‘முன்மாதிரி அண்டை வீட்டார் முன்மாதிரி சமூகம்’ எனும் மையக் கருத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை இயக்கத்தை அகில இந்திய அளவில் முன்னெடுத்து உள்ளது. இப்பரப்புரையின் அமைப்பாளரான சாஹுல்ஹமீது அவர்களிடம் பரப்புரை தொடர்பான கேள்விகளை முன்வைத்து உரையாடினோம். சமரசம் இதழுக்காக அவர் அளித்த நேர்காணல்.
நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க இந்தச் சமயத்தில் அண்டை வீட்டார் குறித்த பரப்புரக்கான தேவை என்ன இருக்கிறது?
உண்மைதான். இன்று நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. நாட்டு மக்கள் தினமும் பல பிரச்னைகளுடன் தான் எழுகிறார்கள். வெறுப்புப் பரப்புரைகள், மதவெறி நிகழ்வுகள், தேர்தல் ஆணையம் செய்யும் தில்லு முல்லுகள், ஜிஎஸ்டி, வேலையின்மை, புல்டோசர் அட்டூழியம், நீதி மறுப்பு என்று பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் அந்தப் பிரச்னைகளுக்கு நாம் ஒருவரையொருவர் புரியாமல் இருப்பதுதõன் காரணம். நம் அண்டை அயலவர்களுடனான உறவைச் சரியான முறையில் பேணியிருந்தால் நிச்சயம் மேற்கண்ட பிரச்னைகள் குறைந்திருக்கும். பல பிரச்னைகளுக்கு உறவினர்கள் அண்டை அயலவர்களுடனான தொடர்பில் ஏற்பட்ட விரிசல்களும் முக்கியக் காரணமாக இருக்கிறது. நாம் ஒருவரை
ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்திருப்போமேயானால், அதனை தொடர்ந்து பேணி இருப்போமேயானால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அண்டை அயலவர்களிடையில் இன்று மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை வகுப்புவாதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெறுப்பை விதைக்கின்றார்கள். இதனைப் புரிந்து கொண்டு விழிப்படைய வேண்டும் என்பதற்காகத்தான் இப்பரப்புரையை முன்னெடுத்துள்ளோம்.
பரப்புரையின் நோக்கம் என்ன?
இன்றைய காலகட்டத்தில் அண்டை வீட்டார்கள் ஒருவருக்கொருவர் பார்ப்பதோ பேசுவதோ பழகுவதோ வெகுவாகக் குறைந்துவிட்டது. அனைவரும் அவரவர்கள் வீடுகளிலே தனித் தீவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அதனால் பல்வேறு வகையான பிரச்னைகள், தீமைகள் அதிகரித்து வருகிறது. மனிதர்களைப் பொறுத்தவரை ஒரு கூட்டு சமூகமாக வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. இறைவனும் அப்படித்தான் மனித குலத்தைப் படைத்திருக்கிறான். ஆனால் வளர்ச்சி என்கின்ற பெயரிலே மனிதர்கள் தனித்தனியாக வாழப் பழகிவிட்டதன் விளைவு யார் யாருக்கு எந்தெந்த மாதிரியான உரிமைகள் கடமைகள் இருக்கிறது என்பதை மறந்து வாழ்கிறோம்.
அண்டை வீட்டார் ஒருவர் மற்றவரை நேசிப்பதை வெளிப்படுத்த வேண்டும். நலம் நாட வேண்டும், குறைகளைத் தீர்க்க வேண்டும். முன்மாதிரியான சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காக இந்தப் பரப்புரையை மேற்கொண்டுள்ளோம்.
எவ்வளவு நாள் இப்பரப்புரையைத் திட்டமிட்டுள்ளீர்கள்? எங்கெல்லாம் நடைபெறும்?
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் இப் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நவம்பர் 21ஆம் நாள் தொடங்கி 30ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
பரப்புரையில் எதனை மையப்படுத்த உள்ளீர்கள்?
மனித குலம் அமைதி பெற வேண்டும். அமைதிக்கான அடித்தளம் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய அண்டை அயலவர்களுடைய உரிமைகள், கடமைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை முழுமையாகப் பின்பற்றி வாழ வேண்டும். அப்படிப் பின்பற்றி வாழ்ந்தால் அமைதி நிறைந்த மிக அற்புதமான வாழ்வை நாம் வாழ முடியும்.
உறவினர்கள், அண்டை வீட்டார், சக பயணிகள், வழிப்போக்கர்கள், பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், சகோதர சமய சகேõதர சகோதரிகள் அனைவரின் நலம் நாட வேண்டும் என்பது இஸ்லாம் வழங்கி இருக்கும் மிக முக்கியமான வழிகாட்டுதல்களில் ஒன்று. அதன் மூலமாகத்தான் உலகம் அமைதி பெறும்.
உறவினர்கள், அண்டை வீட்டாருடன் மிகச் சிறந்த முறையில் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டி இருக்கிறது. மறுமை நாளில் ‘உன்னுடைய அண்டை வீட்டாரிடம் நீ எப்படி நடந்து கொண்டாய்?’ என்று இறைவன் வினவுவான். அந்த அளவிற்கு அண்டை வீட்டார்கள், உறவினர்களுடைய விஷயத்திலே இஸ்லாம் மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது. அந்த வழிகாட்டுதல்கள் மறந்து மெல்ல மெல்ல அண்டை வீட் டார்கள் உறவுகள் உரிமைகள் விஷயத்தில் பலவீனமாகி வருகிறோம். இதனை மீட்டெடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
பரப்புரையின் செயல் திட்டங்கள் என்ன?
தனிநபர் சந்திப்பு மூலமாக வீடு வீடாக மக்களை நேரடியாகச் சந்திக்க இருக்கின்றோம். குறிப்பாக நமக்கு அருகில் வசிக்கக் கூடிய அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று உறவினர்கள், அண்டை வீட்டார்களுடைய சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க இருக்கிறோம்.
சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பள்ளிவாசல் இமாம்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், காவல்துறை நண்பர்கள் அனைவரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். மடக்கோலை, ஸ்டிக்கர், சுவரொட்டிகள், பதாகைகள், சமரசம் சிறப்பிதழ், புத்தகங்கள், வால் ஹேக்கர்கள் ஆகியவற்றை விநியோகம் செய்தல், ஜும்ஆ உரைகள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாணவ இளைஞர்கள் பங்குபெறும் கருத்தரங்குகள், பேரணிகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், குழந்தைகள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் அனைத்திலும் Videos, Reels, shots, Drama, E poster போன்ற பல வழிமுறைகளை மேற்கொண்டு பரப்புரையை மிக வலுவாகச் செய்ய திட்டமிட்டு களத்தில் இறங்கி இருக்கின்றோம்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மட்டும் தான் இப்பணிகளைச் செய்யுமா?
ஜமாஅத் முன்னெடுக்கும் இப் பரப்புரையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO), மாணவியர் இஸ்லாமிய அமைப்பு(GIO), சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு, குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு(CIO) உள்ளிட்ட அனைவரும் அகில இந்திய அளவில் இணைந்து மிகச் சிறப்பான வகையில் பணிகளைச் செய்ய இருக்கின்றோம்.
இப் பரப்புரையின் மூலம் என்ன மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
* முஸ்லிம்கள், சகோதர சமயத்தவர்கள் அண்டை வீட்டார் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வைப் பெற வேண்டும்.
* அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பேணி நடக்கின்ற, நல்லிணக்கமும், இனிமையும் நிறைந்த உறவுகளை மேலோங்கச் செய்கின்ற வகையில் முஹல்லாக்களிலும் வசிப்பிடங்களிலும் சூழலை மாற்றி அமைத்தல்.
* பரஸ்பர பரிவு, ஒத்துழைப்பு, ஒழுங்கும் கட்டுப் கோப்பும் இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புகள் தொடர்பாக சமூகத்தில் அழுத்தமான மாற்றத்தை ஏற்படுத்துதல்.
* அண்டை வீட்டாருடனான நல்லுறவு, அழகான சிறப்பான முன்மாதிரிகளைப் பொதுச் சமூகத்திற்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அக்கறையை சமூகம் பெற வேண்டும்.
* சகோதர சமுதாய மக்களுடன் முஸ்லிம்களின் அண்டை வீட்டார் உறவு வலுப்பெற்று முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
* இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இருக்கக்கூடிய தவறான கருத்துகளையும் அவநம்பிக்கைகளையும் களைவதற்கான அழகான வழி வகையாய் அண்டை வீட்டாருடனான நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* மற்றவர்களின் உரிமையை நாம் பறிப்பதோ, நமது உரிமையை மற்றவர்கள் பறிப்பதோ தவறு என்று புரிவதுடன் மற்றவர்களுக்குச் சிரமத்தை உண்டாக்கு கின்ற, மன உளைச்சலில் தள்ளுகின்ற பொதுவான பலவீனங்களையும், பிழைகளையும் அடையாளம் கண்டு அவற்றைக் களைந்து அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்.
* அண்டை வீடு சிறந்தால் சமுதாயம் சிறக்கும். சமூகம் சீர்பட்டால் நாடு சிறந்து விளங்கும். அமைதி தழைத்தோங்கும், உரிமைகள் பாதுகாக்கப்படும், சிறந்த சமூகம் உருவாகும்.
இது போன்ற உயர்ந்த எதிர்பார்ப்புகளை இலக்காக வைத்து இந்தப் பரப்புரையை முன்னெடுத்துள்ளோம்.