மூஸா அபூ மர்சூக் கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள ஹமாஸின் ‘சர்வதேசத் தொடர்புத் துறை’ அலுவலகத்தின் தலைவராக உள்ளார். இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராவார். இவரது குடும்பத்தின் பூர்வீகம் தற்போதைய இஸ்ரேலின் யாவ்னே ஆகும். ஆனால் 1948இல் அவர்கள் கட்டாயப்படுத்தி ரஃபா அகதிகள் முகாமிற்குத் தள்ளப்பட்டனர். பின்னாளில் அங்குதான் அவர் பிறந்தார். இவர் அண்மையில் தி ஹிந்து ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.
அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் இயக்கம் உலகின் மிகச் சக்தி வாய்ந்த ராணுவத்தினை எதிர்கொண்டதை உலகமே வியந்தது. ஆனால் தற்போது இஸ்ரேலின் எதிர்த்தாக்குதல்களையும் அதனால் பொது மக்களும் குழந்தைகளும் தொடர்ந்து கொல்லப்படுவதையும் பார்க்கின்ற பொழுது ஹமாஸின் தாக்குதலால் என்ன பயன் என்கிற கேள்வி எழுகிறதே?
தற்போது அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பவை கடந்த அக்டோபர் ஏழு அன்று தொடங்கியது அல்ல. இந்தப் பிரச்னையின் ஆணிவேரே பல பத்தாண்டுகளாக ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஆக்கிரமிப்புகள் தான். எதிர்த்தாலும் எதிர்க்கா விட்டாலும் இஸ்ரேல் நாள்தோறும் எமது மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
அவர்கள் காஸாவை முற்றுகையிட்டு 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரலாற்றின் மிகவும் கொடூரமான முற்றுகை ஆகும். காஸாவின் மக்கள் எவ்வளவு கலோரிகள் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதைக்கூட ஆக்கிரமிப்பாளர்கள் தான் முடிவு செய்கின்றனர் என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். இவை சொல்லிமாளா இழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் காஸா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறது.
சரணடைவது தான் தீர்வா? எப்படியோ சரண் அடைந்தாலும் அதனையும் இஸ்ரேல் ஏற்பதில்லை. ஃபலஸ்தீனர்களைக் கொன்று குவிக்க வேண்டும் அல்லது அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
நாங்கள் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஓர் விடுதலை இயக்கம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் சுதந்திரம்; ஆக்கிரமிப்பாளர்களின் கீழ் வாழ்வதை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்திய மக்கள் எவ்வாறு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களை நிராகரித்து இறுதியில் அவர்களை வெளியேற்றினார்களோ அதுபோலத்தான்.
இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர் விவிலியன் சில்வர் உட்படப் பல சிவிலியன்களைக் ஹமாஸ் கொன்றுள்ளது. இதற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற இஸ்ரேலின் கதையாடல்கள் பொய்யானவை. சம்பவங்களை நேரில் கண்ட இஸ்ரேலிய மக்களின் சாட்சியங்களின்படி எங்களுடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் அவர்களைக் கொலை செய்யவில்லை. சில காணொலிக் காட்சிகள் எங்களுடைய வீரர்கள் இஸ்ரேலிய சிறுவர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது. ஒரு வீரர் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக் கொள்ளவா என்று தன்னிடம் அனுமதி கேட்டதாக ஓர் இஸ்ரேலியப் பெண்மணி கூறுகிறார். இப்படிச் சாப்பிடுவதற்காக அனுமதி கேட்கும் ஒருவர் பொதுமக்களைக் கொலை செய்வாரா?
வீடுகளைச் சுற்றிவளைத்திருந்த ஹமாஸ் போராளிகளைக் கொல்வதற்காக இஸ்ரேலிய இராணுவம் பொழிந்த குண்டுகளால் தான் அங்கிருந்த டசன் கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தார்கள் என்று இஸ்ரேலிய மக்களே சாட்சியம் சொல்கின்றனர். இது அங்கு நடைபெற்ற நாசகரமான செயல்கள் அனைத்தும் இஸ்ரேலிய இராணுவத்தின் செயல் தான் என்பதை நிரூபணம் ஆக்குகிறது. எங்களுடைய போராளிகளிடமிருந்த லேசான ஆயுதங்களும் கவசமிடப்பட்ட வாகனங்களும் தான்.
அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களை ஹமாஸ் கொன்றதாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால் அந்தப் பகுதியில் அப்படி ஓர் இசை நிகழ்ச்சி நடைபெற்றதே எங்களுக்குத் தெரியாது. கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை போராளிகள் வெளியேற்றுவதற்கு முன்னரே இஸ்ரேலியப் படைகள் அங்கு வந்துவிட்டன. அதனால் தான் அந்தப் பகுதி ராணுவ மண்டலமாக மாறி மோதல்கள் ஏற்பட்டது. மேலும் இஸ்ரேலிய இராணுவம் ஏவிய ஏவுகணைகளால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதை நேரில் பார்த்த இஸ்ரேலியர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வீழ்ச்சி அடைந்ததை ஒட்டி குழப்பம் ஏற்பட்டது. அப்போது காஸாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் பகுதிகளுக்குள் நுழைந்து பல இஸ்ரேலியர்களைப் பிடித்து வந்துவிட்டனர். அப்போது நாங்கள் கண்டிப்பாக அனைத்து பொது மக்கள், வெளிநாட்டினரை விடுதலை செய்து விடுவோம், எங்களுக்கு அவர்களை வைத்துக் கொள்வதில் எந்த விருப்பமும் இல்லை என அனைத்து தரப்பிடமும் தெளிவாகக் கூறியிருந்தோம். இப்படி அவர்களைச் சிறைபிடிப்பது எங்களின் கொள்கை அல்ல. அவர்களை விடுதலை செய்வதற்கான சரியான சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறோம்.
ஆனால் இஸ்ரேல் காஸாவின் மீது இடைவிடாது தீவிரமாகப் பொழிந்து வரும் குண்டு மழை இதனைக் கடினமாக்கி விட்டிருக்கின்றது. குண்டுவெடிப்புகளின் தீவிரம் காரணமாக ICRC சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குழுவினால் கூட அதன் கிடங்குகளை அடைய முடியவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்கு இருக்கின்றார்கள் என்பதே தெரியாத போது அவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல், அரபு நாடுகளின் உறவை இயல்பாக்கம் செய்வதற்காகப் போடப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கையைத் தகர்ப்பதே உங்களுடைய தாக்குதலுக்கான காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறாரே..!
அந்த ஒப்பந்தத்தைத் தகர்க்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. ஏனென்றால் அரபு நாடுகள் தங்களுடைய மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராகத் தான் இதனைச் செய்துள்ளது. ஏற்கனவே அவர்கள் இஸ்ரேல் உடனான இயல்பாக்கத்தை நிராகரித்துள்ளனர். உதாரணமாக எகிப்து, ஜோர்டான் 40 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளன. ஆனால் அந்நாடுகளின் பொது மக்கள் சியோனிஸ ஆக்கிரமிப்புகளை இன்றுவரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதனால் எங்களுக்கு இது போன்ற உடன்படிக்கைகளைக் கண்டு அச்சமில்லை; அவை தானாகவே நீர்த்துப் போய்விடும்.
தற்போது உலகம் முழுவதிலும் ஆயுதக் குழுக்களுக்கான அங்கீகாரம் என்பது குறைவாகவே உள்ளது. இப்போது அவை பயங்கரவாதக் குழுக்கள் என்று அறிவிக்கப்படுகின்றன. இஸ்ரேலின் முதுகிற்குப் பின்னால் மேற்கத்தியச் சக்திகள் நிற்கின்றன. இத்தகைய புதிய புவிசார் தந்திரங்களுக்கு மத்தியில் ஹமாஸ் தன்னை எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்கின்றது, அல்லது அமைதிக்கான வாய்ப்புகள் ஏதேனும் உண்டா?
பிரிட்டன் இந்தியாவை காலனிப்படுத்திய போது அது உலகின் பெரும் சக்தியாகத் திகழ்ந்தது. அந்நிலையில் கூட இந்திய மக்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினர். நாங்கள் 30 ஆண்டுகளாக அமைதியான வழியில் போராடிப் பார்த்து விட்டோம். ஃபத்தாஹ் இயக்கம் ஓஸ்லோ ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டது. அதன் விளைவு என்ன?
அவர்கள் வாக்களித்தது போல எங்களுடைய ஃபலஸ்தீன் திரும்பக் கிடைக்கவில்லை. சட்ட விரோதக் குடியேற்றங்களின் காரணமாக மேற்குக்கரை பகுதி தனித்தீவாக மாறியது. காஸா முழுவதுமாக முற்றுகை இடப்பட்டது. ஃபலஸ்தீனர்களால் தங்களுடைய நாட்டின் இன்னொரு பகுதிக்குச் செல்வதை விட எளிமையாக காஸாவிலிருந்தும் மேற்குக் கரையிலிருந்தும் உலகின் எந்த நாடுகளுக்கும் செல்ல முடியும்.
இதனால் தான் எமது மக்களுக்கு அமைதியான தீர்வுகள் எனச் சொல்லப்படுவதன் மீது நம்பிக்கை இல்லை. நாங்கள் மக்கள் எதிர்ப்பு, ஆயுதமேந்திய போராட்டங்களை உள்ளடக்கிய மொத்த எதிர்ப்பையே நம்புகிறோம். நாள்தோறும் நடைபெறும் அணிவகுப்பில் எமது மக்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கின்றனர். அவர்கள் தினமும் காஸாவின் எல்லைப் பகுதிக்குச் சென்று முற்றுகையைத் தகர்க்க வேண்டும் தங்களுடைய பூர்வீக நிலத்திற்குள் (தற்போதைய இஸ்ரேல்) செல்ல வேண்டும் எனப் போராடுகின்றனர். எங்களுக்கு வேண்டியது எல்லாம் விடுதலை. அதற்காக எந்தவிதமான போராட்டத்தையும் மேற்கொள்வோம்.
நீங்கள் 2006 இல் ஆட்சிக்கு வந்தீர்கள். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் காஸாவை ஹாங்காங்காகவோ அல்லது சிங்கப்பூராகவோ மாற்றி இருக்கலாம். பிராந்திய வணிக மையமாக மாற்றி ஒரு முன்மாதிரியை உருவாக்கிக் காட்டி இருக்கலாம் எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் உங்களுடைய செயல்பாடுகள் அந்த நிலத்தினை போர்க்களமாக மாற்றி விட்டதே!
தற்போது நடப்பவற்றுக்கு எங்களது செயல்களே காரணம் என்று கூறப்படு வதைக் கேட்க விசித்திரமாக உள்ளது. ஹமாஸ் இயக்கம் 1987இல் தொடங்கப்பட்டது. 2006இல் ஆட்சியமைத்தோம். ஆனால் நாங்கள் நல்லபடியாக ஆட்சி செய்து விடக்கூடாது என்பதற்காக எங்களை அவர்கள் முற்றுகையிட்டனர். இஸ்ரேல், அமெரிக்கா, நீதமற்ற மேற்கத்திய உலகம் எங்களைத் தோல்வி அடையச் செய்யத் தொடர்ந்து வேலை பார்த்தன. ஆனால் நாங்கள் உறுதியாக இருந்தோம். முழுவதுமாக எங்களைத் துடைத்தெறிய வேண்டி திட்டமிட்டுக் குறிவைத்தது.
‘ஹமாஸ் ஒழுங்காக ஆட்சி அமைத்திருந்தால் காஸாவை சிங்கப்பூராக மாற்றி இருக்கலாம், ஆனால் அது போர்க்களமாக மாற்றி விட்டது’ என்கிற வாதம் புதுமையாக இருக்கிறது. ஆக்கிரமிப்புகளுக்கு முன்புவரை எங்களுடைய நாடுதான் அதன் சுற்று வட்டாரத்திலேயே முன்னேறிய நாடாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் வந்த பிறகு தான் நாங்கள் போர், இடப்பெயர்ச்சி, நாடற்று வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. புகலிடம் இன்றி பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஃபலஸ்தீனை விட்டு விரட்டியடிக்கப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்டனர்.
எங்களுக்கும் முன்னேற்றமடைந்து, செழிப்பாக வாழ ஆசைதான். எனக்குப் பதில் சொல்லுங்கள்: ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து கொண்டு தங்களது நாட்டில் வளமான அரசைக் கட்டி எழுப்ப முடிந்த மக்கள் யாராவது இருக்கிறார்களா? தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் இந்தப் போர் நீங்கள் தொடங்கியது தானே?
இந்த போரைத் தொடங்கியது என்னுடைய மண்ணை ஆக்கிரமித்து, என் மக்களை வெளியேற்றி எங்களை முற்றுகையிட்டவர்கள் தான். எங்களுடைய நோக்கம் இஸ்ரேலிய இராணுவத்தைக் குறிவைப்பது தான். இது நியாயமான முறையில் ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடுவது என்கின்ற வரையறைக்கு உட்பட்டது தான். முற்றுகையின் கீழ் வாழும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுற்றுவட்டாரத்திலேயே மிகச் சக்தி வாய்ந்த இராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளனர். சுதந்திரம் அடையும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும். அதன் இறுதிக் கட்டம் எங்களுடைய விடுதலை தான்.
இதுவரை இல்லாத அளவிற்கு இம்முறை அரபு உலகிலும் அதைத் தாண்டியும் உங்களுக்கு ஆதரவும் அனுதாபமும் கிடைத்து வருகிறது. ஃபலஸ்தீன் பிரச்னையை ஒட்டுமொத்தமாகத் தீர்ப்பதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்? ஈரானைத் தாண்டி வெளியிலிருந்தும் உங்களுக்கான உதவியை எதிர்பார்க்கிறீர்களா?
ஈரானியப் புரட்சி நிகழ்வதற்கு முன்பிருந்தே ஃபலஸ்தீனர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரான் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. அதற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். மேலும் பலதரப்பட்ட அமைப்புகள், நாடுகள் வழங்கும் அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய அரசின் தற்போதைய கொள்கை இந்தியாவின் நலனுக்குத் தீங்கானது. இந்தியாவின் தற்போதைய இஸ்ரேலுடனான கூட்டணிஃபலஸ்தீன், பிற அரபு நாடுகளுடன் அது வைத்திருந்த வரலாற்றுப் பாரம்பரிய உறவிற்கு எதிரான சதி. இந்தியாவிற்கு அரபு நாடுகளினால் முக்கிய பலன்கள்இருக்கின்றன. ஆனால் இஸ்ரேலுடனான உறவு, இந்தியாவை அரபு மக்களுக்கு விரோதமான நாடாக வகைப்படுத்தி அவர்களுக்கு மன ரீதியான தயக்கத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவின் நலன்களைப் பாதித்துவிடும்.
நீங்கள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை என அடிக்கடி குறிப்பிட்டீர்கள். ஆனால் இஸ்ரேல் என்பது எதார்த்தம். இப்போது நீங்கள் இரு தேசத் தீர்வை ஏற்றுக்கொள்ளவில்லையானால் நீங்கள் எதிர்பார்ப்பது தான் என்ன?
இஸ்ரேல் என்பது எதார்த்தம். அதனால் அதை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களே! தற்போதைய இஸ்ரேலை விடப் பல மடங்கு சக்தியாகப் பிரிட்டிஷ் எதார்த்தமாக இருந்த நேரத்திலும் ஏன் இந்தியா பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை? இஸ்ரேல் என்பது ஒரு பிராந்திய சக்தி. அதனுடைய சக்தியும் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் அப்போதைய பிரிட்டன் உலகத்தின் பெரும் சக்தியாகத் திகழ்ந்தது. எங்களுடைய போராட்டத்தைக் கைவிட்டு இஸ்ரேலை ஏற்றுக் கொள்வது ஓர் எளிமையான வழியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் ‘சரியான பாதை எப்போதும் மிகக் கடினமானது’ என்கிற மகாத்மா காந்தியின் கூற்றில் இருக்கும் உண்மையைப் பார்க்கின்றோம்.
அமைதிக்காக இஸ்ரேலும் ஃபலஸ்தீனும் இணைந்து வாழ்வது சாத்திய மாகுமா? ஹமாஸ் அதனை ஏற்றுக் கொள்ளுமா?
நீங்கள் ஆட்டுக்குட்டியைப் பார்த்து ‘உனக்கு ஓநாயுடன் இணைந்து வாழச் சம்மதமா?’ எனக் கேட்கின்றீர்கள். நீங்கள் இந்தக் கேள்வியை அணு ஆயுதங்களையும், மத்திய கிழக்கிலேயே அதிநவீன ஆயுதங்களையும் வைத்திருப்பவர்களிடம் சென்று தான் கேட்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரச்னையின் வேர் காரணமே அவர்கள் தான். ஃபலஸ்தீனர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஓஸ்லோ ஒப்பந்தத்தையும் இரு தேசத் தீர்வினையும் ஏற்றுக்கொண்டோம். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டியெழுப்பி எங்களை ஃபலஸ்தீன் என்கிற நாட்டினை மீண்டும் கட்டமைக்க விடாமல் தடுக்கின்றனர்.
இஸ்ரேலின் இன்றைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஃபலஸ்தீன் நாட்டைக் கட்டமைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் ஃபலஸ்தீனர்களின் மனதில் எழுவதைக் கூட தடுத்துவிட விரும்புவதாகக் கூறியிருக்கிறார். இதுபோன்ற எண்ணங்களைக் கொண்டவர்களுடன் இணைந்து வாழ முடியுமா? இறந்துவிட்ட ஃபலஸ்தீனர்கள் தான் நல்ல ஃபலஸ்தீனர்கள் ((Good Palestinian is a dead Palestinian) என்று நம்புகிறவர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும்?
ஃபலஸ்தீனர்கள் துண்டாடப்பட்டும் பிளவுபட்டும் இருக்கின்றனர் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட துண்டாடப்பட்ட இயக்கத்துடன் யாரும் இணைய விரும்ப மாட்டார்கள் அல்லவா!
இது ஓர் அபத்தவாதம். ஃபலஸ்தீன பிரிவினை அதாவது இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்டு பல தசாப்தங்களுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டுதான் ஃபலஸ்தீன் பிரிக்கப்பட்டது. ஃபலஸ்தீன் ஒன்றாக இருந்த அந்த தசாப்தங்களில் ஃபலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஏன் எந்த நாடும் ஆதரவளிக்கவில்லை? இன்று, சர்வதேச நாடுகள் ஃபலஸ்தீனிற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதற்குக் காரணமே ஃபலஸ்தீனர்கள் தான் என்று சாக்குச் செல்வதற்காக ஃபலஸ்தீனப் பிரிவினையைப் பயன்படுத்துகிறது. இந்திய மக்களுடைய புரட்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க உங்களை அறிவுறுத்துகிறேன். அதனுடைய விடுதலைப் போராட்டத்தின் போதும் கருத்துகளிலும் நிலைபாடுகளிலும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன.
நன்றி : The Hindu Frontline