மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மனிதர்களை மீட்டெடுக்கும் ஓர் அழகிய பரப்புரை
அ.முத்துக்கிருஷ்ணன், 1-15 டிசம்பர் 2025


அண்டை  வீட்டாரின்  உரிமைகள் என்கிற மிக முக்கியமான பரப்புரையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன் னெடுத்து இருக்கிறது. மிக முக்கிய மானதாக இன்றைய காலத்தின் மிக அவசியமான பரப்புரையாக இதை நான் பார்க்கிறேன்.

 நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். சமூகம் என்பது ரொம்பப் பெரிய வார்த்தை. ஆனால் நமக்கு நம் வீட்டைச் சுற்றி இருக்கும் அண்டை வீட்டார், நம் தெருவில் வசிப்பவர்களை நமக்குத் தெரியுமா? அவர்களுடன் நமக்கு அறிமுகம் இருக்கிறதா?

ஒரு பேருந்தில் பயணிக்கின்றோம். நாம் நம் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து இருப்பவர்களோடு ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்ளத் தயாராக இருக்கின்றோமா? ஒரு ரயில் பயணத்தில் அருகில் இருப்பவரோடு நாம் உணவை அல்லது நம் கதையை, அனுபவத்தைப் பகிரவோ அல்லது ஒருவரின் சிரமத்தைக் கேட்கவோ தயாராக இருக்கின்றோமா? இது போன்று நிறைய கேள்விகள் என் மனதில் அலை அலையாய் இருக்கின்றன.

அருகில் இருக்கும் எவரிடமும் பேச முடியவில்லை, எதையும் பகிர முடியவில்லை என்றால் எங்கோ ஓர் இடத்தில் இந்தச் சமூகம் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையே அது உணர்த்துகிறது. இந்தச் சமூகம் மனிதர்களிடமிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தச் சமூகம் கருவிகளுக்குள் குறிப்பாக மொபைல் போனிற்குள், திரைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றது. ஓர் இயந்திர மயமாகிப்போன சமூகத்தை நாம் மீண்டும் மனிதர்களாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கின்றது.

இயந்திர மயமாகிப்போன இந்தச் சமூகத்தில் அவர்கள் தங்களுடைய தொடுதிரையைத் தவிர பக்கத்தில் இருப்பவர்களைக் கூட நிமிர்ந்து பார்த்ததில்லை, பக்கத்தில் இருப்பவரோடு உரையாடுவதில்லை. அப்படி உரையாடாமல் உறவாடாமல் இருப்பது முதல் நிலை எனில், இரண்டாம் நிலையில் அவர் தன்னோடு இருக்கும் சகலரையும் தன் போட்டியாளராக, எதிரியாகவே பார்க்கின்றார். இது ஒரு நோய், அந்த நோயுடைய தீவிர அறிகுறியாகத் தான் இதை நான் பார்க்கின்றேன்.

இந்த இடத்தில் நாம் முதலில் மனிதர்களை மனிதர்களாக ஆக்குவது, அவர்களின் இதயங்களைச் சுத்தம் செய்வது, அவர்களைச் சக மனிதர்களின் மீது அக்கறை செலுத்துபவர்களாக மாற்றுவது மிக முக்கியம். என்னுடைய சிறு பிராயம் தொட்டு எனக்கு இந்தப் பூமியில் வாழ வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் எப்போதுமே இயற்கைக்கு நன்றி சொல்லுபவன்.

நான் இந்த வானியல் குறிப்பாகக் கேலக்ஸி, சூரிய குடும்பம், கோள்கள் எல்லாவற்றையும் பற்றி நிறைய அறிந்து கொள்பவன். இவ்வளவு பெரிய அண்ட வெளியில் இந்த பூமியில்தான் மனிதர்களாகிய நாம் இருக்கின்றோம். இங்கே தான் இந்த வாழ்க்கை இருக்கின்றது. மொழி இருக்கின்றது, நடனம் இருக்கின்றது, தத்துவங்கள் இருக்கின்றது. இத்தனை விஷயங்கள் ஒரே ஓர் இடத்தில் தான் இருக்கின்றது என்பதை அறிவியல் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

அப்படி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ஒன்றை, தூசு மாதிரியான, ஒரு புள்ளியான பூமியில் வாழக்கூடிய நாம் சொற்ப காலம் வாழ்ந்து விட்டு மறைந்து போகப் போகிறோம் என்றால் நாம் வாழ்கின்ற நேரம் எவ்வளவு உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும். சக மனிதர்களைக் கட்டித் தழுவ வேண்டும், அவர்களோடு நம் உணவைப் பரிமாற  வேண்டும்,  திருவிழாக்களுக்கு அவர்களை நாம் அழைக்க வேண்டும், இணைந்து இசை கேட்க வேண்டும், நடனமாட வேண்டும், உலா செல்ல வேண்டும்.

இப்படி எல்லாம் நாம் சக மனிதர்களோடு உறவு பாராட்ட வேண்டும் என்கின்ற ஒரு பாடத்தை எடுக்க வேண்டிய சூழலுக்கு இந்த உலகம் போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அண்டை வீட்டாரின் உரிமைகள் என்கிற இந்தப் பரப்புரை மிகவும் அவசியமானது, முக்கியமானது, மிகவும் தேவையானது.

நாம் ஒவ்வொரு மனிதரையும் நல்ல மனிதராக மாற்றுவதும் நம்மோடு சக பயணிகளாக இந்த பூமியில் பயணிக்கக்கூடிய அனைவரையுமே நம் குடும்பத்தினராக, நம்மு டைய உறவினராகப் பார்க்க அவர்களை போட்டியாளர்களாக அல்லாமல், பங்காளிகளாகப் பார்க்க, தோழர்களாகப் பார்க்க, அவர்களுடைய தோளில் கை போட்டுப் பயணிக்க அவர்களின் துன்ப துயரங்களைப் பகிர என்ற மனநிலைக்கு வர வேண்டும்.

அப்போதுதான் இந்தப் பொருளியல் உலகத்திலிருந்து விடுபட்டு மனிதர்களாக மாறுவோம். மனிதர்களாக மாறவேண்டிய ஓர் அவசியத் தேவை இன்றைக்கு எழுந்திருக்கின்றது. இந்தப் பரப்புரை வெற்றி பெறவேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்