https://youtu.be/DNQUHKD40FY?si=rTPJs2mlr9mbUYy-
பிறக்கும் போதே யாரும் துறவறம் மேற்கொள்வதில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் துறவற வாழ்கையைத் தேர்ந்தெடுக்கின்றனர். எந்தப் புள்ளியிலிருந்து உங்கள் ஆன்மிக வாழ்க்கை தொடங்கிற்று?
எல்லாம் இறைவனின் அருள்தான். அதன்பிறகு என்னுடைய பெற்றோர்களின் ஆசி. நான் ஆர்.சி பள்ளிக்கூடத்தில் 8ஆம் வகுப்பு முடித்தேன். ஆர்.சி பள்ளிக்கூடம் நெறிசார்ந்த ஒரு வாழ்க்கையை எனக்குக் கற்றுக் கொடுத்தது. அண்ணனும் அக்காவும் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்கள். நான் ப்ளஸ் 2 முடித்த பின்னர் ஐ.டி படித்து ஒரு வேலைக்குச் சென்றேன். இயல்பாகவே எல்லோரையும் போல் நானும் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், குடும்பம், கல்யாணம், குழந்தை என சமூகத்தில் அந்தஸ்தாக வாழ வேண்டும் என இருந்தேன். ஆனால் நான் கோயம்புத்தூரில் அப்ரண்டீஸ் ஆக வேலை பார்த்த போது அங்கு சமயம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் ஒரு பார்வை
எனக்குக் கிடைத்தது. நாங்கள் வசித்த தெருவில் உள்ள அம்மன் கோயில் ஆன்மிக ரீதியான ஒரு மையப்புள்ளியாக இருந்தது. அந்த அம்மன் கோயிலில் நான்வெஜ் சாப்பிட்டுவிட்டு நெத்தியில் திருநீர் பூசிக்கொண்டு வழிபாடு செய்து கொண்டிருந்த அடியேனை அதே ஊரில் இருக்கின்ற ஒரு சிவன் கோயிலை நோக்கிக் கொண்டு சென்று விட்டது. அந்த கோயிலில் பூசாரியாக இருந்த ஒரு தம்பியோட நட்பு ஏற்பட்டது. அங்கு எனக்கு திருவாசகம் கிடைத்தது. இது என்ன நூல் என்று படிக்கத் தொடங்கிய பிறகு ஆன்மிகம் நோக்கி நெருக்கம் ஏற்பட்டது. பாடல் பெற்ற தலம் என்றால் என்ன? நால்வர் என்றால் யார்? நான் யார்? திருமுறைகள் எதற்காக? என்கிற ஒரு தேடல். ஆன்மிகம் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுடர் விட்டது.
நீங்க பிறந்தது வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலி மாவட்டம். அங்கிருந்து இப்போது கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்துள்ளீர்கள். இந்த நகர்வு குறித்துச் சொல்லுங்களேன்!
படிப்பு முடிந்து திருப்பூரில் பேப்ரிக் பனியன் மெட்டீரியல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது ஆதரவற்றவர்களுக்காகச் சேவை செய்யும் அன்பு இல்லம் குறித்த துண்டறிக்கையைப் பார்த்தேன். அந்த இல்லத்திற்கு நேரில் சென்றேன். அங்குள்ள பொறுப்பாளர் ‘ உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்தப் பணிக்கு வர வேண்டும். இளமைக் காலத்தை நாட்டுக்காகத் தாருங்கள்’ என்று கேட்டார். இது எனக்குப் பிடித்தது. ஆன்மிகம் இருக்கின்றது சமூகமும் இருக்கின்றது எனச் சொல்லி அவர்களுடன் எட்டுமாதம் பயணித்தேன்.
ஆறு மாதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் EPIC நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது காரியாப்பட்டி தாசில்தாருடன் தொடர்பு ஏற்பட்டது. நிர்வாகம் என்றால் என்ன? வட்டாட்சி அலுவலரின் பணி என்ன? தாசில்தாரின் பொறுப்புகள் என்ன? என்பதை அறிந்து கொண்டேன். ஆன்மிகம், நிர்வாகம், சமூகப் பணிகள் என்ற தலப் பயணத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 23ஆவது குரு மகா சன்னிதானம் அவர்களுடைய தொடர்பு கிடைத்தது. அப்போதுதான் கும்பகோணத்திலுள்ள அன்னை கருணை இல்லத்தின் தொடர்பு கிடைத்தது. இன்னம்பூரில் தங்கியிருக்கும் படி குருக்கள் கேட்டார். அப்படித்தான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.
இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிரான போராட்ட அலை மிக வீரியமாக வீசிய பொழுது பல்வேறு கூட்டங்களில் நீங்களும் கலந்து உரையாற்றியுள்ளீர்கள். துறவறப் பாதையில் பயணித்தாலும் இஅஅ போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு ஓர் இஸ்லாமியச் சகோதரரின் வீடு தான். நாங்கள் யாரும் அவர்களை அந்நியர்களாகப் பார்க்கவில்லை. அவர்களையும் அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி, என்ற முறையில் தான் கூப்பிட்டுப் பழகினோம். அவர்கள் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் நாங்கள் கலந்து கொள்வோம் எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு நிகழ்வு என்றால் அவர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் தான் பண்டிகை நேரங்களிலும் உணவுகளைப் பரிமாறிக் கொள்வோம். எங்கள் தெருவில் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் கலந்து சமூக நல்லிணக்கத்தோடு தான் வாழ்ந்து வருகிறோம். இதுதான் இந்தியா. இதிலிருந்து யாரையும் வெளியேற்ற முடியாது. கும்பகோணத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மூலமாக யூனுஸ், ஐயூப்கான் போன்ற நிறைய இஸ்லாமிய நண்பர்கள் தொடர்பு கிடைத்தது.
ஓர் இஸ்லாமியரிடம் ‘நீ இந்தியனா இல்லையா’ என்ற கேள்வி எழுப்பும் போது அவரின் மனநிலை எப்படி இருக்கும் என நான் சிந்தித்தேன். ஒரு சமூகத்தை நோக்கி இப்படிப்பட்ட கேள்வி வரும் போது அது பள்ளிக் கூடங்களில் உள்ள இஸ்லாமிய மாணவர்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கும். சக மாணவர்கள் நீங்கள் எல்லாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை எனப் பேசினால் அந்தக் குழந்தையோட மனநிலை எப்படி இருக்கும். இது சமூகத்துக்கு மிகப்பெரிய தீங்கு என்று நான் உணர்ந்தேன். இதை மக்களிடையே கொண்டு சேர்க்க CAA களம் எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நாம் அவர்களோடு இருக்க வேண்டும் என்பதால்தான் CAAவுக்கு எதிரான இருபதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளேன்.
CAA எதிர்ப்புக் கூட்டங்கள் மட்டும் இல்லாமல் மீலாது விழா, கிறித்துமஸ் நிகழ்விலும் கூட கலந்து கொள்கின்றீர்கள் இல்லையா?
ஆமாம். ‘நீங்கள் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிக்குச் செல்வதை விட பிற மத நிகழ்வுகளுக்குத் தான் அதிகமாகச் செல்கிறீர்கள்’ என்று சில நண்பர்கள்கூட கேட்பதுண்டு. ‘இங்கு மட்டுமல்ல அங்கும் இறைவனைக் குறித்துத்தான் பேசுகிறோம்’ என்று அவர்களுக்குப் பதிலளிப்பேன். அண்மையில் கபிஸ்தலத்தில் சுயமரியாதை, பகுத்தறிவு பேசக்கூடிய பெரியாரிய இயக்கம் நடத்திய நிகழ்வில் நான் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு பேசினேன்.
நான் ஓர் இடத்திற்கானவன் மட்டும் அல்ல. அனைத்து மக்களுக்குமானவனாக இருக்க வேண்டும் என இறைவன் என்னைத் தயார்படுத்துகிறான். பல்வேறு மதங்களைப் பின்பற்றக் கூடியவர்களாக இருந்தாலும், கடவுளை மறுக்கக் கூடிய நாத்திகர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் அறம் இருக்கின்றது. அன்பு இருக்கின்றது என்றால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது அறக்கோட்பாடு ஒருங்கிணைந்த அன்பு என அனைத்தும் பக்தியின் ஒரு பிரிவுதான். இந்த அற, ஒழுக்க நெறியுடன் ஒருவர் சமய நல்லிணக்கத்திற்கான நிகழ்வுகளுக்கு அழைத்தால் நான் அதில் கலந்து கொள்வதை மகிழ்வாக நினைக்கிறேன்.
துறவறம் மேற்கொண்ட ஒரு ஆன்மிகவாதி மதுவிற்கு எதிராக இவ்வளவு வீரிய மாகக் களமாடுவதற்கான காரணம் என்ன?
துறவறம் பூண்ட ஆன்மிகவாதிகள் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. தவறு என்று தெரிந்தால் அதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் நபிகளார் சொல்லியது போல மனதளவிலாவது வெறுக்க வேண்டும். சாதுவாக இருப்பது மட்டும் சாது அல்ல. சாதுவின் கடமைகளைச் செய்வது தான் சாது. அதாவது எங்காவது தவறு நடக்
கின்றது என்று தெரிந்தால் அதைத் தடுக்க வேண்டும். மது ஒரு தனி நபருக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தீங்குதான். மது என்பது தீமைகளின் தாய் என்று நபிகளார் சொன்னது போல் மதுதான் தீமைகளுக்கான ஆணிவேராக இருக்கின்றது.
கொரோனா நேரத்தில் மதுபானக் கடைகளை மூடிவிட்டு பின்னர் சில தளர்வுகளுடன் திறந்த பொழுது எங்கள் சகோதரர்கள் அனைவரும் ‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.மதுபானக் கடை வாசலை மிதிக்க வேண்டாம்’ என்கின்ற பதாகைகளை டாஸ்மாக் கடை வாசலில் ஏந்தி நின்றோம். விழாக் காலங்களில் தான் அதிகமாக மது விற்பனை நடக்கின்றது. ஆதலால் தான் ‘மது இல்லாத் தீபாவளி’ என்ற முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறோம்.என் உறவினரின் சகோதரியின் கணவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் அவளைத் துன்புறுத்தியதால் அவள் தற்கொலை செய்து கொண்டாள். தமிழ்நாடு அளவில் வெற்றிபெற்ற இரண்டு மாணவர்கள் டெல்லியில் ஸ்காலர்ஷிப் பெற்று படிக்கச் சென்றனர். அதில் ஒரு மாணவர் போதைப் பழக்கத்தினால் தன் வாழ்க்கையை இழந்ததை நான் பார்த்தேன்.
இதுவெல்லாம் என்னை வெகுவாகப் பாதித்தது. புராதனம் வாய்ந்த மகாமகம் கோயிலைச் சுற்றியும் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருந்தது. அதை போராடி, மூடச் செய்தோம். புனிதம் வாய்ந்த கோயில்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் மதுபானக் கடைகள் நடத்துவதற்கு எதிராக வெறும் விழிப்பு உணர்வுப் பரப்புரை செய்தால் மட்டும் போதாது. நாம் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ‘கொரானா காலக்கட்டத்தில் அனைத்துக் கடைகளும் மூடிய நிலையில் டாஸ்மாக் வருவாய் அரசு நிர்வாகத்திற்குத் தேவை என திமுக, அதிமுக இரு ஆட்சியிலும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். ‘கள்ளுக்கடை காசிலேதான்டா கட்சிக் கொடி ஏறுது போடா’ என்று
சினிமா பாடல் ஒன்று உண்டு. ஆனால் அரசாங்கமே டாஸ்மாக் வருமானத்தில் தான் நடக்கிறது. அப்படிப் பார்த்தால் தேசியக் கொடியே டாஸ்மாக் வியாபாரத்தில் தான் பறந்து கொண்டிருக்கிறது’ என பேசினேன். தேசியக் கொடியை அவமதிப்புச் செய்ததாக என்மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஓர் அரசாங்கம் வருமானத்திற்காக மதுவை விற்பனை செய்கிறது என்றால் அது சிந்தனைத் திறன் அற்ற அரசு என்றே அர்த்தம். இன்றைக்குக் கட்சி வேறுபாடின்றி மதுபான ஆலையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே மதுவின் பெரும்தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன் பூரண மதுவிலக்கு வேண்டி அரசை நோக்கி போராடவும் செய்கிறோம். மதுவை ஒழிக்காமல் ஓயமாட்டோம்.போதைப் பொருள்கள் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இதற்கு எதிராகவும் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்புடன் கைகோர்த்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.
நீங்கள் காவி உடை அணிந்துள்ளீர்கள். ஆனால் இன்றைக்குக் காவி என்பது வெறுப்பின் வண்ணமாக முன்னிறுத்தப்படுகிறது. இரண்டையும் எப்படி வேறு படுத்திப் பார்ப்பது?
இந்து மதம் சைவம், வைணவம் என எல்லோரையும் ஒருங்கிணைத்தது. ஆகையால் இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி உரிமை கோருவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் தாமரை என்பது ஒரு தேசிய மலராக இருப்பினும் அது ஓர் அரசியல் கட்சியின் சின்னமாகவும் இருக்கிறது. இந்த அரசியல் கட்சியின் நகர்வு மற்ற சகோதரர்களின் எண்ணத்திற்கும், நோக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிராக இருக்கின்றது. காவியும், தாமரையும் தனிப்பட்ட இயக்கத்திற்குச் சொந்தமானது இல்லை என்பதை நான் நிறைய மேடைகளில் கூறியுள்ளேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது மிக எளிதான ஒரு விஷயம். ஏனெனில் தமிழக மக்கள் ஃபாசிஸத்தையும் மத வெறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஃபாசிஸத்தைப் பேசக்கூடியவர்கள் நமக்கானவர்கள் அல்ல என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். ஃபாசிஸத்தையும், சமய விரோதப் போக்கையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் மட்டும்தான் சரி. மற்றவர்களை துவேஷத்துடன் பார்க்கும் போக்கு விரும்பத்தக்கதல்ல. மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தைத் தூக்கி பிடிக்கக் கூடிய அரசை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஃபாசிஸத்தை வீழ்த்தக்கூடிய ஆற்றலை இறைவன் வழங்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த ஃபாசிஸத்தை வீழ்த்த வேண்டும்.
இஸ்லாம் குறித்த உங்கள் பார்வை என்ன?
ஓரிறைக் கோட்பாடு எல்லா மதங்களிலும் இருக்கின்றது. ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என திருமூலர் சொன்னதைப் போல் இஸ்லாத்திலும், சைவத்திலும், கிறித்தவத்திலும், யூதமதத்திலும் இதே கோட்பாடு பின்பற்றப்படுகின்றது. அல்லாஹ், இயேசு கிறிஸ்து, சிவன், விஷ்ணு எனப் பல தெய்வங்களை வணங்கினாலும் அனைவருமே ஓர் இறைக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றனர். திருமந்திரம் சொல்லுகின்றது பரம்பொருள் ஒன்றுதான். பெயர் பலவாக இருந்தாலும் பல கால கட்டங்களில் இருந்து ஆளும் பரம்பொருள் ஒன்றுதான். அனைத்து சமயமும் ஒன்றுக்கொன்று வரலாற்று ரீதியாக ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றுபட்டு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டாலே அனைவரும் ஒற்றுமையாக வாழலாம்.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுதி உள்ளீர்கள். இந்த எண்ணம் எப்படி வந்தது?
காட்டுமன்னார்குடி அருகில் ஆயக்குடி குணவாசல் என்ற கிராமத்தில் பள்ளிவாசல் திறப்பில் அழைப்பின் பெயரில் நாமும் அதில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் என்னிடம், ‘நீங்கள் ஏதாவது புத்தகம் எழுதி இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டனர். சைவம் சார்ந்து சிறு சிறு நூல்கள் எழுதி உள்ளதைத் தவிர சமய நல்லிணக்கம் என்ற அடிப்படையில் புத்தகம் எதுவும் எழுதியிருக்கவில்லை. அவர்கள் இப்படிக் கேள்வி கேட்டவுடன் என் மனதில் நாம் இன்னும் ஏதோ ஒரு வேலையைச் செய்யாமல் விட்டு விட்டோமோ என்ற ஏக்கம் ஏற்பட்டது.
நான் திருக்குர்ஆன், பைபிள் என அனைத்தையும் தினமும் படிப்பேன். ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் பொழுதும் ஒவ்வொரு வசனம் குர்ஆனிலிருந்தும் பைபிளிலிருந்தும் வாசிப்பேன். சமய நல்லிணக்கத்தை பேசுகின்றோமே தவிர நாம் அதைக் கடைப் பிடிக்கின்றோமா? என கேள்வி எழுந்தது. அந்த எண்ணத்தில் இதைத் தினமும் செய்து வருகிறேன். மனித குலத்தின் முன்மாதிரி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற தலைப்புக் கொடுத்தனர்.
இந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதற்காகக் குறிப்புகள் எடுத்தேன். வாசித் தேன்; பேசினேன். அன்று நான் பேசியதைத் தொகுத்து இரண்டு அணிந்துரைகளுடன் ஒரு புத்தகமாக எழுதினேன். சகோதரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. நபிகளாரின் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றது. அவர்களின் திருமணமாக இருக்கட்டும் நாட்டைக் கைப்பற்றியதாக இருக்கட்டும். அதற்கு நாம் உரிய பதில் அளிக்க வேண்டும்.
எப்பொழுதும் வரலாற்றை அந்தக் காலகட்டத்தில் உள்ள சூழலையும் நாட்டு நடப்புகளையும் வைத்துப் பார்க்க வேண்டும். அன்றைக்கு அங்கு உள்ள திருமண முறை எப்படி இருந்தது எனப் புரிந்து கொண்டால்தான் நம்மால் இந்தக் குற்றச் சாட்டிற்கான உரிய பதிலைப் பெற முடியும். நபிகளார் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்ததாக விமர்சனம் செய்கின்றனர். ஆனால் நம் இந்தியாவிலும் கூட அன்றைய சூழலில் நிறைய சிறுவயதுத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. பாரதியாருக்குத் திருமணம் நடக்கும் பொழுது வயது என்ன? புராணங்களிலும் இதே போல் நம்மால் நிறையக் கூற இயலும்.அப்படியே நமக்கு ஐயம் ஏற்பட்டால் வரலாற்றிலிருந்து தெளிவு பெறலாம். இல்லையெனில் மார்க்க அறிஞர்களிடமே அதைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர ஒன்றும் தெரியாமல் விமர்சனம் செய்வது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.
சந்திப்பு:
வி.எஸ். முஹம்மத் அமீன்