு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளின் விழுக்காடு 37.26. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வாக்குகளின் விழுக்காடு 46.56. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட, இந்தத் தேர்தலில் அக்கூட்டணி 9.30 விழுக்காடு வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. RJDகூட்டணி கடந்த தேர்தலை விட 0.61 விழுக்காடு வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. அதாவது கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற அதே விழுக்காடு வாக்குகளை கிட்டத்தட்ட இந்தத் தேர்தலிலும் பெற்றுள்ளது.
பாஜக கூட்டணி வெற்றியின் பின்னணி
ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் முதல்வர் நிதிஷ்குமார் தேர்தல் பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பெண்கள் சுய தொழில் செய்வதற்காக ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ. 10,000 டெபாசிட் செய்தார். இதுவே அக்கூட்டணிக்கு பெண்கள் பெருமளவில் வாக்களித்ததற்குக் காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவர்களது கூற்றுக்கு வலுச் சேர்க்கும் வகையில், இந்தத் தேர்தலில் பெண்கள் ஆண்களை விட 10 விழுக்காட்டிற்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். தேர்தல் பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இப்படி இலவசம் வழங்கியதைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே அறிவித்த திட்டத்தைத் தான் அரசு செயல்படுத்துகிறது என்று கூறிவிட்டது. எதிர்க் கட்சிகளும் பெருமளவு எதிர்க்கவில்லை.
மேலும் பாஜக கூட்டணி தனது தொகுதிப் பங்கீட்டை மிகவும் சுமூகமாக முடித்துக் கொண்டது. எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் (அதாவது முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி) கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களையே கைப்பற்ற முடிந்தது. நடந்த முடிந்த தேர்தலில் லோக் ஜனசக்திக் கட்சி முழுமையாகத் தன்னை பாஜக கூட்டணியில் இணைத்துக் கொண்டது. தலித்களைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்ற இக்கட்சியின் முழுமை யான ஆதரவு, பாஜக கூட்டணிக்கு மேலும் வலுச் சேர்த்தது. பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கியது, பெண்களின் வாக்கு விழுக்காடு அதிகரித்தது. கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்பட்டது ஆகிய அம்சங்கள் பாஜக கூட்டணியை இமாலய வெற்றிக்கு இழுத்துச் சென்றுள்ளது.
RJD காங்கிரஸ் கூட்டணி
இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடியவே இல்லை. 12 தொகுதிகளில் இக்கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து கூட்டணி வேட்பாளர்களே போட்டியிட்டனர். இதனை நட்பு ரீதியிலான போட்டி என அவர்கள் அழைத்துக் கொண்டனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு கூட்டணியில் ஓர் இடம் கூட ஒதுக்கப்படவில்லை. அதனால் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இத்தனைக்கும் ஜார்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தனக்கான இடங்களை சற்றுக் குறைத்துக் கொண்டு, சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இக்கூட்டணியின் இந்தப் படுதோல்விக்குக் காங்கிரஸ் தான் காரணம் என சில பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது சரியல்ல.
RJD அதிக அளவில் இடங்களைப் பெற்றிருந்தால், இந்தக் கருத்து சரியானதாக இருந்திருக்கும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. இந்தக் கூட்டணியே தோல்வியைச் சந்தித்திருக்கும் போது, ஒரு கட்சியை மட்டும் குறை கூறுவது சரியல்ல. எனினும் பாஜக கூட்டணியின் பரப்புரைக்கு RJD கூட்டணியால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பது மட்டும் உண்மை. மேலும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடப்பதற்கு முதல் நாள் (10.11.2025) டெல்லியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவம் இந்து வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜன சுரதா கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
தேர்தல் ஆணையம்
காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் பாஜக ஆதரவான நிலைப்பாடே காரணம் எனக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். முழுக்க முழுக்க இந்த விஷயத்தில் தேர்தல் ஆணை யத்தை குறை கூறுவது பொருத்தமற்றதாகும்.
இதனையே 18.11.2025 தேதியிட்ட தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தனது தலையங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தீவிர சிறப்புத் திருத்தத்தில்(SIR) பீகாரின் 35 இலட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்று எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூற முடியும் என அந்த நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. இது ஒரு பொருள் பொதிந்த கேள்வியாகும். எனினும் தேர்தல் ஆணையம் பாஜகவின் ஊது குழலாகக் செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது.
இதற்குச் சான்றாக ஏராளமான நிகழ்வுகளை நாம் கூற முடியும். ஆனால் எப்படி ஃபாசிஸ இந்துத்துவ சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோமோ, அதே அளவில் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஜனநாயக முறையில் மக்களைத் திரட்டி போராடுவதே இதற்கான ஒரே வழியாகும். அதனைத்தான் எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும். அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ் அதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ்
இன்னமும் காங்கிரஸ் தலைவர்களிடம் பெரிய அண்ணன் போக்கு நிலவுகிறது. இந்தியா கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அக்கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
சற்று நீக்குப் போக்குடன் நடந்து கொண்டு அனைத்துக் கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மூத்த தலைவர்களின் ஆதிக்கம் காங்கிரஸ் கட்சியில் மிக அதிகமாக இருக்கிறது. இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்கட்சி மோதல்கள் இருக்கின்றன. இவற்றைக் களைய காங்கிரஸ் தலைவர்கள் முன் வர வேண்டும்.
இந்திய விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் கட்சி, தற்போது கோலோச்சுகின்ற ஃபாசிஸ சக்திகளை எதிர்த்துக் களம் காண்பதிலும் முன்னணியில் நிற்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை அக்கட்சி செய்யõவிட்டால் வரலாறு அதனைப் பழிக்கும். காங்கிரஸ் தன்னை சுய பரிசோத னைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது. அதுவே நமது கருத்துமாகும்.
உவைஸியின் நிலைப்பாடு
உவைஸின் தலைமையில் இயங்கும் மஜ்லிஸே இத்திகாத்துல் முஸ்லிமீன் கீஒஈ கூட்டணியில் சேரவே முயற்சிகள் மேற்கொண்டது. இது குறித்துத்தான் கீஒஈயின் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு எழுதிய கடிதத்திற்கு அவர் பதிலளிக்கவில்லை. எனவே தனது கட்சி கடந்த தேர்தலைப் போலவே தனித்துப் போட்டியிடும் என அவர் அறிவித்து 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். தனித்துப் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதுவும் முஸ்லிம்கள் 47 விழுக்காடு வசிக்கின்ற சீமாஞ்சல் பகுதியிலேயே அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறையும் அப்படியே.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்து அதன் மூலம் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகாத வண்ணம் அவர் 12 தொகுதிகளிலேயே தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மஜ்லிஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடாத மற்றத் தொகுதிகளிலுள்ள (அதாவது 231 தொகுதிகளில்) முஸ்லிம்கள் கீஒஈ கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். எனவே உவைஸி தனித்துக் களம் கண்ட முடிவால் கீஒஈ கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உண்மை.
சில முஸ்லிம்கள் உவைஸியை பாஜக வின் ஆ டீம் என வர்ணித்து வலைதளங்களில் எழுதுகின்றனர். அது சரியானது அல்ல. அவர் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். தெலுங்கானாவில் மட்டுமல்ல பீகார், உ.பி, மகாராஷ்ட்டிரா, குஜராத் எனப் பல வட மாநிலங்களில் அக்கட்சிக்குக் கிளைகள் உள்ளன. அவர் நாடாளுமன்றத்திலும், பொது வெளிகளிலும் முஸ்லிம்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். எனவே அவருக்கு வட மாநிலங்களிலுள்ள முஸ்லிம்களின் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் ஆதரவு அளிக்கின்றனர். அம்மாநிலங்களில் வேறு முஸ்லிம் அரசியல் கட்சிகள் சரியான முறையில் செயல்படாத நிலையில், உவைஸி அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றார்.
உவைஸியின் மஜ்லிஸே இத்திகாத்துல் முஸ்லிமீன் கட்சியை இந்தியா கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆனால் வடமாநிலங்களில் உள்ள எந்த ஒரு மதச்சார்பற்ற கட்சியும், முஸ்லிம் அரசியல் கட்சிகளைத் தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டால் தங்களுக்குப் பெரும்பான்மையினரான இந்துக்களின் வாக்குகள் கிடைக்காது என அஞ்சுகின்றனர். நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், வடமாநில இந்து மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் உருவாவதையோ, முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெறுவதையோ விரும்பவில்லை என்பதே யதார்த்தமான நிலையாகும்.
இந்திய விடுதலைக்கு முன்னர், வட மாநில முஸ்லிம்கள் பெரும் செல்வாக் கைப் பெற்றிருந்த அகில இந்திய முஸ்லிம் லீக், விடுதலைக்குப் பின்னர் வலுவிழந்து போனதும், அதன் பின்னர் தோன்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கு காலூன்ற முடியாமல் போனதற்கும் வட மாநில முஸ்லிம்களின் அச்சமே கார ணமாகும். விடுதலைக்குப் பிறகு எந்த ஒரு வலுவான முஸ்லிம் அரசியல் இயக்கமும் வட மாநிலங்களில் தோன்றவில்லை. அண்மைக் காலமாகவே மஜ்லிஸ் கட்சி, குஈகஐ, வெல்பேர் ஃபார்ட்டி ஆகிய முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் வட மாநிலங்களில் செயல்பட ஆரம்பித்துள்ளன. ஆனால் இந்த இயக்கங்களுக்கிடையிலேயும் பரஸ்பர ஒருங் கிணைப்பும், புரிந்துணர்வும் இல்லை.
வடமாநிலங்களிலுள்ள இந்தக் கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவதும், பேசுவதும்சற்றும் பொருத்தமற்றதõகும். இந்துத்துவ சக்திகள் நாடெங்கும் மிக ஆழமாக வேரூன்றி வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில், இந்துத்துவ சக்திகளை சமரசமின்றி எதிர்த்து வருகின்ற இடதுசாரிக் கட்சிகள் வலுவிழந்து வரக் கூடிய சூழ்நிலையில், ஓரளவு மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தீவிரமான நிலைப்பாடு எடுக்கத் தயங்குகின்ற வேளையில், முஸ்லிம் அடையாள அரசியலில் ஒரு பெரும் முஸ்லிம் அரசியல் கட்சி இந்தியாவில் இல்லை என்பதே எனது தீர்க்கமான முடிவாகும். வேறு என்னதான் செய்வது? மதச்சார்பின்மையிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும்.