மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தொண்டு நிறுவனங்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்
ஐ. ஜலாலுதீன், 16 - 31 டிசம்பர் 2023


ஐ. ஜலாலுதீன்

 

  • அண்மையில் சென்னையைப் பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய மிக்ஜாம் புயல், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இந்த வரலாறு காணாத மழை சென்னை மட்டுமல்ல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்தது. புள்ளிவிவரங்களின் படி மூன்று நாள்களில் 340 மிமீ பதிவாகியிருக்கிறது. இன்னும் ஒரு சில மணிநேரம் மழை அதிகரித்திருந்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத பேரிழப்பைச் சந்தித்திருக்கும். அத்தகைய பேராபத்திலிருந்து காத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். இப்புயலினால் சோழிங்கநல்லூரிலிருந்து எண்ணூர் வரையிலான தடங்கள் மிக அதிகமாகப் பாதிப்பு அடைந்திருக்கிறது. இவ்வளவு நாள்கள் கழித்தும் பல இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. புழல் ஏரி தனது கொள்ளளவைத் தாண்டி மழைநீரை வெளியேற்றிய காட்சிகள் இன்னும் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

 

  • உங்களால் மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைக் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்துடன் ஒப்பீடு செய்ய முடிகிறதா?

2015ஆம் ஆண்டு மழை வெள்ளம் சென்னையில் தொடங்கி கடலூர் வரை நீடித்தது. அதனால் மிக அதிகமான சேதங்கள் ஏற்பட்டன. 2015இல் மழை பரவலாகக் கொட்டித் தீர்த்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மழை மிகவும் அடர்த்தியான மேங்கள் சூழ்ந்து குறிப்பிட்ட இடத்தில் கொட்டித் தீர்த்தது. இது ஆய்வுகளின் அடிப்படையில் குறைவான பாதிப்பைத் தந்திருந்தாலும், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டிசம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வசிப்பதற்குத் தகுதியற்றவையா என்ற அச்சத்தைச் சாமானிய மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இயற்கைச் சீற்றம் மனிதனால் அளவிட முடியாதது. மிகவும் வளர்ந்த நாடுகளே இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களில் திக்குத் தெரியாமல் தவிக்கும் போது நாமும் இதைக் கடந்து தான் போகவேண்டியுள்ளது. ஆனால் இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பாதியென்றால், நாம் முறையாக பொது இடங்களைப் பராமரிக்காததனால் ஏற்படும் விளைவுகள் மீதியாகும். இவற்றை MAN MADE DISASTER என்பார்கள்.

அதுபோல் நாம் பயன்படுத்தும் பகுதியின் நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். குப்பைகளையும் பிற கழிவுகளையும் முறையாகக் கையாள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். சாலைகளிலும் தெருக்களிலும் எத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள், நாப்கின்கள், பிளாஸ்டிக் கழிவுகள், மின் உபகரணக் கழிவுகள் எனப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். இயற்கைச் சீற்றங்களின் ஆபத்துகளிலிருந்து நமது தலைமுறையினரைக் காக்க இப்போதே நாம் திட்டமிடலுடன் தயாராக வேண்டும். 

 

  • 2015 சென்னை பெருவெள்ளத்தின் போது பல தன்னார்வலர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் களத்தில் நின்று பல உதவிகளைச் செய்தன. அதிலும் குறிப்பாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) மிகப்பெரிய அளவில் களப்பணியாற்றின. ஆனால் இம்முறை தன்னார்வலர்களின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாகத்தானே இருந்தது!

கடந்த முறை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின் காரணமாக பெருவெள்ளம் சென்னையை முழுவதுமாகச் சூழ்ந்து விட்டது. 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் நேர்ந்தன. சென்னைக்கு வெளியிலிருந்து எந்தப் பொருளும் உள்ளே கொண்டுவர முடியாத அளவிற்கு ஐந்து நாள்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டிருந்தது. மீட்புப் பணிக்கு மிகவும் தேவை ஏற்பட்ட நேரம் அது. எனவே தன்னார்வலர்கள் பெருமளவில் களமிறங்கினார்கள். இப்போதும் பல பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் களப்பணியாற்றி உள்ளன.

தற்போது தொண்டு நிறுவனங்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் களத்தில் பணியாற்றுவதில் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிநாடுகளின் உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கான சூழல் குறைந்துள்ளது. இது மிக ஆபத்தான அறிகுறி. அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்தால் தான் இத்தகைய பேரிழப்புகளிலிருந்து மீளமுடியும். இவ்விசயத்தில் தமிழ்நாடு அரசு மிக அதிகக் கவனம் செலுத்தி தொண்டு நிறுவனங்களை அரசியல் ஆதாயத்தின் பிடியிலிருந்து காத்து உற்சாகப்படுத்த வேண்டும்.

கடந்த 2015இல் போதும் என்று சொல்லும் அளவிற்கு உதவிகள் வந்து குவிந்தன, அந்த அளவிற்குத் தொண்டு நிறுவனங்கள் பணிகளைச் செய்ய வாய்ப்பிருந்தது. இத்தகைய நெருக்கடியைக் கடந்தும் சில தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமிய அமைப்புகள், முஸ்லிம் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற பேருதவிகளைச் செய்து வருகிறார்கள். 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை பெருநகரத் தலைவர் அதாவுல்லாஹ் தலைமையில் மழை நின்ற நாளிலிருந்து களத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், SIO, சாலிடாரிட்டி தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த 2015இல் திட்டமிட்டு பணியாற்றியது போலவே இப்போதும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இம்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்வதற்குத் திட்டமிடவில்லை. ஏனெனில் இம்முறை எல்லாப் பகுதிகளிலும் சாக்கடைக் கழிவுகள் அதிகமாக மழைநீரில் கலந்திருந்ததால் அதனைச் செய்ய இயலவில்லை. வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் படகுகள் மூலமாக மக்களை மீட்கும் பணிகளில் எங்களது தொண்டர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதுவரை 20,000க்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள், பால் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், கொசு வலைகள் போன்றவற்றை மக்களுக்குக் கொடுத்து உதவி வருகிறோம். தற்போது ஆயிரக்கணக்கான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. வடசென்னையில் கார்கில் நகர், அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர், அத்திப்பட்டு, ராஜீவ்காந்தி நகர், ஜமாலியா, வீனஸ், திரு.வி.க நகர், வண்ணாரப்பேட்டை, ஈஸ்வரன் நகர், காந்திநகர், மணலி புதுநகர், இந்திரா நகர், செங்குன்றம் பாலவாயில் போன்ற பல பகுதிகளில் நமது பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேடவாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஜமாஅத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ பாதிக்கப்பட்ட மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எவ்வாறு வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுக்க உள்ளது? பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான ஜமாஅத்தின் திட்டம் என்ன?

5000 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய கிட், பாய், போர்வை முதலியவற்றைக் கொடுப்பதற்கும் குறைந்தது 10,000 பள்ளி மாணவர்களுக்குச் சீருடை, புத்தகப்பை வழங்கவும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக மருத்துவ உதவிகள் செய்துள்ளோம். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எங்களது மொபைல் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவ உதவிகளைத் திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்றவற்றின் சீரமைப்பு, சிறுதொழில் வணிகர்களுக்கான உபகரண உதவிகள் போன்ற பணிகளைத் திட்டமிட்டு வருகிறோம். வசூலிக்கப்படும் நன்கொடைகளைப் பொறுத்து அவற்றை வீரியமாகச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

 

  • அரசிடமும் பொதுமக்களிடமும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

இயற்கை வளங்களைக் காப்பது ஒவ்வொருவருடைய கடமை என்பதை மறந்துவிடாமல் செயல்படுவோம். இந்தப் பணிகளில் பொதுமக்கள் எங்களுக்கு பொருளாதார ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

(Account Name : RELIEF FUND JIH TN 

Account Number : 0912201012204, Canara Bank,

IFSCcode: CNRB0000912 என்ற வங்கிக் கணக்கில் உங்களது உதவித் தொகைகளை அனுப்பலாம்.

இம்முறை அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. அதற்குப் பாராட்டுகள். இன்னும் பணிகள் முடியாமல் இருப்பதாலும், ஆங்காங்கே மெட்ரோ பணிகள் நடந்து வருவதாலும் இப்பாதிப்பைத் தடுக்க இயலவில்லை. அவர்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது மறுப்பதற்கல்ல. 

மாநில முதல்வர், அரசிற்கு மிகப்பெரிய வேண்டுகோள் என்னவெனில் மக்கள் நலத்திட்டம் சார்ந்த பணிகள் இலஞ்சம், அத்துமீறல் எதுவுமின்றி மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைக் குறிப்பிட்ட காலங்களில் முடிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர்களது பணிகளையும் அங்கீகரித்து, இணைந்து செயலாற்ற வேண்டும். 

வாழும் மக்களுக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் இயற்கையைக் கொஞ்சம் மிச்சம் வைப்போம்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்