மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சிரியா புதிய ஆட்சியின் எதிர்காலம் நிச்சயமற்றது
தல்மீஸ் அஹமது, ஏப்ரல் 1-16, 2025




மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த புகழ்பெற்ற இந்தியத் தூதுவர் தல்மீஸ் அஹமது சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு  எமிரேட்ஸிற்கான இந்திய தூதராகப் பணியாற்றியுள்ளார். முஹம்மது நௌஷாத் கான் ரேடியன்ஸ் இதழின் சார்பாக தல்மீஸ் அஹமதை அண்மையில் எடுத்த நேர்காணல் தொகுப்பு.


 சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி வீழ்ச்சிக்கும், பாதுகாப்புப் படை மாற்றம் குறித்தும் உங்கள் கருத்து என்ன?

திரைக்குப் பின்னால் நடத்தப்படும் இயக்கங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போது என்னிடம் சில தகவல்கள் உள்ளன. ஆனால் அனைத்துத் தகவல்களும் முழுமையாக இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலா னவை தனிப்பட்ட ஊகங்களை அடிப்படை யாகக் கொண்டவை. ஆனால் சிரியாவின் ஆட்சி வீழ்ந்தது எதிர்பாராதது, வியப்பிற்குரியது.

நிலைமை இன்னும் நிலையற்றதாகவே உள்ளது. ஜனவரி 2017இல் அமைக்கப்பட்ட ஹயாத் தஹ்ரீர் அல்ஷாம்(ஏகூகு) என்ற அமைப்பு, இந்த புதிய அரசியல் மாற்றத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கைப் பெற்றுள்ளது. சிரியா மீட்பு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சியில் இருந்த ஏகூகு பிரதமர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். ஏகூகுஇன் கருத்துகள் சமரசம் செய்யும் தன்மை கொண்டவை. மிகவும் நேர்மறையான அடிப்படையில் நாட்டை ஒன்றிணைப்பது, சிறுபான்மையினர், பெண்களின் நலன்களை ஏற்றுக்கொள்வது,  வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்வது பற்றி ஏகூகு பேசுகின்றனர்.

நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இது மிகவும் அசாதாரணமான கூட்டணியாகும். அமெரிக்கர்களின் ஆதரவுடன் குர்திஷ் கூறுகளால் ஆன சிரிய ஜனநாயகப் படைகள், துர்க்மென் கூறுகளைக் கொண்ட துருக்கிய ஆதரவுக் குழுவான சிரியா தேசிய இராணுவம் (குNஅ), துருக்கிய வீரர்கள், ஹயாத் தஹ்ரீர் அல்ஷாம் போன்ற பல்வேறு குழுக்கள் இதில் உள்ளன. இஸ்ரேல் சிரியாவின் பல்வேறு இலக்குகள் மீது இடைவிடாத வான்வழித் தாக்குதல்களை நடத்தி, சில எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, சிரியாவின் எதிர்கால நிலைத்தன்மைக்கான வாய்ப்புகள் குறித்து நான் மிகவும் அவநம்பிக்கையுடன் இருக்கிறேன்.

 சிரியாவில் ஆட்சி மாற்றம் முஸ்லிம் உலகை, குறிப்பாக மத்திய கிழக்கை எவ்வாறு பாதிக்கக்கூடும்?

மேற்கு ஆசியா சிறிது காலமாக நிலையற்ற தன்மை ஒழுங்கின்மையில் சிக்கியுள்ளது. அடிப்படைப் பிரச்னைகள் பல கடுமையான மோதல் சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளன. ஆனால் கடந்த 14 மாதங்களா கக் காஸா, மேற்குக் கரை, லெபனான் வரை போர் விரிவடைவதை நாம் காண்கிறோம். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி, பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடந்துள்ளன. முழு பிராந்தியமும் இப்போது ஒரு மோதல் சூழ்நிலையில் சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்காவுடன் இணைந்து அழிக்க இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்த விரும்புவதாக நாம் படித்து வருகிறோம். ஆனால் டிரம்பின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

நீங்கள் ஒரு நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தப் பகுதியில் இதுவரை தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. மொராக்கோ முதல் ஏமன் வரை, இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆட்சிகளும் எதேச்சதிகார ஆட்சிகளைக் கொண்டுள்ளன. முதலாவதõக, இந்தப் பிராந்தியம் முழுவதும் அரசாங்கங்கள் மிகவும் பலவீனமாக உள்ளது, எனவே எதேச்சதிகார ஆட்சிகள் தங்கள் மக்களை ஒடுக்கவும், சுதந்திரமான விருப்பத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கவும் பாதுகாப்புப்  படைகளைப்  பயன்படுத்த முனைகின்றன.  இதுவே  உறுதியற்ற தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இரண்டாவது, அங்கு நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள். அந்த நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை, ஆனால் அங்குள்ள பெரும்பாலான மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். எண்ணெய் வளம் மிக்க நாடுகள் அல்லாத பிற நாடுகளில் கடுமையான வறுமை நிலவுகிறது. அங்கு தொடர்ந்து மோதல்களும் ஏற்படுகின்றன. ஏமனில் ஒரு உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது. அதில் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் மிக நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது, அதில் சுமார் ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஃபலஸ்தீன், லெபனானில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இப்பிராந்தியத்திற்குள்  நடைபெறும் மோதல்கள் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளன. இந்த முழு மூலத்தின் மையமும் தீர்க்கப்படாத இஸ்ரேல் ஃபலஸ்தீன பிரச்øனயாகும்.

 சிரியாவில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றங்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸை எவ்வாறு பாதிக்கும்?

போராட்டக் குழுக்கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் தற்போது  பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில்  ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ் இப்போது இல்லை என்றே சொல்லலாம். ஹிஸ்புல்லா, ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதல், இரண்டு போராளிக் குழுக்களின் உயர் தலைமையை அழித்துள்ளது. இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றம் ஈரானுக்கு மிகவும் விரோதமானது. மேற்கு ஆசியா முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆதரவுத் தளத்தை உருவாக்கும் ஈரானின் கொள்கையை இந்த ஆட்சி மாற்றம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.

அது இப்போது மிகவும் கடுமையான பின்னடைவைப் பெற்றுள்ளது. உதவிக்கு வரும் எந்த ஆதரவுத் தளங்களும் ஈரானுக்கு இல்லை. ஈராக்கிலும் ஏமனிலும் போராளிகள் உள்ளனர். ஆனால் ஒரு பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும் எந்தத் திறனும் அவர்களிடம் இல்லை. எனவே இது ஈரானின் நலனுக்கு பயனளிக்காது என்று நான் நினைக்கிறேன். ஈரான் மீது இஸ்ரேல் ஒரு மிகப் பெரிய தாக்குதலைத் தொடங்க முடிவு செய்தால் இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும். ஈரான் இப்போது சவால்களை இரு முனைகளிலிருந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 சிரியாவில் இந்தியாவின் பங்கு என்னவõக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மேற்கு ஆசியாவின் நிலைத்தன்மையில், குறிப்பாக அதன் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றில் இந்தியா மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. இந்தியா இருதரப்பு தளங்களில் உறவுகளைக் கொண்டுள்ளது. அங்கு ஏற்படும் பாதுகாப்பு சவால்களில் இந்தியா ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இந்தியா தனது  செல்வாக்கைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஓரளவு மோதல் போக்கைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக ஜப்பான், கொரியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய மற்றொரு ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் கூட்டணியை இந்தியா ஒன்றிணைத்து, நெதன்யாகு பிரச்னைகளை விட்டுவிடவோ அல்லது ஈரான் மீது பெரிய தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்றோ அறிவுறுத்த வேண்டும் என்று நான் கூறுவேன்.

ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும் பிராந்தியம் முழுவதும் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரான் வளைகுடாவின் ஒரு பாதியை ஆதிக்கம் செலுத்துகிறது. அது ஹார்முஸ் மாநிலத்தின் ஒரு பாதியைக் கட்டுப்படுத்துகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த மோதல் பரவினால், இந்திய நலன்களும் பல நாடுகளின் நலன்களும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

இஸ்ரேலில் உள்ள தனது கூட்டாளிகளை, குறிப்பாகப் பிரதமர் நெதன்யாகுவை இந்தியா தனது செல்வாக்கு, இராஜதந்திர வளங்கள், ஆலோசனைகளைப் பயன்படுத்தி மோதலைக் கைவிடும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும். மோதல் மேலாண்மை சவாலான பணியாகும். ஏனெனில் இதற்கு ஒரே நேரத்தில் பல பரிமாணங்களைக் கையாள வேண்டும். முதலாவதாக மேற்குக் கரை, காஸா, லெபனான், சிரியாவில் மோதல் சூழ்நிலைகளை நாம் தணிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து மருத்துவ உதவி, உணவுப் பொருட்கள், இடம்பெயர்ந்த நபர்களை மறுவாழ்வு செய்தல் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

உடனடி மனிதாபிமான கவலைகள் தீர்க் கப்பட்டவுடன் காஸா, மேற்குக் கரையில் நிர்வாகத்தில் நீண்டகாலச் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது ஃபலஸ் தீன அதிகார சபையை மீண்டும் உயிர்ப்பித்து, பிராந்தியத்திற்கான சட்டபூர்வமான தலைமையை நிறுவத் தேர்தல்களை ஏற்பாடு செய்வதை உள்ளடக்கியது. மோதல் மேலாண்மையில் ஆரம்ப வெற்றியை அடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள், இராஜதந்திர முயற்சிகள், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத் தப்பட வேண்டும். இந்த முயற்சிகள் நீண்ட காலத் தீர்வுக்கு வழி வகுக்கும். பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஒரு விரிவான பாதுகாப்பு ஏற்பாடு என்பது நீண்டகால சவால் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் பார்க்கிற மூன்று நிலைகள் இவைதான்: மோதல் மேலாண்மை, மோதல் தீர்வு, ஒட்டு மொத்த பிராந்தியத்திற்கும் நீண்டகால விரிவான பாதுகாப்பு ஏற்பாடு.

 சிரியாவின் எதிர்காலம் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சிரியாவில் ஆட்சி மாற்றம் என்பது துருக்கி, இஸ்ரேல், அமெரிக்காவால் திட்ட மிடப்பட்ட ஒரு சதித்திட்டத்தின் விளைவாகும். அவை ஒவ்வொன்றும் பஷார் அல்அசாத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அதன் சொந்த நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. துருக்கியைப் பொறுத்தவரை குர்துகள் மீது அழுத்தம் கொடுப்பதும், வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் நலன்களைப் பாதுகாப்பதும் முதன்மையான நோக்கமாக இருந்தது. இந்த இலக்குகளுக்கு அசாத்தின் ஆதரவு இல்லாததால் அவரை நீக்குவது என்ற முடிவுக்கு துருக்கி வந்தது.

இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் ஈரானின் செல்வாக்கையும் சிரியாவில் ஹிஸ்புல்லாவின் இருப்பையும் தடுப்பதை மையமாகக் கொண்டிருந்தது. அசாத்தை அகற்றுவதன் மூலம், மத்தியதரைக் கடலுக்கான ஈரானின் அணுகலை சீர்குலைக்கவும், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு விநியோகம் செய்வதற்கான ஒரு வழியாகச் சிரியா பயன்படுத்தப் படுவதைத் தடுக்கவும் இஸ்ரேல் நோக்கமாகக் கொண்டது. கூடுதலாக, இஸ்ரேலின் ஈடுபாட்டிற்கு ஓர் உள்நாட்டு அரசியல் பரிமாணம் இருந்தது. நெதன்யாகுவின் அந்தஸ்தை வலுப்படுத்துவதை அது நோக்கமாகக் கொண்டிருந்தது.

குறிப்பாகக் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, உள்நாட்டு விமர்சனங்களை எதிர்கொண்ட நெதன்யாகு தனது பிம்பத்தை மீட்டெடுக்க முயன்றார். இந்த முயற்சிக்குப் பங்களித்த முக்கிய முன்னேற்றங்களில் ஹிஸ்புல்லா தலைமையைக் குறிவைத்து கொலை செய்தல், ஹமாஸ் தலைவர்களின் படுகொலை, இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றம் ஆகியவை அடங்கும். நெதன்யாகு இஸ்ரேலிய மக்களுக்கு அவர்களின் வலிமையான பாதுகாவலராக இருப்பதை நிரூபித்துள்ளார். இருப்பினும், இவை குறுகிய கால தந்திரோபாய நன்மைகள் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர் எதிர்கொள்ளும் சில உள்நாட்டுப் பிரச்னைகள் வரவிருக்கும் மாதங்கள் அல்லது ஆண்டுகளில் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும்.

இந்தச் சூழலில் மூன்றாவது பங்கு வகிக்கும் நாடு அமெரிக்கா. ஈரானை சிரியாவிலிருந்து வெளியேற்றுவது, ஹிஸ்புல்லாவை பலவீனப்படுத்துவது, ரஷ்யாவை அவமானப்படுத்துவது ஆகியவையே அதன் முதன்மையான கவனம். இந்த உத்தி ரஷ்யா தனது வான், கடற்படைத் தளங்களைத் திறம்பட பாதுகாக்க இயலாமையை எடுத்துக்காட்டுவதையும், பிராந்திய பாதுகாப்புக் கூட்டாளியாக அதன் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த அணுகுமுறை ஒரு குறுகிய கால விளையாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பினரும் பிராந்தியத்தில் நீண்டகால அமைதி, நிலைத்தன்மை குறித்து உண்மையான அக்கறை காட்டவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவைப் போலவே சிரியாவும் செல்லக்கூடும் என்பதுதான் எனது மிகப்பெரிய அச்சம். அங்கு அமெரிக்கப் படைகள் ஆட்சி மாற்றத்தைப் பாதித்தன, ஆனால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நாடு முற்றிலும் சீர்குலைத்து விட்டது. எனவே எதிர்காலத்தைப் பற்றி நான் மிகவும் கவலைப் படுகிறேன். இந்த மூன்று நாடுகளும் சிரியா ஆட்சியின் மீது இந்தப் பெரிய தாக்குதலை இவ்வளவு இழிவாகத் தொடங்கியிருப்பது சிரியாவிற்கும் பிராந்தியத்திற்கும் பெரும் தீங்கு விளைவித்துள்ளது என்று நான் நம்புகிறேன்.

தமிழில் : ரியாஸ் மொய்தீன்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்