மனிதனை எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கி இறைவன் படைத்துள்ளான். கோபம், பயம், ஆசை, பொறாமை, நிதானம், வெறுமை போன்ற பல உணர்களோடு தான் நாம் வாழ்வில் பயணிக்கிறோம். உறவு, நட்பு இரண்டும் இல்லாமல் மனித வாழ்வு அமைவதில்லை. பல சிரமங்கள், ஏமாற்றங்கள், மகிழ்வுகள், துக்கங்கள் எல்லாம் கலந்து தான் வாழ்க்கை நகர்கிறது.
நாம் இப்போது அவசர உலகில் வாழ்கிறோம். நமது சூழல் நல்ல விஷயங்களை நம்மை விட்டுப் புறந்தள்ளிக் கொண்டிருக்கிறது. நமது உள்ளத்தைக் கட்டுப்பாட்டி லிருந்து பேராசையின் பக்கமும், மன்னிப்பை விட்டுப் பழி தீர்த்தலின் பக்கமும், பொது நலத்தை விட்டுச் சுயநலத்தின் பக்கமும் திருப்புகிறோம். இவ்வாறு எல்லா நல்ல விஷயங்களையும் விட்டுத் தீயவற்றின் பக்கமே சென்று கொண்டு இருக்கிறோம்.
பாசத்தையும் நேசத்தையும் விற்று பகைமையை வாங்குகிறோம். நன்மையை விட்டுத் தீமையை விலை கொடுத்து வாங்குகிறோம். நமக்குள் நல்ல பண்பு நலன்கள் வளர வேண்டும். எங்கேயோ கேள்விப்பட்ட கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்புணர்வு, தற்கொலை போன்றவை இப்போது நம்மைச் சுற்றி நடக்கத் தொடங்கிவிட்டது. இவற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
இறைவன் திருமறையில் பொறுமையை உறுதிமிக்க காரியமாகக் கூறுகின்றான். ‘யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்’ (திருக்குர்ஆன் 42:43)
நம் மனதை உறுதியோடும் நிதானத்தோடும் வளர்க்க பொறுமை, மன்னிப்பு என்ற இரண்டு குணங்கள் நம்மிடம் இருந்தால் பெருந்தன்மை, தியாக உணர்வோடு வாழ லாம். ஒருவர் நம்மை ஏசினால் உடனே நமது மனம் அவரை எப்படியாவது பழி தீர்க்கத் துடிக்கிறது. அதுவும் இன்று சர்வசாதாரணமாகப் பழி தீர்ப்பது என்பது கொலை செய்யும் அளவுக்குப் போய் விட்டது.
ஏன் மனிதர்களாகிய நாம் மன்னிப்பை மறந்து விடுகிறோம்? அந்த அளவுக்கு நமக்குள் கோபம் சிம்மாசனம் போட்டிருக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (நீங்கள் வாழப் பிறர் வாழ வேண்டும் எனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்’. நாம் நினைத்தது நமக்கு நடக்கவில்லை அல்லது கிடைக்கவில்லை என்றால் இதைவிடச் சிறந்ததை இறைவன் தருவான் என்று நம்பிக்கையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏமாற்றத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். இறைவன் அருளைக் கொண்டும் நமது முயற்சியைக் கொண்டும் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். நபி(ஸல்) அவர்களை தாயிஃப் நகர மக்கள் விரட்டினார்கள். இரத்தக் காயத்தோடு ஊரை விட்டு வெளியேற்றினார்கள். அப்போது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ‘இந்த ஊரை அழித்துவிடட்டுமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்களுடைய அழகான பதில் என்ன தெரியுமா? ‘அதை நான் ஒருக்காலும் விரும்பமாட்டேன்’ என்பது தான்.
நபி(ஸல்) அவர்கள் அந்தத் தருணத்தில் பொறுமையையும் மன்னிப்பையும் மேற்கொண்டார்கள். இந்த ஓர் அழகான உதாரணம் போதும் நம் வாழ்வில் நடந்த, நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் பொறுமையும், மன்னிப்பும் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். இறைவன் திருமறையில் கூறுகிறான்: ‘அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடு வார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான். ’ (திருக்குர்ஆன் 3:134)
நாம் இறையச்சமுடையோராக மாறக் கோபத்தை அடக்கி மன்னிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல பண்பை நமக்குள் வளர்க்க முடியும். நம்மைச் சுற்றியும் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.