உலகில் உள்ள படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பு மனிதன். ஆனாலும் மனிதன் தவறிழைப்பவனே!
‘ஆதமின் சந்ததிகள் அனைவரும் இரவிலும், பகலிலும் தவறு செய்யக் கூடியவர்களே’ என இறைவன் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள்தான் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக தவறு செய்பவர்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, மனம்திருந்தி வாழ வேண்டும். மனிதர்களில் இந்த வகையினர்தான் சிறப்புக்குரியவர்கள். ஆனால் இதற்கு மாற்றமாக அதிகமானோர் என்ன தவறு செய்தாலும், தான் செய்தது சரி என்று தவறை மறைக்கப் பார்க்கின்றனர். தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்துகின்றார்கள். தவறை ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோரிடம் இல்லை.
தவறை ஏற்றுக் கொள்ளுதல்
தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் வாய்த்து விடாது. இருப்பினும் இந்த உயரிய பண்பை இறைவன் மிகவும் விரும்புகின்றான். நம்மைப் படைத்த இறைவனுக்கு மாற்றமாக ஏராளமான தீய காரியங்களில் ஈடுபடுகின்றோம். அவனது கட்டளைகளுக்கு மாறு செய்கின்றோம். பாவ காரியங்களில் மூழ்கி, உல்லாசமாய் நீந்திக் கொண்டிருக்கின்றோம்.
நாம் செய்த பாவமான காரியங்களுக்காக இறைவனிடம் மன்றாடி பாவ மன்னிப்புக் கேட்கின்றோமா? ‘இறைவா என்னை மன்னித்து விடு’ என்ற ஒற்றை வரியில் நாம் மன்னிப்புக் கேட்பதை விட தன்னுடைய தவறுகளை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். தன் முன்னிலையில் இவ்வாறு தவறுகளை ஏற்றுக் கொள்வதை இறைவன் மிகவும் விரும்புகின்றான்.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் ‘ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்து விடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்’ என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் தவறு செய்திருந்தால் இறைவனிடம் மன்னிப்புக் கேட்குமாறு அறிவுறுத்துகின்றார்கள். ஓர் அடியான் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் அதை மன்னிப்பான் என்று கூறாமல், தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் அதை மன்னிப்பான் என்றும் கூறினார்கள்.
வெறுமனே மன்னிப்புக் கேட்பதை விட செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கோருவது இறைவனுக்கு மிகவும் உவப்பான காரியம் என்பதை விளங்க வேண்டும். இறைவன் நமது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதை விரும்புபவர்கள், செய்த தவறுகள் அனைத்தையும் இறைவன் முன்னிலையில் ஒப்புக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.
பாவ மன்னிப்பின் தலைசிறந்த பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் பாவமன்னிப்பின் தலைசிறந்த துஆ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து, அந்த துஆ நம்மை சுவனத்திற்கே அழைத்துச் செல்லும் என அதன் சிறப்பையும் எடுத்துக் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை’
இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சுவனவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறப்பவரும் சுவனவாசிகளில் ஒருவராக இருப்பார்.
ஒரு சிலர், நல்ல நண்பர்களாய் இருப்பார்கள். திடீரென இருவரும் எதிரும் புதிருமாக மாறி விடுவார்கள். ஒருவர் கிழக்கே சென்றால் இன்னொருவர் மேற்கே செல்வார் எனுமளவுக்கு பகைத் தீ பற்றி எரியும். நேற்று வரையில் நல்ல நண்பர்களாய், ஒரே தட்டில் சாப்பிடுபவர்களாய் இருந்தவர்கள்ஏன் இப்படி..? என்று சிந்தித்துப் பார்த்தால் அதில் ஒருவர் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள முன்வராததே காரணம். செய்த தவறை ஒப்புக் கொள்ளத் தயங்கினால் இரு நண்பர்கள் மட்டுமல்ல, நட்பு நாடுகள் கூட தமக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டு, பிரிந்து சென்று விடும். நல்ல நண்பர்களை நாம் தக்க வைக்க வேண்டுமெனில், நாம் செய்த தவறை சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள முன்வர வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் இதயம்’ என்று கூறினார்கள்.
ஒரு மனிதனிடம் எந்தத் தவறும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தவறை மறைக்கும் தீய குணம் ஒன்று மட்டும் இருக்கும் எனில், வெகு விரைவில் அனைத்துத் தீமைகளும் அவனிடம் குடிகொள்ள ஆரம்பித்துவிடும். ஒருவன் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டால், அவனது உள்ளம் அதை ஏற்க மறுத்து விட்டால் எல்லா தீமைகளும் சர்வ சாதாரணமாகப் புகுந்து அவனை நாசப்படுத்தி விடும்.
மாநபியின் மாண்பு
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காகத் தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள் ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்து பவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்’ (நூல்: புகாரி 2306)
தவறை ஒப்புக் கொள்ளத் தயங்குபவர்கள், அல்லது மறுப்பவர்கள் மனிதர்களிடம் நமது படித்தரம் குறைந்தாலும் கூட, இறைவன் நம்மை உயர்ந்த படித்தரத்தில் வைத்தே பார்க்கின்றான் என்பதை மறக்காதிருக்க வேண்டும். எஜமானனின் அடிமைகளிடம் நம் தகுதிநிலை உயர்வது நமக்குப் பெரிதாக ஒன்றும் பலன் தரப்போவதில்லை. அதுவே அவர்களின் எஜமானனிடம் நம் படித்தரம் உயர்ந்தால் நிச்சயம் நமக்குப் பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும். மறுமையில் நமது கௌரவமும் பாதுகாக்கப்படும் என்பதை விளங்க வேண்டும். இவ்வுலகை விட மறுமையில் தானே நமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
பிறருக்கு இழைத்த தவறுக்காக இவ்வுலகிலேயே அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கோர வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். அவ்வாறு செய்யாவிடில் மறுமையில் நமது நன்மைகள் பறிபோய்விடும், நன்மை இல்லாத பட்சத்தில் அவர்களின் தீமைகள் நம் மீது சுமத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே தவறை ஒப்புக் கொள்ள மறுப்பது, மறுமையில் நமது வாழ்வை நாசப்படுத்தி விடும்.
இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் தவறு செய்தால் அதை இறைவன் முன் ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவே மனிதர்களுக்கு ஏதேனும் தவறு இழைத் திருந்தால் கொஞ்சமும் தாமதிக்காமல் உடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தவறை ஒப்புக் கொண்டு, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்கள் மன்னிக்காமல் இறைவன் ஒருக் காலும் மன்னிக்க மாட்டான்.