முன்பதிவு செய்யப்பட்ட தொடர்வண்டிப் பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் அத்துமீறி பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. பல நாள்களுக்கு முன்பே முறைப்படி முன்பதிவு செய்து தொடரியில் பயணம் செய்கின்ற பொழுது நாம் முன்பதிவு செய்த இருக்கைகளில் வடமாநிலத்தவர்கள் கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்கக் கூட நம்மால் இயலாத சூழல் ஏற்படுகிறது. அவர்கள் கூட்டமாக இருப்பதால் பலரும் இது குறித்துப் பேசவே தயங்குகின்றார்கள். இதுபோன்ற சமயங்களில் பயணச் சீட்டு பரிசோதகர்கள் வருவதில்லை. இதனால் நம்மால் முறையிட இயலாத நிலை ஏற்படுகிறது.
அவசரகால நிலையில் முறைப்படி பயணச்சீட்டு எடுத்து முன்பதிவுப் பெட்டிகளில் ஏதாவது இருக்கைகள் இருக்கிறதா என்று பயணச்சீட்டு பரிசோதகரிடம் கேட்டால் நம்மிடம் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். பல நேரங்களில் தண்டத் தொகை கட்டவைத்து விடுவார்கள். ஆனால் இப்படி கண்டிப்புடன் இயங்குகிற தொடர்வண்டித்துறை வட மாநிலத்தவர்கள் பயணிக்கும் தொடர் வண்டிகளில் எந்த முறைகேட்டையும் கண்டுகொள்ளாமல் இருப்பது இது ஏதோ திட்டமிட்டு நடக்கிறதோ என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால் வடமாநிலங்களில் எப்படிப்பட்ட நிலை இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
கடந்த முறை நடந்த கும்பமேளா நிகழ்வில் கோடிக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். வாரக்கணக்கில் நடந்த அந்தத் திருவிழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஒன்றிய, உபி மாநில பாஜக அரசுகள் போதுமான பயண ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வில்லை. இதனால் கும்பமேளாவில் கலந்து கொண்ட மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். குறிப்பாக முன்பதிவு செய்த அனைத்துப் பெட்டிகளையும் பயணச்சீட்டு எடுக்காத மக்கள் பயணம் செய்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு களை ஏற்படுத்தினார்கள்.
கதவுகள் திறக்கப்படாத பெட்டிகளில் தாக்குதல்களைத் தொடுத்தார்கள். கற்களை எறிவது, ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது தீ வைப்பது என்று கொடூரமான செயல் களில் ஈடுபட்ட வீடியோக்களை நாம் பார்த்தோம். முன்பதிவு செய்த இருக்கையில் அமர்ந்தவர்களைத் தள்ளிவிட்டு கூட்டமாக இருக்கைகளை ஆக்கிரமித்த நிகழ்வுகளும் நடந்தன. இதனைத் தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல்களும் நடைபெற்றன. அங்கே எந்தக் காவலர்களும் இல்லை. பயணச்சீட்டு பரிசோதகர்களும் இல்லை என்பது இந்த ஆட்சியாளர்களுக்கு மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து வட மாநிலத்தவர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பையும், அங்கீகாரத்தையும் வழங்கு கிறது என்றே தோன்றுகிறது. அவர்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்திலே வேலை செய்து கொண்டிருக்கிற வடமõநில மக்கள் ஓட்டுப் போடுவதற்காக தங்களுடைய ஊருக்குச் செல்லுகிற போது ரயில் நிலையத்தில் நின்று ‘பாரத் மாதா கி ஜே’, ‘மோடி, அமித் ஷாவுக்கு ஜே’ என்று முழக்கம் எழுப்பி விட்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அதில் முறையாக முன்பதிவு செய்து பயணம் செய்த மக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தியதைக் கண்கூடாக நம்மால் பார்க்க முடிந்தது.
இது போன்று அவர்களை உருவாக்குவது ஆபத்தான மனநிலை. வடமாநில மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களை நாடோடிகளாக வாழ வைக்கின்ற மிக மோசமான அரசியலை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. அந்த மக்களின் வளர்ச்சிக்கான எந்தத் திட்டங்களையும் முறையாக நடைமுறைப்படுத்தாமல், அவர்களின் வாழ் வாதாரச் சூழ்நிலையை மேம் படுத்துவதற்கு எந்தக் கவலையும் கொள்ளாமல் அவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அவர்களிடம் மத உணர்வைத் தூண்டியும் அவர்களின் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டும் இருக்கின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
முற்போக்குச் சிந்தனைகளால் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வடமாநிலத்தவர்கள் இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது அமைதியான சூழலைக் கெடுத்துவிடும். தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இந்தப் பிரச்னையைப் பேச வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் ஓடுகின்ற தொடர்வண்டிகளில் பயணிகளின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.