மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இஸ்லாமிய போதனைகளின் ஒளியில் அண்டை வீட்டாரின் உரிமைகள்
அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரையை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்தியத் தலைமையகம் வழங்கிய வெள்ளி மேடைக் குறிப்புகள், 1-15 டிசம்பர் 2025


இஸ்லாம்  என்பது  வெறும் வழிபாடு மட்டுமல்ல; மனித ஒழுக்கம், உறவுகள், வாழ்வியல் நிகழ்வுகளையும் நேர்மையான பாதையில் வழிநடத்தும் ஒரு முழுமையான வாழ்க்கை முறை ஆகும். இந்த மார்க்கம், மனிதனை நன்மை செய்ய தனித்து விடாமல், அவனைச் சுற்றியுள்ள மக்களுடன் உறவினர்கள், நண்பர்கள், குறிப்பாக அண்டை வீட்டார் ஆகியோருடன் நன்னடத்தை  காக்க  வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

எந்த மனிதனும் தனிமையில் வாழ முடியாது; அவனுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சி, துயரம், நிம்மதி, பிரச்னைகள் அனைத்தும் அவனைச் சூழ்ந்திருக்கும் மக்களால் ஏற்படுகின்றன. இந்த உறவுகளில் மிக முக்கியமானதும், நுட்பமானதுமான உறவு அண்டை வீட்டாரின் உறவு ஆகும். நம் வீட்டிற்கு அருகில் வசிப்பவர், தினமும் நம் கண்களுக்கு முன் வருபவர், நம் வலது, இடது, மேல்தளம் அல்லது கீழ்த்தளத்தில் இருப்பவர் வெறும் குடியிருப்பாளர் அல்ல; நம் மார்க்கப் பொறுப்புகளின் ஒரு பகுதியாக உள்ளவர்.

அண்டை வீட்டார் என்பது வெறும் ‘அருகில் இருப்பவர்’ என்பதற்கும் மேலான அர்த்தம் உடையவர். அவர் நம் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் பங்குபெறும் ஒருவராக இருக்கிறார். நம் தெருவில், கட்டிடத்தில், அல்லது வாசலுக்கு அருகில் வாழும் அந்த நபர் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளார்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட உலகத்தில் மூழ்கியதால் அண்டை வீட்டாருடனான உறவு வெறும் நலவிசாரிப்புகள், பிரார்த்தனைகள் அல்லது சில சமயங்களில் புகார்கள் என்ற அளவுக்கே சுருங்கிவிட்டது. அன்பு, அக்கறை, பரிவு, ஒருவருக்கொருவர் உரிமைகளை மதிக்கும் உணர்வு ஆகியன மங்கிவிட்டன. ஆகையால் அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து இஸ்லாமிய போதனைகளின் வெளிச்சத்தில் அவற்றின் முக்கியத்துவத்தை  உணர்ந்து  அன்பு, கருணை, மனிதநேயம் நிறைந்த அந்த உயர்ந்த சமூக நிலையை மீண்டும் நிலைநாட்டுவது நம் காலத்தின் அவசியமாகும்.

இஸ்லாம் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, சமூக வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்தும் ஒரு முழுமையான வாழ்க்கை முறை ஆகும். அண்டை வீட்டாருடனான உறவை ஒரு சமூகப் பொறுப்பாக மட்டும் அல்லாமல் வழிபாடு, நம்பிக்கையின் அடையாளமாகவும் உயர்த்தியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் அறிவுறுத்தியதாவது, ‘உங்கள் வீடுகளில் அமைதி நிலவ வேண்டுமானால், உங்கள் அண்டை வீட்டாரின் வீடுகளிலும் அமைதி நிலவ வேண்டும்’.

மேலும் அவர்கள் கூறினார்கள்: ‘உங்களிடம் உணவு இருந்தால், உங்கள் அண்டை வீட்டார் பசியுடன் தூங்கக்கூடாது. நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தால், உங்கள் அண்டை வீட்டார் துன்பத்தில் இருக்கக் கூடாது. அண்டை வீட்டாரின் நிலைமை உண்மையில் உங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பு ஆகும்.

திருக்குர்ஆனின் ஒளியில் அண்டை வீட்டாரின் உரிமைகள்

இந்த சமூக அமைப்பில், அண்டை வீட்டாருடனான நன்னடத்தை முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருக்குர்ஆன், இந்த உறவின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்குகிறது.

‘நீங்கள் அனைவரும் அல்லாஹ்வையே வழிபடுங்கள்;  அவனோடு  எதனையும் இணையாக்காதீர்கள்.  தந்தை,  தாயார் மீது அன்பும் மரியாதையும் காட்டுங்கள்; உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோரிடமும் நன்மையாக நடந்து கொள்ளுங்கள். மேலும், உறவினராகிய அண்டை வீட்டார், அந்நியராகிய அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர் மற்றும் உங்கள் கைவசமுள்ள பணியாளர்கள் இவர்களிடமும் நயமாக, அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, பெருமிதம் கொள்ளும், கர்வம் உடையவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை’ (திருக்குர்ஆன் 4:36)

இந்த வசனம், அண்டை வீட்டாரின் உரிமைகள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. பெற்றோர், உறவினர், வறியவர்கள் ஆகியோருடன் சேர்த்து அண்டை வீட்டாரையும் அல்லாஹ் குறிப்பிடுவது  சமூக  நல்லிணக்கத்திற்கும் மனித அன்பிற்கும் இஸ்லாம் அளிக்கும் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துகிறது. அல்லாஹ்வை வணங்கிய உடனேயே, எல்லாம் வல்ல அல்லாஹ் பெற்றோர், உறவினர்கள், சமூகத்தின் பலவீனமான பிரிவினரிடம் நன்மையாக நடந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளான்.  அத்துடன்  இந்தப் பட்டியலில் அண்டை வீட்டாரையும் சேர்த்திருப்பது, இந்த உறவின் முக்கியத்துவத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

திருக்குர்ஆனில் இறைவனை வணங்குவதும் மனிதகுலத்துக்குச் சேவை செய்வதும் ஒரே மூச்சில் குறிப்பிடப்படும் விதம், ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கான பாதை தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வழிபாடுகளால் மட்டும் அல்ல, அண்டை வீட்டாரின் நலனில் அக்கறை கொள்வதும்,  அவர்களின்  மரியாதையைக் காக்கவும், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், துன்பங்களிலிருந்து பாதுகாப்பதும் ஆகும்.

இன்றைய நவீன உலகத்தில் சுவரின் மறுபக்கத்தில் வசிக்கும் அண்டை வீட்டாரின் பெயர், நிலைமை அல்லது தேவைகள் கூட நமக்குத் தெரியாத நிலை உள்ளது. ஓர் அண்டை வீட்டாரின் உரிமை, நெருங்கிய உறவினர் அல்லது பலவீனமான நபரின் உரிமைக்குச் சமமானது. அவர்களை புறக்கணிப்பது, நம் ஈமானின் குறைவைக் காட்டுவதாகும்.

ஹதீஸ்களின் ஒளியில் அண்டை வீட்டாரின் உரிமைகள்

அண்டை வீட்டாரைப் பற்றிய ஹதீஸ்களை நாம் படிக்கும் போது, இஸ்லாமிய மார்க்கத்தில் அண்டை வீட்டாரின் நிலை வெறும் சமூக உறவாக அல்ல, நம்பிக்øகயின் தரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருப்பதை அறியலாம்.

நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல் கிறேன் அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் அல்ல’ என்று மூன்று முறை கூறினார்கள். அப்போது தோழர்கள் கேட்டார்கள்: ‘யார், அல்லாஹ்வின் தூதரே?’ நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ‘யாருடைய தீங்கிலிருந்து அவரது அண்டை வீட்டார் பாதுகாப்பாக இல்லையோ அவர் இறைநம்பிக்கையாளர் அல்ல’ (ஸஹீஹ் புகாரி)

நபி(ஸல்) அவர்கள் இதை மூன்று முறை சத்தியமிட்டுக் கூறியிருப்பது, இந்த விஷயம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இது வெறும் வார்த்தை அல்ல, நம்பிக்கையின் தரத்தை அளக்கும் ஓர் எச்சரிக்கை அடையாளம். இன்று, நாமெல்லாம் நம்மை நம்பிக்கையாளர்கள் எனப் பெருமையாகக் கூறுகிறோம். ஆனால் நாம் நம் அண்டை வீட்டாரை எப்படி நடத்துகிறோம்?

நமது சத்தம் அவர்களுக்குத் தொந்தரவாகிறதா? நாம் வாகனங்களைச் சாலையில் அடைத்து அவர்களின் வழியை மறைக்கிறோமா? நமது தூசு, குப்பை அல்லது கோபமான வார்த்தைகள் அவர்களுக்குக் காயம் விளைவிக்கிறதா? இவற்றில் ஏதேனும் உண்மையாக இருந்தால், நமது நம்பிக்கை பலவீனமடைந்து ஆபத்தில் இருப்பதை உணர வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தன் அண்டை வீட்டார் பசியுடன் இருக்கும்போது, தானோ முழுமையாக உண்பவன் உண்மையான  இறைநம்பிக்கையாளன்  அல்ல’ (ஸஹீஹ் அல்புகாரி, ஹதீஸ்: 112)

இந்த ஹதீஸ் ஒரு சாதாரண வாக்கியமாகத் தோன்றலாம். ஆனால் அதில் மனதை அதிரச் செய்யும் உண்மை அடங்கியுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இந்த எச்சரிக்கை, நமது நம்பிக்கையின் அளவுகோலை நினைவூட்டுகிறது. ஒருவர் தன் அண்டை வீட்டார் பசியுடன் இருப்பதை அறிந்தும் அவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால் அவர் முழுமையான நம்பிக்கையாளர் அல்ல என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று நம்மில் எத்தனை பேர் மூன்று வேளை உணவு, இறைச்சி, இனிப்புகள், தேநீர், விருந்துகள் என இன்பமாக உண்கின்றோம். ஆனால் சுவரின் மறுபுறம் நம் அண்டை வீட்டார் எத்தனை நாள்களாக வேலை இல்லாமல் தவிக்கிறார்கள், குழந்தைகள் மருந்துக்காக ஏங்குகிறார்கள், வீடு வருத்தத்தால் நிறைந்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முயலுகிறோமா? நம்மால் தெரிந்தும் அமைதியாக இருப்போம் என்றால், இந்த ஹதீஸின் முகவரி நாமே. நமது அண்டை வீட்டாரின் பசி, நமது ஆடம்பரத்தின் மீது ஒரு கேள்விக்குறி.

‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர் தனது அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்யக்கூடாது, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர் தனது விருந்தினரை நல்ல முறையில் கவனிக்க வேண்டும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர் நல்லதைப் பேச வேண்டும் அல்லது வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும்.’

ஓர் உண்மையான நம்பிக்கையாளர், தன் நம்பிக்கையை வாக்கால் அல்ல, அண்டை வீட்டாரை நேசிக்கும் செயல்களால் காட்ட வேண்டும்.

முஸ்லிம் அல்லாத அண்டை வீட்டாரை நன்றாக நடத்துதல்

இஸ்லாமிய  சமுதாயம்  என்பது, ஒவ்வொரு வீடும் மற்றொரு வீட்டின் நிழலாகவும், ஒவ்வொரு கதவும் மற்றொன்றின் பாதுகாவலனாகவும், ஒவ்வொரு தனிநபரும் தனது அண்டை வீட்டாரின் சகோதரராகவும் இருக்கும் ஓர் உன்னதமான அமைப்பாகும். நாம் வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி, நமது செயல்பாடு, நல்ல குணம், ஒழுக்கம், முகமலர்ச்சி, உதவி செய்யும் மனப்பான்மை, நேர்மை ஆகியவற்றால் இஸ்லாத்தின் மதிப்பைப் பேண வேண்டும். அதன் மூலம் நமது அண்டை வீட்டாரின் இதயத்தில் ஓர் இடத்தைப் பெற வேண்டும்.

முஸ்லிம் அல்லாத நம் அண்டை வீட்டாரை மிகச் சிறந்த முறையில் நடத்துவதன் மூலம், இஸ்லாத்தின் அழைப்பு அவர்களுக்குச் சென்றடையும். பலவீனமான, நோயுற்ற, தனிமையில் உள்ள நம் அண்டை வீட்டாருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அண்டை வீட்டார் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், சென்று அவர்களை நலம் விசாரிப்பது நபி(ஸல்) அவர்களின் வழக்கம் ஆகும். யாராவது மரணித்தால், அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அண்டை வீட்டாருக்கு ஏதேனும் தேவைப்பட்டால், தம்மால் இயன்ற அளவு உதவுவார்கள். இவை அனைத்தும் வெறும் நற்பண்புகள் மட்டுமல்ல,  இவைதான்  மார்க்கத்தின் உண்மையான  உணர்வும்  சாராம்சமும் ஆகும்.

சகோதர சமுதாய அண்டை வீட்டாருடனும் நல்லுறவு பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது. அண்டை வீட்டார் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளவர்கள் என்பதை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அண்டை வீட்டாரின் மதம், சாதி, மொழி எதுவாக இருந்தாலும், ஒரு நபரை மனிதனாகக் கருதி, கருணையுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று இஸ்லாம் கற்பிக்கிறது.

அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்களின் வீட்டில் ஆட்டிறைச்சி சமைக்கப்பட்டது. அவர் தன் குடும்பத்தினரிடம், ‘இந்த ஆட்டின் இறைச்சியில் கொஞ்சம் நம் யூத அண்டை வீட்டாருக்கு அனுப்பினீர்களா?’ என்று கேட்டõர். ஏனெனில், முஹம்மது (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்கள் எப்போதும் தன் அண்டை வீட்டாரிடம் கருணை காட்டும்படி எனக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒருவேளை, அவரை என் வாரிசாக ஆக்கிவிடுவாரோ என்று நான் நினைத்தேன்’ என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.

இன்றைய நிலைமை

நம் அண்டை வீட்டாருடன் நன்றாக நடந்துகொள்ள இஸ்லாம் போதிக்கும் இந்த வழிமுறை, நம் சமூகத்தில் பரவலாகிவிட்டால், இன்றைய உலகம் சொர்க்கத்தின் ஒரு மாதிரியாக மாறும். ஆனால், நாம் இஸ்லாமிய போதனைகளிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டோம் என்பதே உண்மை. இன்று நாம் நம் அண்டை வீட்டாரின் உரிமைகளைப்  புறக்கணித்துவிட்டோம். இதன் விளைவை நம் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் வெறுப்பு, பதற்றம், விரோதம், அலட்சியம் போன்ற வடிவங்களில் காண்கிறோம்.

கடந்த காலத்தில், மக்கள் தங்கள் அண்டை வீட்டாருடன் தம் குடும்பத்தைப் போலவே நெருக்கமாகப் பழகி வந்தனர். ஒரு வீட்டில் மரணம் அல்லது மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும், முழு அக்கம் பக்கத்தாரும் அதைப் பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் இன்று, நாம் பல ஆண்டுகளாக வசித்தாலும், நம் அண்டை வீட்டாரின் பெயர் கூட நமக்குத் தெரிவதில்லை. இது ஆன்மிகத் தனிமை,  சமூக  அக்கறையின்மையின் ஆபத்தான விஷயமாகும். இது அன்பு, நல்லிணக்கச் சூழலை நீக்கிவிடுகிறது.

இன்றைய காலகட்டத்தில், நமக்கு ஒரு புதிய சமூக எழுச்சி அத்தியாவசியமாகிறது. இந்த மாற்றமானது, வழிபாட்டுத் தலங்களின் சொற்பொழிவு மேடைகள், வீடுகளில் உள்ள அன்னையர், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து தொடங்க வேண்டும். அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்த நினைவூட்டல் வெறும் வெள்ளிக்கிழமைப் பேருரைகளில் மட்டும் நின்றுவிடாமல், நம் இல்லங்கள், நமது அன்றாட உரையாடல்கள், நமது நன்னெறிகள், நமது உள்ளங்கள் அனைத்திலும் வேரூன்ற வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் அண்டை வீட்டாரைக் கவனித்துக்கொள்வது ஒரு கட்டாயக் கடமையாக மட்டுமின்றி, ஓர் அழகான வாழ்க்கை முறையாகவும் கருதப்பட்ட பல குடியிருப்புகள், சமூகங்கள், அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த முன்மாதிரிகள் நமக்குக் கற்பிப்பதுடன், இஸ்லாமிய போதனைகள் நடைமுறை வாழ்வில் எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன என்பதற்கான சான்றையும் வழங்குகின்றன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தபோது, மக்காவை விட்டு வந்த முஹாஜிர்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். அவர்களுக்கு வீடுகளோ, வாழ்வாதாரமோ இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் மதீனாவின் அன்சார்கள் செய்த தன்னலமற்ற தியாகம், அண்டை வீட்டாரை ஆதரித்த வரலாற்றின் மிக உன்னதமான உதாரணமாகும். அன்சார்கள் முஹாஜிர்களுக்குத் தங்கள் வீடுகளின் கதவுகளை அகலத் திறந்தனர். தங்கள் உடைமைகள், நிலங்கள், செல்வம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் பெருந்தன்øமயைக் காட்டினர். பல அன்சாரித் தோழர்கள் தங்கள் இல்லங்களில் இரு முஹாஜிர்களை அன்புடன் வரவேற்றனர்.

மத்திய  கால  அண்டலூசியாவில் (ஸ்பெயின்), முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் உள்ளிட்ட அண்டைச் சமூகங்கள் அறிவு, இலக்கியம், வணிகம், கலாச்சாரத் துறைகளில் சிறந்த ஒத்துழைப்புடன் செழித்தோங்கின. அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் அருகருகே அமைந்திருந்தது மட்டுமன்றி, அவர்கள் ஒருவருக்கொருவர் பண்டிகைகளிலும் மிகுந்த மரியாதையுடன் பங்கேற்றனர்.

அண்டை வீட்டாரைப் புறக்கணிப்பது ஈமானின் பலவீனம்

இஸ்லாமிய சமூக அமைப்பு அன்பு, நல்லெண்ணம், நீதியை அடிப்படையாகக் கொண்டாலும், தங்கள் கடமைகளைப் புறக்கணிப்பவர்களுக்கு  அது  கடுமையான எச்சரிக்கைகளையும் அளிக்கிறது. அவற்றில் மிகவும் ஆபத்தான அலட்சியம் அண்டை வீட்டாரின் உரிமைகளை மீறுவதாகும். இந்தச் சிறிய விஷயம் உண்மையில் நமது நேர்மை, நன்மை, மறுமை வெற்றியைக் கூட ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

நமது அண்டை வீட்டாரின் உரிமைகளைப் புறக்கணிப்பது ஒரு சிறிய தவறு அல்ல, அது ஈமானின் வீழ்ச்சிக்கும் நரகத்திற்கும் வழிவகுக்கும். எனவே, நாம் உண்ணும் போது, நமது அண்டை வீட்டாரையும்  கவனித்துக்  கொள்ள வேண்டும். இன்பம் அல்லது துன்பம் ஏற்படும் போதெல்லாம், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், குறைந்தபட்சம் புன்னகையுடன் அவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும். அவர்களைப் பற்றி புறம் பேசக்கூடாது. அவர்களின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாம் வெறும் சொற்கள் அல்லது கற்பனை ஒழுக்கத்தின் மார்க்கம் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத் திலும் வழிகாட்டும் ஒரு நடைமுறை மார்க்கமாகும். நமது அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது, கொள்கைகளை மீண்டும் மீண்டும் கூறுவது மட்டுமல்லாமல், அவற்றை நம் சமூகத்தில் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்வது முக்கியமாகும்.

பெரும்பாலும் கூட்டங்களில் உலக விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மார்க்கம், ஒழுக்கம், ஹதீஸ், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு அல்லது இஸ்லாமிய சமூகம் பற்றிய இஸ்லாமிய போதனைகள் குறிப்பிடப்பட்டால், இதயங்களும் மென்மையாகின்றன, நோக்கங்களும் மேம்படும். வாராந்திரக் கூட்டம், பாடங்கள், பிரார்த்தனை பரிமாற்றம் அல்லது மார்க்க நிகழ்ச்சிகள் போன்ற செயல்பாடுகள்
அக்கம் பக்க உறவுகளுக்கு உயிர் கொடுக்கின்றன.

தமிழில்: மௌலவி சமியுல்லாஹ் உமரி


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்