நோயாளியைப் போய்ப் பார்ப்பது, நலம் விசாரிப்பது ஒரு மார்க்கக் கடமை. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்று. முஸ்லிமல்லாத நோயாளியை சுகம் விசாரிப்பதும் ஒரு நற்காரியமே.
பொதுவாக நோயாளிகளை நலம் விசாரிப்பதால் கிடைக்கின்ற நன்மைகள் பல. ஆரோக்கியத்தை இழந்து துன்பப்படுபவர்களின் துயரத்தை நேரடியாகக் காண்பதன் மூலம் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆரோக்கியத்தின் அருமை, பெருமையைப் புரிந்து கொள்ளலாம்; அல்லாஹ்வின் அருளை நினைத்துப் பார்க்கலாம்; ஈமானையும் இறையச்சத்தையும் புதுப்பித்துக் கொள்ளலாம்; அல்லாஹ்வுக்கு ஆழ்மனதால் நன்றி சொல்லலாம்.
நோயாளிகளை சுகம் விசாரிக்கச் செல்வதன் மூலம் மனிதர்கள் மத்தியில் இணக்கம் ஏற்படுகிறது; பகைமை நிலவுவோர் மத்தியில் பகைமை நீங்குகிறது; மன்னிக்கும் மனப்பாங்கு உருவாகின்றது. இன்னொரு பக்கம் நோயாளியைப் போய்ப் பார்ப்பதன் மூலம், நிலையான மறுமைநாளிலும் அளவற்ற வெகுமதிகளை, நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நலம் விசாரிப்பதற்குச் செல்பவர்கள், தாங்கள் திரும்பி வரும்வரை நன்மையான பாதையில் இருக்கிறார்கள். அந்த நொடிகள் அனைத்திலும் அவர்களுடைய நன்மைத் தராசின் எடை கூடிக்கொண்டே இருக்கிறது என சுபச் செய்தி சொல்லும் நபி மொழிகள் உள்ளன.
மேலும் சில சுபச் செய்திகள் பின்வருமாறு:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒருவரிடம்), ‘ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?’ என்று கேட்பான். அதற்கு அவன், ‘என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, ‘உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?’ என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ‘உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்’ என்று கூறுவான். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) (முஸ்லிம்)
‘நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்’ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)
நபியவர்கள், ‘நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் ‘குர்ஃபா’வில் இருக்கிறார்’ என்று கூறினார்கள். அப்போது ‘அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் ‘குர்ஃபா’ என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் கனிகளைப் பறிப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள்.(முஸ்லிம்)
அபூஹûரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: ‘(ஒரு நாள்)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (எங்களிடம்), ‘இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். ‘இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?’ என்று கேட்டார்கள்.
அபூபக்ர்(ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். ‘இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?’ என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர்(ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். ‘இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர்(ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ‘எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை’ என்றார்கள். (முஸ்லிம்)
நோயாளிகளைப் போய் நலம் விசாரிப்பது தஃவாவுக்கான ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ஒரு நோயாளி படுக்கையில் இருக்கும் போது பெரும்பாலும் நல்ல உபதேசங்களை விரும்பிக் கேட்கும் மனோ நிலையில் இருப்பார். எனவே இந்த வேளையில் அவருக்கு வழங்கும் உபதேசம் அவரில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒருவரை நேர்வழியின் பக்கம் அழைத்த மகத்தான கூலியைப் பெற்றுக் கொள்ள முடியும்.