மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பினையொட்டி அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமய நல்லிணக்கத்தைக் குலைக்கின்ற வகையில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு அனைத்து ஜனநாயக சக்திகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதே நேரத்தில் இந்துத்துவ சக்திகள் தீர்ப்புக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்னையின் தன்மை குறித்து விரிவாக ஆராய்வோம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றப்படுகிறது. இது கடந்த 1920ஆம் ஆண்டிலிருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். குன்றின் அடிவாரத்திலுள்ள முருகன் கோயில் நிர்வாகமே இந்தத் தீபத்தினை ஆண்டுதோறும் ஏற்றி வருகிறது. அது போல் இந்த ஆண்டும். 3.12.2025 அன்று தீபம் ஏற்றப்பட்டது. குன்றின் உச்சியிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகின்ற போது, அடிவாரத்திலுள்ள முருகன் கோயிலிலும் ஏற்றப்படுகிறது.
குன்றின் உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்படுவதற்கு முன்பு, அடிவாரத்திலிருக்கும் முருகன் கோயிலிருந்து உச்சிக்குச் செல்லும் பாதி வழியில் உள்ள ஒரு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இந்தத் தீபத் தூண் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குன்றின் உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்பட்ட பிறகு, அங்குதான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இன்றுவரை அதே நடைமுறை தொடர்கிறது. இந்த ஆண்டு தீபத் திருநாளன்று (3.12.25) தீபம் வழக்கம் போல் ஏற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் கோயிலில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தடை விதித்ததாக இந்துத்துவ அமைப்புகள் செய்கின்ற பரப்புரையில் எள்ளளவும் உண்மை இல்லை.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்து முன்னணி அமைப்பினர், குன்றின் ஒரு பகுதியிலுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள ஒரு தூணில் தீபம் ஏற்ற தங்களை அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பல்லாண்டுகளுக்கு முன்பு அங்குதான் தீபம் ஏற்றப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் அந்த நடைமுறையை மாற்றி விட்டனர் என்றும், எனவே மீண்டும் அந்தத் தூணில் தீபம் ஏற்ற தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக, திமுக அரசுகள் அவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
2014 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி வேணு கோபாலன், பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்ற ஒன்றை மாற்றத் தேவையில்லை. உச்சிப் பிள்ளையார் கோயிலிலேயே தொடர்ந்து தீபத்தை ஏற்றி வரலாம் எனத் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இந்து முன்னணி செய்த மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் பவானி சுப்பாராயன், கல்யாண சுந்தரம் ஆகியோரைக் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புகள் வந்த நேரத்தில் தமிழகத்தில் செல்வி ஜெயலலிதாவும் அவரது இறப்புக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வர்களாகப் பொறுப்பு வகித்தனர். அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு, உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகின்ற நடைமுறையை மாற்ற வேண்டாமென நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளைக்கு சில நாள்களுக்கு முன்னர் இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலிருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென்று ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மனு தாரரின் கோரிக்கையை ஏற்று அங்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் அவர், தான் மலை மீது ஏறி சிக்கந்தர் தர்காவையும் அருகிலுள்ள தீபத் தூணையும் பார்த்ததாகவும், அதில் தீபம் ஏற்றலாம் என்றும், இதனை நிறைவேற்ற கோயில் நிர்வாகமும், மதுரை மாநகரக் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏற்கனவே 2017ஆம் ஆண்டு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பைக் கண்டு கொள்ளவில்லை. அதனை ரத்து செய்யவும் இல்லை. ஏனெனில், இரு நீதிபதிகள் அளித்த அந்தத் தீர்ப்பை இந்த ஒற்றை நீதிபதியால் ரத்து செய்ய முடியாது. மேலும் நீதிபதி சுவாமிநாதன் இந்தப் பிரச்னை குறித்து தமிழக அரசின் கருத்தையோ அல்லது தர்கா நிர்வாகத் தின் கருத்தையோ கேட்கவில்லை.
உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரும் கள ஆய்வுக்குச் செல்வது மரபல்ல. உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் தான் கள ஆய்வுக்குச் செல்வர். அல்லது ஒரு வழக்கறிஞர் குழு அமைத்துப் பிரச்னைக்குரிய இடத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடுவர். ஆனால் இந்தப் பிரச்னையில் அனைத்து வரம்புகளையும் மீறி நீதிபதி சுவாமிநாதன் மலை ஏறிச் சென்று பார்வையிட்டு நில அளவைத் தூணை தீபத் தூண் என்று கூறி தனது தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இது இந்தப் பிரச்னையில் அவர் கொண்டிருக்கும் அசாதாரணமான அக்கறையைக் காட்டுகிறது. ஒரு நீதிபதி திறந்த மனதுடைய வராக இருக்க வேண்டும். எந்த விதமான முன்முடிவும் இல்லாமல் தனக்கு முன்னர் வைக்கப்பட்டுள்ள சான்றாதõரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்தப் பிரச்னையில் அவர் ஒரு முன்முடிவு எடுத்து விட்டு அதற்கு ஏதாவது சான்று அகப்படுமா என்று மலை யேறி ஒரு தவறான சான்றை தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் கார்த்திகை தீபம் குன்றின் உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படுகிறது. எதற்காக அந்த இடத்தை விட்டு விட்டு வேறொரு தூணில் தீபம் ஏற்ற வேண்டும்? அந்தத் தூணின் அருகே சிக்கந்தர் தர்கா இருக்கிறது என்பதற்காகவே அப்படிப்பட்ட ஒரு கோரிக்கையைத் தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அடிவாரத்திலிருக்கும் முருகன் கோயிலின் கர்ப்பக்கிரகத்திலிருந்து மிக நேராக நேர்கோட்டில் உச்சிப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. எனவே அதுதான் பொருத்தமான இடம் என்று கருதி அங்கு தீபம் ஏற்றப்படுகிறது. இந்து சமயப் புராணங்களின் படி முருகனின் அண்ணன்தான் பிள்ளையார். எனவே அங்கு தீபம் ஏற்றப்படுவதையே முருகப் பெருமான் விரும்புவார். சிக்கந்தர் தர்கா அருகே தீபம் ஏற்றப்படுவதை ஒரு போதும் விரும்பமாட்டார்.
ஆனால் இந்து முன்னணியினர் அங்கு தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வம்பு செய்வதற்குக் காரணம் அருகிலிருக்கும் தர்காவுக்கு தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. ஏற்கனவே மதுரையில் முருகன் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் ஹெச்.ராஜா, சிக்கந்தர் தர்காவை திருப்பரங்குன்றம் மலையிலிருந்து எடுத்து அதனை கீழே கொண்டு வந்து வேறு எங்காவது வைக்க வேண்டும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி அயோத்தியில் 1948ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜிதில் குழந்தை இராமர் சிலையை வைத்துப் பிரச்னையை ஏற்படுத்தி, பின்னர் படிப்படியாக பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு இறுதியாக 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பாபரி மஸ்ஜிதை இடித்தார்களோ அதே போன்ற ஒரு செயலை திருப்பரங்குன்றத்தில் அரங்கேற்றி சிக்கந்தர் தர்காவை இடிக்கத் திட்டமிட்டு அதற்கான முதல் முயற்சியாக தற்போது தர்காவுக்கு அருகிலுள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்ற முயற்சிக்கின்றனர்.
இந்தச் சதிக்கு ஆதரவாகவே நீதிபதி சுவாமி நாதனின் தீர்ப்பு அமைந்துள்ளது. ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கி விட்டால், அதனை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் கடமை என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை விடவும் சட்ட ஒழுங்கை சீர் குலையாமல் பாதுகாத்துக் கொள்ளவும், சமய நல்லிணக்கத்தைப் பேணவும் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. ஒரு செயல் மிகப்பெரிய பார தூரமான விளைவுகளை ஏற்படுத்துமென்றால் அது குறித்து ஒரு நியாயமான அரசு யோசிக்கவே செய்யும். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்படிப்பட்ட நிறைவேற்றப்பட முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது என விமர்சனம் செய்தார். இன்று வரை அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்ற குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆகிய மூவரும் இடம் பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஒன்றிய அரசு அதனை ஏற்கவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய அரசின் ஓர் அமைச்சர் என்று திருத்தம் செய்தது.
தமிழகத்தில் திருச்சியில் செயல்பட்டு வரும் சாஸ்தா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எதற்கும் கட்டுப்படவில்லை. பன்னூற்றுக்கணக்கான நீதி மன்ற அவமதிப்பு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் என்று காரணம் காட்டி தமிழக அரசு இந்தத் திருப்பரங்குன்றம் பிரச்னையில் நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றவில்லை என்பதே யதார்த்தமான நிலையாகும்.
நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கினால் சம்பந்தப்பட்ட தனி நபர், அல்லது நிறுவனம் அல்லது அரசு அதனை ஏற்க வேண்டும். ஏற்கவில்லையென்றால் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம். நீதிமன்றம் அதனை விசாரித்து முடிவெடுக்கும். தீர்ப்பு வழங்கிய நீதிமன்றங்களே தாமாக முன்வந்து ஏன் நாங்கள் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்புவதில்லை. இது ஒரு பொதுவான நடைமுறையாகும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் இந்தப் பிரச்னையில் நீதிபதி சுவாமிநாதன் தான் வழங்கிய தீர்ப்பை அரசு நிறைவேற்றியே தீர வேண்டுமென கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்.
தீபம் ஏற்ற வேண்டிய நாளன்று மாலை 5 மணிக்கே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஒரு மணி நேர கால அவகாசம் இருக்கிறது என்று சுட்டிக் காட்டிய பிறகு, மீண்டும் மாலை 6.05 மணிக்கு அதனை விசாரித்து வழக்குப் போட்ட ராம் ரவிக்குமார் நேரடியாகச் சென்று தீபம் ஏற்றவும், அவருக்குப் பாதுகாப்பாக நீதிமன்றப் பாதுகாப்புக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ள தொழில் பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பி வைக்கின்றார். இந்நிலையில் கோயில் முன்பு கூடிய இந்து முன்னணியினர், பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். காவல்துறையின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு படிகளின் வழியாக மலைக்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.
காவல்துறையினர் மிகவும் பொறுமையுடன் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்கின்றனர். நிலைமை மிகவும் மோசமாகி விடுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியாளர் 144 தடை உத்தரவைப் பிறப்பிக்கின்றார். இந்தத் தடை உத்தரவைக் காரணம் காட்டி தீபம் ஏற்ற வந்தவர்களையும், அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த தொழில் பாதுகாப்புப் படை வீரர்களையும் தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். மறுநாள் தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.
அதனை அன்றே விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுகள் சரியானதே எனத் தீர்ப்பளிக்கின்றனர். மீண்டும் மறுநாள் நீதிபதி சுவாமி நாதன் அன்று மாலைக்குள் தீபம் ஏற்ற வேண்டுமென்று உத்தரவிடுகிறார். 144 தடை உத்தரவையும் ரத்து செய்கிறார். ஆனால் அவர் உத்தரவிட்டபடி அன்றும் அதாவது 4.12.25 அன்றும் தீபம் ஏற்ற காவல்துறை அனுமதி வழங்கவில்லை. கார்த்திகைத் தீபத் திருநாள் அன்று தான் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும். மற்ற நாள்களில் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கோயில் நிர்வாகமும் அறிவிக்கிறது. இந்த மிக முக்கியமான ஆகம விதிமுறைகள் கூடத் தெரியாமல்தான் அவர் தீர்ப்பை வழங்கியுள்ளார். ஆத்திரம் அவர் கண்ணையும், கருத்தையும் மறைத்துவிட்டது போலும்.
இந்த விவகாரத்தில் தனி நீதிபதியும் மேல் முறையீட்டினை விசாரித்த இரு நீதிபதிகளும் வழக்கத்திற்கு மாறான முறையில் மிக மிக அவசரமாக விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்னையில் அவர்கள் காட்டியிருக்கின்ற வேகம் நம்மை அதிர்ச்சியுற வைக்கிறது. நீதிபதி சுவாமிநாதன், தீர்ப்பு வழங்கியதோடு நின்று விடாமல் தனது தீர்ப்பு எப்படியும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கருதிச் செயல்பட்டுள்ளார். இது இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத ஒன்றாகும். ஏற்கனவே கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு விட்ட நிலையில் ஏனிந்த அவசரம்?
இந்தப் பிரச்னையில் முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அரசுதான் பிரச்னை செய்கிறது என வலதுசாரி ஆதரவாளர்கள் மின்னணு ஊடகங்களில் பேசி வருகின்றனர். பெரியவர் பழ.கருப்பையாவும் இதுபோல் கருத்து தெரிவித்துள்ளார். இது உண்மை அல்ல. நீதிபதி சுவாமிநாதனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த தமிழக அரசின் வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளின் முன்னிலையில் தர்கா தரப்பின் சார்பில் வழக் கறிஞர் மோகன் ஆஜராகி வாதாடியுள்ளார். ஊடகச் செய்திகளையும், செய்தித்தாள்களை யும் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.
சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழிகள் பலியிடக் கூடாது என்று இந்துத்துவவாதிகள் தொடர்ந்த வழக்கில் தர்கா தரப்பும் ஆஜராகி வாதிட்டு வந்தனர். இன்றைக்குத் தர்காவில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தர்காவின் நடைமுறையில் இருந்த ஒரு பழக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ள நிலையில், எப்போதுமே தீபம் ஏற்றப்படாத நில அளவைத் தூணில் அது தீபத் தூண் என்று சொல்லி அங்கு தீபம் ஏற்ற அதே நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. என்ன விநோதம் இது? முஸ்லிம்களின் பாரம்பர்ய மரபுகளைப் பறிக்கின்ற விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன்னை ஒரு சனாதனவாதி என்றே அறிவித்துக் கொண்டுள்ளார். அவரது பல தீர்ப்புகள் சனாதனக் கொள்கைகளுக்கு ஆதரவாகவே இருந்துள்ளன. எச்சில் இலையில் உருளுகின்ற தீர்ப்பு, மைக்கேல்பட்டி கிராமத்தில் கிறித்தவ உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாணவி உயிரிழந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பு, வேதம் படித்தவன், குடுமி வைத்திருப்பவன் தவறு செய்ய மாட்டான் என மேடைகளில் பேசியது என அவரது சனாதனப் பற்றை விளக்க பல நிகழ்வுகள் உள்ளன. வாசகர்கள் பலர் இதனை அறிந்திருக்கின்றனர் என்ற காரணத்தால் அவற்றைப் பட்டியலிடவில்லை.
தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்னையில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டுள்ளது. என்ன வந்தாலும் சரி, சமாளிப்போம் என்ற ரீதியில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூட தமிழ்நாடு அரசிற்குச் சாதகமாக இல்லாமல் போகலாம். தமிழ்நாடு அரசு இதனை உணர்ந்தே இருக்கிறது.எனினும், திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக ஆக்க விட மாட்டோம் என்ற உறுதிப்பாடு அதன் செயல்பாடுகளில் தெளிவாகத் தெரிகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், அதிலும் குறிப்பாகத் திருப்பரங் குன்றத்து இந்து சமய மக்கள் அரசின் செயல் பாடுகளுக்கு ஆதரவாக நிற்பது ஆறுதல் அளிக்கிறது.