ஹபீபி
நூறாண்டுகால தமிழ்ச் சினிமா-வில் பேசத் தயங்கும் கருப்பொருளான இஸ்லாமிய வாழ்வியல் குறித்துப் பேசத் துணிந்தீர்களே எப்படி?

எப்போதுமே எளிய மக்களுடனும் பதிவு செய்யப்படாத மனிதர்களுடனும் நின்று அவர்களுக்கான வாழ்வியலைப் பேச வேண்டும் என்பதை நான் விருப்பமாகக் கொண்டிருக்கின்றேன். அந்த வகையில் இயக்குநர்கள் எல்லாருக்குமே முன்னோடிகளாக தோல்ப்பாவைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். திரையில் கதை சொல்லும் இந்த நவீன வடிவத்திற்கு முதல் மூல காரணிகளாகத் திகழும் தோல்ப் பாவைக் கலைஞர்களைப் பற்றிய ஒரு பதிவுகூட இல்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
மற்ற மொழிகளில் நாட்டுப்புறக் கலைகளை வைத்து சினிமா வருவதைப் போல் தமிழ் மொழியில் அவ்வளவு அதிகமாக சினிமா வருவதில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. அந்த வகையிலும் நாட்டுப் புறக் கலையை மையமாக வைத்து சினிமா உருவாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலும் ஒரு சினிமா கலைஞனாக திரையில் கதை சொல்லும் ஒரு நவீன கதை சொல்லிகளுக்கு மூதாதையர்களான தோல்ப்பாவைக் கலைஞர்களைப் பதிவு செய்யும் நோக்கத்தில்தான் அவள் பெயர் தமிழரசி திரைப்படத்தை உருவாக்கினேன்.
எனது இரண்டாவது திரைப்படமான விழித்திரு ஒரே இரவில் நடக்கும் முழுமையான திரைப்படம். சென்னை போன்ற பெருநகரங்களில் எளிய மனிதர்களைக் கழித்துவிட்டால் சென்னை என்பதே இல்லை. எளிய மனிதர்கள் பகலில் எப்படி பெரு நகரங்களின் ஆன்மாவாக இருக்கின்றார்களோ அதைப் போல் இரவு நேரங்களிலும் எளிய மனிதர்களின் உலகம் இருக்கிறது. இதுவரை கண்டிராத, கேட்டிராத எத்தனையோ கதைகளை பெருநகர இரவு கொண்டிருக்கின்றது. அவர்களின் கதையும் சினிமாவில் பதிவு செய்யப்படாத ஒரு சூழலில் அப்படி ஒரு முயற்சியைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். விழித்திரு உருவானது.
அதுபோல் நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சினிமாவில் பதிவு செய்யப்படாத இஸ்லாமியர்களைக் குறித்த ஒரு சினிமாவை உருவாக்க வேண்டும் என்கிற ஆவல் எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. கூடுதலாக சமகால அரசியலில் இஸ்லாமியர்கள் குறித்தான வெறுப்பரசியல் கட்டமைக்கப்பட்டு இஸ்லாமியர்கள் குறித்த தவறான புரிதல்களை உருவாக்கும் பெரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றைய காலத்தில் இஸ்லாமியர்கள் அடையாள ரீதியாகவும் தனிமைப்படுத்தப்படுவதைக் குறித்த கவலையும் அவர்களுக்கு நிகழும் பலவிதமான கொடுமைகளைக் காண்பதால் உருவாகும் கவலையின் காரணமாகவும் இஸ்லாமியர்களைத் தவறாகக் கட்டமைக்கும் நரேட்டிவ் உருவாக்கப்படும் சூழலில் இஸ்லாமியர்கள் குறித்த உண்மை யான வாழ்வியலைப் பதிவு செய்யும் நோக்கிலேயே ஹபீபி உருவானது.
தமிழ்ச் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், பழங்குடிகளின் அரசியல், பெண்களுக்கான படங்கள், திருநங்கைகள், விளிம்புநிலை மக்கள், குழந்தைகளுக்கான படங்கள் கணிசமான அளவில் வெளிவந்துள்ளன. ஆனால் இஸ்லாமியர்களின் அசலான, இயல்பான வாழ்வு பதிவாகவில்லை என்ற கவலையிலும், இதற்கு முன் தமிழ்ச் சினிமாவில் முதலீட்டாளர்களாக, நடிகர்களாக,தயாரிப்பாளர்களாக,இயக்குநர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இஸ்லாமியர்கள் பலர் இருந்தும் இந்தப் பதிவு நடைபெறவில்லையே என்ற வேதனையிலும் ஹபீபி திரைப்படத்தை உருவாக்கி-னேன்.
இந்தக் கதையும், களமும் உருவான விதம் குறித்துச் சொல்லுங்களேன்!

கடந்த 20 ஆண்டுகளாகவே இஸ்லாமிய வாழ்-வி-யலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளும் போது நான் வாசித்த, நான் பார்த்த மனிதர்களின் கதை-களைக் குறிப்புகளாக நான் எழுதி வைப்பது உண்டு. நீண்ட நாள் நண்பரும், எழுத்தாளரும், சமரசம் இதழின் பொறுப்பாசிரியருமான வி.எஸ்.முஹம்மத் அமீன் தொடர்ச்சியாக திரைப்படங்கள் குறித்தும், சமூகம் குறித்தும் விவாதிப்பது உண்டு. அப்படியொரு நாள் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்ச் சினிமாவில் இஸ்லாமிய சினிமாவிற்கான தேவை குறித்தும், இடம் குறித்தும் நீண்ட விவாதம் செய்தோம். என்னுடைய, அவருடைய அனுபவங்கள் அப்படியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் குறித்து விவாதிக்கும் போது அமீன் அவருடைய ‘பதிவு செய்யப்படாத மனிதர்கள்' சிறுகதைத் தொகுப்பிலுள்ள நெய்தல் என்ற கதையைப் பேசினார். எனக்கு அந்தக் கதை பிடித்திருந்தது.
இஸ்லாத்தைத் தங்களுடைய வாழ்க்கையாக, மார்க்கமாக ஏற்றுக் கொண்டு இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட நாட்டில் வாழும் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. எல்லாருமே இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்வியல் முறை நிலப்பரப்பின் அடிப்படையில் வெவ்வேறான வகையில் இருக்கிறது. அது எந்த மதத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பாகப் பார்க்கிறேன். அப்படி தென்பகுதியிலுள்ள தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற செய்தி பலருக்கும் தெரியாத ஒன்றாகும். மற்ற சமூக மக்கள் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பதை அறிந்திருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற செய்தி பலரும் அறிந்திடாத ஒன்று.
எல்லா சமூக மக்களும் நீண்டகால பாரம்பரியமிக்க தங்களுடைய தொழிலை இயந்திரமயமாக்கலுக்குப் பிறகு விட்டுவிட்டு தங்களுடைய சொந்த நிலத்திலிருந்து பிழைப்புத் தேடி வெளியேறிச் சென்றுள்ளார்கள். இந்தப் புலம் பெயர்தல் எல்லாச் சமூகத்திலும் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்-திருக்கிறது. அதுபோல இஸ்லாமியர்களின் வாழ்வில் 70,80 கால கட்டங்களில் தலைமுறையாக தங்களுடைய நிலத்தில் செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு வெளியேறும் நிலையின் வலியைக் குறித்தும் நாங்கள் பேசினோம்.
நான் 1979 இறுதியில் பிறந்த-வன்.அப்போது வெளிநாடு சென்று வருபவர்களைப் பார்த்து வளர்ந்தவன். என்னுடைய தந்தை தலைமை ஆசிரியராக இருந்தாலும் கூட என் குடும்பத்திலுள்ள சாச்சா, மாமா, அண்ணன், உறவுகள் வெளிநாட்டுக்குச் சென்று வரும் அனுபவங்களை நான் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். ஒரு பயணம் என்பது பொருளீட்டுவதற்காக வெளியேறிச் செல்கின்றவர்களின் கதை மட்டுமில்லை. அவர்களை வழியனுப்புகின்ற, அவர்களுக்காகக் காத்திருக்கின்ற மனிதர்களின் கதையாகவும் இருக்கின்றது.
இதுவரை வெளிநாட்டைக் குறித்து வந்த படங்கள் எல்லாமே அரபு நாடு, ஒட்டகம், பாலைவனம், விமானம் என்றுதான் பதிவாகி வந்திருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க வெளிநாட்டிற்கு பிழைப்பு தேடிச் செல்லக்கூடிய இடம்பெயர்வு என்பது ஒரு குடும்பத்திற்குள், உறவுகளுக்குள், ஊருக்குள், அந்த சமூகத்திற்குள் எந்த மாதிரியான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதற்கான கதையை வெளிநாட்டிற்குச் செல்லாமல் இங்கிருந்தே பேசக்கூடிய ஒரு கதையாக அமீன் அதைச் சொல்லும்போது மிக மகிழ்வாக இருந்தது.
நான் இந்த வாழ்வை நெருக்கமாகப் பார்த்திருக்-கின்-றேன் என்பதால் இந்த வாழ்வை உயிர்ப்பாகவும், ஈரமாகவும் அப்படியே கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை உருவானது. நானும் நண்பர் அமீனும் இந்தக் கதை நடக்கக் கூடிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவருடைய குடும்பம் பாரம்பரியமான நெசவுத் தொழிலைச் செய்து கொண்டிருந்ததாலும் இந்த வாழ்வை இரத்தமும், சதையுமாகக் கொண்டுவர முடியும் என இருவரும் பேசி இந்தக் கதையைத் தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்தோம்.
படம் பார்ப்பவர்களுக்கு ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்பது இல்லாமல் ஒரு சில நிமிடங்களிலேயே இந்தப் படம் இஸ்லாமிய தெருக்களுக்குள்ளாக, வீடுகளுக்கு உள்ளாகக் கொண்டுவந்து இந்தப் படம் பார்க்கும் பார்வையாளர்களைக் கதையில் ஓர் அங்கமாக மாற்றக்கூடிய அளவிற்கான தன்மையோடு இரத்தமும், சதையுமாக, உயிர்ப்பாக அமீன் இந்தக் கதையை எழுதி-யிருக்கின்றார். ஒரு கட்டத்தில் பார்வையாளர்களே மனதிலிருந்து இந்தக் கதையை நகர்த்துவதற்கு வந்து சேரக் கூடிய அளவிற்கு இந்தப் படம் நம்பகத் தன்மையோடு உருவாகி இருக்கிறது. இப்படித்-தான் ஹபீபியின் கதையைத் தேர்வு செய்தோம். இஸ்லாமியர்களின் வாழ்வு என்பது எவ்வளவு தூரம் இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்திருக்கின்றது என்ற கதையாகவும் இது உருவாகியிருக்கிறது.
படத்திற்கு ஹபீபி என அரபு மொழித் தலைப்பு வைத்திருக்கின்றீர்களே..!

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள். அதில் பெரும்பான்மையான மக்கள் இன்று காட்சி ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். வாழ்வு முறை வேறு வேறாக இருந்தாலும் மார்க்கத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் இருக்கின்ற இஸ்லாமியர்கள் உணர்வு ரீதியாக ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடிய புள்ளியாக இஸ்லாமிய கொள்கை, நம்பிக்கைகள் இருக்கின்றது. இஸ்லாமியப் பின்புலத்திலான வாழ்வு என்பது உலகம் முழுவதும் இருக்கின்ற முஸ்லிம்களை இணைக்கின்ற ஒரு கதையாக மாறிவிடுகிறது. ஒரு தமிழ்ப்படம் தெலுங்கு, மலையாளம் போன்ற இந்திய மொழிகள் வரை செல்லும். இங்கிருக்கும் மற்ற சமூகத்தவர்களின் கதை என்பது குறிப்பிட்ட எல்லைகள் வரைதான் இருக்கும்.
ஆனால் ஓர் இஸ்லாமிய வாழ்வு என்பது, வாழ்வியலைச் சொல்லும் சினிமா என்பது உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களை இணைக்கும் என்பதனால் ஹபீபி என்கிற தலைப்பைச் சூட்டியிருக்கின்றோம். வணிக ரீதியாகவும் இந்தியாவைத் தாண்டி ஹபீபியை வெளியே கொண்டு செல்ல விரும்புகின்றோம். உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத-வர்களும் பார்க்க வேண்டும் என்பதால் ஹபீபி என்ற தலைப்பு தேவைப்பட்டது.
பெரிய நடிகர்கள் இல்லாமல் படம் வெற்றி பெற முடியுமா? புதுமுக நடிகர்களுடன் களமிறங்கியுள்ளீர்கள். இந்த அனுபவம் எப்படி இருந்தது?

உச்சத்தில் இருக்கின்ற நடிகர்கள் என்றில்லாமல் ஓரளவு பிரபல்யமான நடிகர்கள் சிலரை ஹபீபிக்காக அணுகியபோது அவர்கள் நடிக்கத் தயாராக இல்லை. அவர்கள் எல்லாருக்கும் ஒரு தயக்கம் இருந்தது. இந்தக் கதை மூன்று காலகட்டத்தில் நடப்பதால் ஒரு நீண்ட காத்திருத்தலுடனான பயணம் தேவைப்பட்டது. உடல் ரீதியாக, மன ரீதியாக மற்ற படங்களை விட்டு விட்டு வர வேண்டும். ஹபீபி படம் பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் அவர்களின் தோற்றம் மாறுவது மிகச் சிறப் பாக வந்திருக்கிறது. ஒரு நீண்ட நெடிய உழைப்பை, காலத்தை இந்தப் படம் கோரியது.
சிலர் ஹபீபி இஸ்லாமியப் படம் என்பதால் போனைக் கூட எடுப்பதில்லை. இஸ்லாமிய சினிமா உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள பிரச்னைகளையும், அசாத்தியங்களையும், கடினமான சவால்களையும் பேசுவதன் வழியாகத்தான் சமகாலத்தில் கலைப் பண்பாட்டுத் தளத்தில், இஸ்லாமியர்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது, அரசியல் ரீதியாக இஸ்லாமியர்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
அச்சு அசலாக ஒரு வாழ்க்கையைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதற்கு ஏற்கனவே ஒரு இமேஜ் இருக்கக்கூடிய பெரிய நடிகர்கள் நடிகர்களாக மட்டுமே பார்க்கப்படுவார்கள். ஆனால் புதுமுகங்கள் அந்தப் பாத்திரங்களாகவே பார்க்கப்படுவார்கள். அப்படிப் பார்க்கப்படும்போது ஈரம் நிறைந்த அசலான வாழ்க்கையைப் பார்வையாளர்கள் உணர முடியும். நாம் பார்ப்பது ஒரு சினிமா அல்ல. ஒரு குடும்பத்தின் கதை. ஒரு தெருவுக்குள், வீட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கின்ற ஓர் அனுபவம் என்பதை உணர வேண்டும் என்றால் அதற்கு இமேஜ் இல்லாத புதுமுகங்கள் எங்களுக்குத் தேவைப்பட்டது.
படத்தினுடைய ஒரிஜினாலிட்டிக்காக, வாழ்விற்காக அந்த ஊரைச் சேர்ந்த மக்களை நிறைய பயன்படுத்தியிருக்கின்றோம். அதாவது சினிமாவில் எந்த முன்அனுபவமும் இல்லாத, கேமராவிற்கு முகம் காட்டிடாத, சினிமா என்னவென்று தெரியாத பலரை நாங்கள் நடிக்க வைத்திருக்கின்றோம். அதுவெல்லாம் படத்தை மிக உயிர்ப்பாகக்கொண்டு வந்திருக்கிறது.அவர்களுக்குப் பழக்கப்படாத ஓர் உலகத்தில் அவர்களைக் கொண்டு வருவதில் பெரும் சவால்கள் இருந்தன. நடிக்க வைப்பதில் மட்டுமல்ல, டப்பிங் பேச வைப்பதில் பெரும் காலத்-தையும் எடுத்துக் கொண்டது. அது பொருளாதார ரீதியாகவுமே கூடுதல் செலவும் தேவைப்பட்டது. அதைத் தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டதனால் அருகிலிருந்து பார்க்கும்போது அதற்கு ஒத்துழைத்தார்கள்.
நிறைய நடிகர்கள் ஹபீபி ஸ்கூல் மூலமாக தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பார்கள். தங்களின் வாழ்வை அந்த மக்கள் அவர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக கஸ்தூரி ராஜா அவர்களின் முதல் படம் வரும்போது நான் அந்த ஊரில் கோலி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்திருப்பேன். ஒரு மூத்த இயக்குநரை நான் இயக்கியது பெரிய அனுபவமாக இருந்தது. அவர் ஒரு தேர்ந்த இயக்குநர், கதை சொல்லி என்பதால் எளிதில் இந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்தக் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தேவையோ அதற்கான பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார்.
ஒரு சிறந்த இயக்குநராக எப்படி அறியப்பட்டாரோ, அதுபோல ஒரு சிறந்த நடிகராகவும் அறியப்படுவார். இதில் பெரும்பாலும் நடித்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். ஆனால் படம் பார்க்கும்போது அவர்களின் உடல்மொழி, தோற்றத்தில், வசன உச்சரிப்பில் அந்தப் பகுதி முஸ்லிமாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். தொழில் நுட்பக்கலைஞர்களாகவும், நடிகர்களாகவும் முஸ்லிம் அல்லாதவர்கள் பெருமளவு இருந் திருக்கின்றார்கள் என்பதுதான் இந்தப் படத்தினுடைய ஒரு சாதனையாகவும்,நம்பிக்கையாகவும் பார்க்கிறேன். அனைவரும் தங்கள் மனதிலிருந்து ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றார்கள். அரசியலாகவும் சமூகத்திற்குச் செய்தி
யாகவும் சொல்ல விரும்புகின்றேன்.
வணிக சினிமா ஆதிக்கம் செலுத்தும் நிலையில்,கலைப்படங்களுக்கு, எளிய மக்கள் வாழ்வியல் படங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா?

இந்திய மொழிகளில் சினிமாவை மிகவும் ஆதர்சமாக, உயிராகக் கருதக்கூடிய ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். இங்கு உருவாகியிருக்கக் கூடிய எவ்வளவோ படங்களில் புதுமுகங்கள் நிறைய இருந்து படம் ஓடியிருக்கிறது.வியாபார ரீதியாக திரையரங்கிற்குப் படத்தைக் கொண்டு வருவதற்கு சிரமம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ரசிகர்களைப் படம் பார்க்க வர வைப்பது வரை இந்தச் சிர மம் இருக்கிறது. பெரிய நடிகர்கள் இருந்தால் இதுவெல்லாம் எளிதில் நடந்துவிடும்.
திரையரங்கிற்கு மக்கள் வந்து பார்த்துவிட்டால் அந்தக் கதை அவர்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றதா, நம்பகத்தன்மையோடு இருக்-கின்-றதா,ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கின்றதா, படம் முழுமையாகத் தம்மைத் திருப்திப்படுத்துகின்றதா என்று தான் பார்ப்பார்களே தவிர நடிகர்களுக்காக மட்டுமே படத்தைப் பார்ப்பதில்லை.அண்மைக் காலத்தில் உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் படு தோல்வி அடைந்ததையும் நாம் பார்க்கின்றோம்.
வணிக ரீதியான சவால்கள் இந்தப்-படத்திற்கு இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அப்படி இல்லை. மனதைத் தொடுகின்ற கதைகளை அவர்கள் பார்க்கின்றார்கள். டி.வி, அலைப்பேசியில் ஏதோ ஒரு வகையில் நாளுக்கு மூன்று படம் என்ற ரீதியில் வாரத்திற்கு இருபது படம் முழுமையாகவோ, மேலோட்டமாகவோ பார்க்கின்றார்கள். 21 ஆவது சினிமாவாக புதிய செய்தியையும், புதிய அனுபவத்தையும் உணர்வுகளையும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படியான புதிய அனுபவத்தைத் தரு-கின்ற படங்களை மக்கள் கைவிட்டதாக இங்கு வரலாறே இல்லை. மாபெரும் வெற்றிப்படமாக அதை மாற்றிவிடுவார்கள். அண்மைக்காலமாக அதற்கான உதாரணங்களாக நிறையப் படங்களைச் சொல்ல முடியும். எனவே ஹபீபி வணிக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெரும் என்பது எங்கள் நம்பிக்கை.
ஹபீபி வெகுமக்களிடம் சென்றடையும் என நம்புகிறீர்களா?

வெகுமக்கள் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல சினிமா பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் இருக்கின்றார்கள். இது நூறாண்டுகளாகப் பேசப்படாத வாழ்க்கை. இங்கிருக்கக்கூடிய பெரும்பான்மையான இந்துக்கள், பிற மதங்களைச் சார்ந்தவர்கள் தினமும் தங்களைச் சுற்றியிருக்கும் பள்ளிகளிலிருந்து பாங்குச் சப்தத்தைக் கேட்டிருப்பார்கள். தாங்கள் பணி செய்யும் இடங்களிலோ, வசிப்பிடங்களிலோ, பயணங்களிலோ,உணவகங்களிலோ இஸ்லாமியர்களை அன்றாடம் சந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள். நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். ஐந்து பேரில் இரண்டு முஸ்லிம் நண்பர்கள் இருப்-பார்கள். தங்களுடைய அண்டை வீட்டாராகிய, நண்பர்களாகிய முஸ்லிம்களின் கதை வரவில்லை என்ற ஏக்கம் அவர்களுக்கும் இருக்கின்றது.
இன்றிருக்கும் அரசியல் புற அழுத்தம் காரணமாகவும் இந்த மக்களுக்கான ஒரு படம் வர வேண்டும் என்று விரும்பக்கூடியவர்களாகவும், எந்தப் புதிய படம் வந்தாலும் பார்க்கும் இடத்திலும் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. நிச்சயம் இது எல்லா மக்களிடமும் சென்றடையும்.
பாடல்கள், பரபரப்பான காட்சிகள், மனதைத் தொடும் காதல் காட்சிகள் என இந்தப் படம் முழுவதுமே ஒரு மையநீரோட்டத்திற்கு உள்ளே இருந்து பேசுகிறது. குறிப்பிட்ட மக்களுக்கான படம் என்று இதனைச் சுருக்குவதை நான் விரும்பவில்லை. வணிக ரீதியான செயல்பாடாக இருந்தால் மட்டுமே இது தொடர் செயல்பாட்டிற்குள் வரும். அப்போது-தான் தொடர்ந்து பலரும் இதுபோன்ற படங்களை இயக்குவார்கள். எனவே இதை வெற்றிப்படமாக மாற்றுவதற்கான வணிக சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று, அதே வேளையில் மசாலாத்தனமான படமாக இல்லாமல் ஃபீல் குட் என்ற வகையில் தரமான படமாக உருவாக்கியிருக்கின்றோம்.இதுவரை படம் பார்த்தவர்கள் இந்தப் படம் மிக நன்றாக இருக்கிறது. வணிக ரீதியாக வெற்றியடையும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு மக்கள் ஒரே கலாச்சார, உணவு, பழக்க வழக்கங்கள் என்று திட்டமிட்டு சுருக்கப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் தங்களுடைய வேர்களைத் திரும்பித் தேடக்கூடிய மனிதர்களாகவும், தங்களுடைய மதிப்பீடுகளைத் திரும்பிப் பார்க்கக்கூடிய, மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு காலமாக மாறியிருக்கிறது. நிச்சயமாக இந்தப்படம் வணிக ரீதியாக வெற்றியடையும், அதற்கான எல்லாத் தன்மைகளும் படத்தில் இருக்கிறது.
(அடுத்த இதழில் நிறைவடையும்)