மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

சட்டத்திற்கு மாற்றமாக நான் எந்தக் காரியமும் செய்ததில்லை!
முன்னாள் வக்ஃப் வாரியத் தலைவர் M.அப்துல் ரஹ்மான் நேர்காணல், அக்டோபர் 16-31, 2024




கடந்த இதழ் தொடர்ச்சி...

 


வக்ஃப் வாரியப் பணிகளில் அரசின் தலையீடு இருந்ததா? திமுக அமைச்சர்கள் சிலரின் தலையீடு இருந்ததாகவும் கூறப்படுகிறதே..! மட்டுமின்றி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தந்த அழுத்தம்தான் உங்கள் பதவி விலகல்பின்னணியில் இருக்கிறது என்பது உண்மையா?

வக்ஃப் வாரியச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மிகக் கடுமையாக அறிக்கை விட்டதுடன், தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலும் கடுமையான விமர்சனங்களை எடுத்துவைத்தேன். ஒரு சொத்து வக்ஃப் சொத்தா இல்லையா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று திருத்தச் சட்ட மசோதாவில் இருக்கிறது. அப்படியானால் வக்ஃப் சொத்துகளை கபளீகரம் செய்வதற்குத்தான் இது பயன்படும் எனக் கடுமையாக இதை நாங்கள் எதிர்த்தோம்.

ஆனால் இதைக்கூட எந்த அளவுக்கு என் மீது அவதூறு பரப்பினார்கள் என்று சொன்னால் சில மாதங்களுக்கு முன்பாக ஒன்றிய அரசால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வக்ஃப் வாரியத் தலைவர்களுக்கான கூட்டம் வக்ஃப் வாரிய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி தலைமையில் நடத்தப்பட்டது. அக்கூட்டம் முடிந்தவுடன் அனைவரையும் புகைப்படம் எடுப்பதற்காக அழைத்தார்கள். அப்பொழுது நானும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இதை நானே என் முகநூலில் பதிவு செய்திருந்தேன். நான் பதிவு செய்த அந்தப் புகைப்படத்தை வக்ஃப் திருத்தச்சட்டம் கொண்டு வருவதற்கு அப்துல் ரகுமான் வக்ஃப் வாரிய அமைச்சர் ஸ்மிருதி இரானி இடம் சொல்லி பின்னர் தான் இத்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஒரு கற்பனைக் கதையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

வக்ஃப் நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியாது என்ற சட்டத்தின் அடிப்படையில் திருச்செந்துறை கிராமம் பாதிக்கப்பட்டிருப்பதாக கிரின் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு நோக்கி ஒரு பார்வை இருக்கிறது என்பது உண்மைதான். அதை தமிழ்நாடு அரசு எப்படிச் சந்திக்கவேண்டுமோ அதை அப்படிச் சந்திக்கும். அதற்கும் என் பதவி விலகலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதேபோல் அரசாங்கத்தின் அழுத்தம் அல்லது அமைச்சர்களின் அழுத்தம் என்று சொல்லுவதற்கு இங்கு இடமே கிடையாது. நான் என்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் தான் என்னை விடுவிக்கக் கோரினேன்.

திருச்செந்துறை கிராமத்தின் வக்ஃப் விவகாரத்தில் அங்குள்ள கலெக்டருக்கு முழு அதிகாரம் தரப்பட்டதாகவும் அந்த மாடலை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுகிறதே! திருச்செந்துறை கிராமம் இந்திய அளவில் பேசப்படுவதற்கான காரணம் என்ன?

அது ஒரு பொய்யான தகவல். திருச்செந்துறையை அவர்கள் மாடலாக எடுத்துக் கொள்ளவில்லை. வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது ஒரு வகை. வக்ஃப் சொத்துகளைத் தவறான ஆவணங்களில் கொடுத்து விற்பனை செய்யப்பட்டு இருப்பது மற்றொரு வகை. இந்த இரண்டு வகையில்தான் வக்ஃப் சொத்துகள் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதுடன் விற்பனை செய்யப்பட்ட சொத்துகளை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தான் முடிவெடுக்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக ஒரு காரியம் நடைபெற்றது. என்னவென்றால் வக்ஃப் சொத்துகளை இனிமேல் யாரும் விற்க முடியாது என்று அந்த சர்வே நம்பர்கள் அனைத்தையும் குறித்து பூஜ்ய மதிப்பு என அனைத்து ரிஜிஸ்டர் ஆபீஸ்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.

இதன் தொடர்ச்சியாகத் தான் ஒரு பெரிய பரப்பளவு கொண்ட திருச்செந்துறை கிராமம் ஒரு மிகப்பெரிய முஸ்லிம் ஜமீன்தாரால் வக்ஃப் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள பதிவின் மூலம் அறியலாம். எனவே அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இனிமேல் சொத்துகளை விற்கவோ வாங்கவோ முடியாது என்கிற தடை ஏற்பட்ட சூழலில்தான் இந்தப் பிரச்னை பேசப்பட்டது. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சொத்து வக்ஃப் செய்யப்பட்டு இருக்கிறது. அப்போது வக்ஃப் செய்யப்பட்டது எல்லாம் சேர்த்துதான் 1954இல் வக்ஃப் சட்டம் உருவாக் கப்பட்டு இவற்றை முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டது. 1826, 1850களில் வக்ஃப் செய்யப்பட்ட சொத்துகள் கூட இப்போது இருக்கிறது. 1954இல் தானே வக்ஃப் சட்டமே வந்தது. எங்கள் பூட்டனார், பாட்டனார் எல்லாம் 100 ஆண்டுகளுக்கு மேல் அந்தச் சொத்தை அனுபவித்து வரும் சூழலில் எவ்வாறு நீங்கள் இதைத் தடை செய்ய முடியும் எனக் கேட்கிறார்கள்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் செய்யப்பட்ட சொத்துகள் பலராலும் சூறையாடப்பட்டு ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் என கைமாற்றப்பட்டு இப்போது ஆறாவது, ஏழாவது நபரிடம் வந்து அடைந்திருக்கும். ஆனால் அவர்களுக்குக் கூடத் தெரியாது இது வக்ஃப் சொத்து தான் என்று! அவர்கள் அதைச் சரியான முறைப்படி வாங்கி இருப்பார்கள். இதன் தொடக்கம் எங்கு என்று பார்த்தால் வக்ஃப் சொத்தாகத் தான் இருந்திருக்கும். இதையடுத்துதான் இனிமேல் நாம் இதை விற்க முடியாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் விற்கச் சென்ற போது இந்தப் பிரச்னை எழுந்தது. அப்போது 389 ஏக்கராக இருந்த வக்ஃப் செய்யப்பட்ட அந்தக் கிராமத்தில் இன்றைக்கு அறுநூறுக்கும் அதிகமான ஏக்கராக கிராமம் விரிவடைந்து இருக்கிறது. 389 ஏக்கர்கள் மட்டுமே வக்ஃப் இடம். மற்ற இடங்கள் அவரவர்களுடையதாக இருக்கும். இப்போது திருச்செந்துறை கிராமமே தடுக்கப்பட்டது எனப் பெயர் வரும்போதுதான் இந்த 600 ஏக்கரும் அதில் சேர்ந்து வந்து விடுகிறது. அது நியாயம் இல்லை அல்லவா! எனவே வக்ஃபிற்குச் சொந்தமான 389 ஏக்கர் எங்கு இருக்கின்றது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க சர்வே செய்தால் தான் முடியும். அந்தச் சர்வே செய்வதற்கான வேலைகள் தமிழ் நாடு முழுவதும் இந்தப் பிரச்னையால் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

வக்ஃப் வாரியம் கோயில் இடங்களை, இந்துக்களின் இடங்களை ஆக்கிரமித்து இருப்பதாகச் சொல்கிறார்களே!

இது ஒரு தவறான, பொய்யான தகவல். இதைப் பற்றியும் நான் தமிழ் தொலைக்காட்சிகளில் விரிவாகப் பேசி உள்ளேன். ஒரு மிகப்பெரிய நிலத்திற்குச் சொந்தக்காரர் அதை வக்ஃப் செய்கிறார் என்றால் அதில் ஒரு கோயில் இருக்கலாம். சர்ச், பள்ளிவாசல் இருக்கலாம். அவ்வாறு ஒரு கோயில் இருப்பது ஒரு பிரச்னையே இல்லை! அது அங்கேயே இருக்கட்டும். வக்ஃப் வாரியத்தில் இருந்து கோயிலைப் பற்றி எந்தப் பிரச்னையும் நாம் பேசவே இல்லை. கோயில் என்ற வார்த்தையைக் கூட நாம் எடுத்ததே கிடையாது. வெளியில் இருந்து இதை மதக் காழ்ப்பு உணர்வோடு ஒரு பிரச்னையாக உருவாக்க வேண்டும் என எண்ணுபவர்கள் அதற்குக் கோயிலைப் பயன்படுத்துகிறார்கள்.

திருநெல்வேலி  பகுதியிலுள்ள வக்ஃப் நில விவகாரத்தில் ஒரு பெண்ணுக்கு நீங்கள் ஆதரவாகச் செயல்பட்டதாகவும்,  அதற்கான ஆதாரமாக நீங்கள் பேசிய ஆடியோவும் வெளியிட்டுள்ளார்களே..!

திருநெல்வேலியில்  கான்மியான் வக்ஃப்க்கு சற்றேறக்குறைய 3000 ஏக்கர் நிலம் இருக்கிறது. அங்கு ஏற்கனவே முத்தவல்லியாக இருந்தவர் போலி ஆவணத் தைக் கொடுத்து முத்தவல்லியானதாக ஜமாத்தார்கள் வக்ஃப் வாரியத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதை முறையாக விசாரித்து குற்றச்சாட்டு உண்மை என அறிந்ததும் அவரை நீக்கிவிட்டு அந்த நிர்வாகத்தை வாரியம் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதனால் ஆத்திரப்பட்ட அவர் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக நான் அலைப்பேசியில் பேசிய உரையாடலைத் தேடிக் கண்டுபிடித்து அதை வெளியிட்டுள்ளார். அதில் தவறாக நான் பேசி இருக்கவில்லை. வக்ஃப்க்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை வீணாக விட்டு வைப்பதற்குப் பதில் முறையாக வருமானம் ஈட்டக் கூடிய வகையில் குத்தகைக்கு விடலாமே எனக் கூறியதோடு என்னிடம் குத்தகைக்கு நிலம் கேட்டிருந்த ஆறேழு பேரை அப்போது முத்தவல்லியாக இருந்த அவரைச் சந்திக்கச் சொல்லியிருந்தேன். அதில் ஒருவர் தான் என் நண்பரின் பெண் உறவினர். ஆட்டு மந்தை வைப்பதற்கு ஐந்து ஏக்கர் நிலம் குத்தகைக்குக் கேட்டிருந்தார். ‘ஏற்கனவே காடு, முள்செடி மண்டிக் கிடந்த இடத்தை அவரே சரி செய்ய வேண்டி இருந்ததால் மூன்று மாத வாடகையைக் கழித்து விட்டுசட்டப்படி என்ன நடைமுறையோ அப்படிப் பேசி முடித்துக் கொள்ளுங்கள்’ என்று நான் அந்த முத்தவல்லியிடம் பேசிய ஆடியோவை வெட்டி ஒட்டி வெளியிட்டு என்மீது அவதூறு பரப்பியுள்ளார். உண்மையில் அந்தப் பெண்ணுக்கு இடம் பிடிக்காமல் அப்படி ஓர் ஒப்பந்தமே நடைபெறவில்லை. இடம் எதுவும் கொடுக்கப்படவில்லை. என்மீதுள்ள காழ்ப்புஉணர்வினால் ஒரு குடும்பப் பெண்ணை இணைத்துப் பேசியிருப்பது எவ்வளவு அநாகரிகம்.

வக்ஃப் நிலம் என்றாலே ஆக்கிரமிப்புக்கான நிலம் என்றாகிவிட்டது.வக்ஃப் நிலங்களை அரசு ஆக்கிரமித்து இருக்கிறது, பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன.  குறிப்பாக
அம்பானி வீடும் கூட வக்ஃப் நிலம் என்கிறார்கள்.  முஸ்லிம்களேகூட வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். இதற்குத் தீர்வுதான் என்ன?

இறைவனின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகள் தான் வக்ஃப் சொத்துகள். அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை முøறகேடாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்கிரமித்துக் கொண்டு அல்லது மிகக் குறைவான வாடகை கொடுத்து அனுபவிப்பவர்களில் முஸ்லிம்களும் இருப்பது வேதனைக்குரியது. இப்பிரச்னையை முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பார்ப்பதைக் காட்டிலும் பொதுமக்களுக்குப் பயனளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை அபகரிப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்குரியவர்கள். ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் நிலங்களை மீட்டெடுக்க நாங்கள் பல வழிகளில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டோம். தொடக்க காலத்திலிருந்தே இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால் இந்த அளவிற்கு ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.

ஒவ்வொரு முஹல்லாவிலும் கல்வி உதவி, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவி, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு நிலங்கள் தருவது,
குடிசையில் இருப்பவர்களுக்குச் சரியான வசதி செய்து தருவது என்பன போன்ற நல்ல சேவைகளைச் செய்யவே தங்களது சொத்துகளை வக்ஃப் செய்துள்ளார்கள். வக்ஃப் சொத்துகளின் மூலம் முறையாக இந்தச் சமுதாயம் பயனீட்டினால் யாரிமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.

பல பள்ளிவாசல் நிர்வாகங்கள் உண்மையாகவே வக்ஃப் வருமானத்தை முறையாகச் செலவு செய்து முறையாகக் கணக்குக் காட்டுகிறார்கள். ஒரு டீ குடிப்பதைக் கூட தன் சொந்தச் செலவில் செய்கிறார்கள். அந்த அளவிற்கு நேர்மையானவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. பள்ளிவாசல் சொத்தை அனுபவிக்கவும், பள்ளிவாசல் சொத்துகளை அபகரிப்பதும், தனக்கு வேண்டியவர்களுக்கு மிக மிகக் குறைவான வாடகைக்குக் கொடுப்பதுமான பலரும் இருக்கின்றார்கள். இவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னது போல சில அரசியல்வாதிகள், கார்ப்பரேட் பணக்காரர்கள் வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டிடங்கள் கட்டியிருப்பது எல்லாம் உண்மைதான். நெடுங்காலமாக அது அப்படியே விடப்பட்டு இருக்கிறது. இப்போதுதான் அது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. வக்ஃப் நில பாதுகாப்பு, மீட்புக்கு வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் வாரியத்திடமிருந்து அதிகாரப் பறிப்புக்காக இப்போது வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டுவரத் துடிக்கின்றார்கள் என்றால் இவர்கள் ஆக்கிரமிப்பு நிலங்களைப் பாதுக்காக்கத் துடிக்கின்றார்களோ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

வக்ஃப் சொத்துகளை முறையாகப் பராமரிப்பதன் மூலம், வருமானத்திற்கு வழி செய்வதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின்  மிகப்பெரும் தேவையை நம்மால் நிறைவு செய்ய இயலும் அல்லவா?

வக்ஃப் வருமானம் அந்தந்த வக்ஃப் நிறுவனங்களுக்கு உரியது. பள்ளிவாசல், தர்காக்கள், மதரசாக்கள் இப்படி எந்த நிர்வாகமானாலும் வக்ஃப் வருமானத்தை சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முஹல்லாவிலும் கல்வி உதவி, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவி, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு நிலங்கள் தருவது, குடிசையில் இருப்பவர்களுக்குச் சரியான வசதி செய்து தருவது என்பன போன்ற நல்ல சேவைகளைச் செய்யவே தங்களது சொத்துகளை வக்ஃப் செய்துள்ளார்கள். வக்ஃப் சொத்துகளின் மூலம் முறையாக இந்தச் சமுதாயம் பயனீட்டினால் யாரிமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய இராணுவம், இரயில்வேக்குப் பிறகு அதிக அளவு சொத்துகள் வக்ஃபிடம் இருக்கிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பதாக சச்சார் கமிட்டியின் அறிக்கை சொல்கிறது. எங்கிருந்து இவ்வளவு சொத்துகள் வந்தது என வகுப்புவாதிகள் கேள்வி எழுப்புகிறார்களே..!

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் பெரிய அளவில் நில உரிமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். முகலாயர் காலத்தில் கூட மிகப் பெரும் நில உடமையாளார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசுகளுக்கு இதைக் கொடுத்துவிட்டுப் போய் இருக்கலாம். மாறாக அவர்கள் பொதுமக்களுக்குப் பயன் படக்கூடிய வகையில் தங்களது சொத்துகளை இறை விருப்பத்தை, இறைவனிடம் நற்கூலியைப் பெரும் பொருட்டு வாரி வழங்கி இருக்கிறார்கள்.இறைவன் உனக்குக் கொடுத்திருக்கக் கூடிய சொத்துகளை நீங்கள் மட்டும் பயன்படுத்தக்கூடாது. சமூகத்தில் அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இதைக் கொடுக்க வேண்டும் அதுதான் தர்மம்; அதுதான் ஜகாத் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படையில் நம் முன்னோர்கள் பொது மக்களுக்குப் பயன்பாட்டுக்காகத் தங்களது பெரும் பெரும் சொத்துகளை வக்ஃப் செய்து இருக்கிறார்கள்.அதனுடைய கூட்டு எண்ணிக்கை தான் இந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. நிலத்துடைய மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க வக்ஃப் சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இராணுவத்திற்குப் பிறகு ரயில்வே துறைக்குப் பிறகு மிக அதிகமான அளவில் வக்ஃப் சொத்துகள் இருக்கின்றது என்றால் முஸ்லிம்களின் தயாளகுணமும், இஸ்லாத்தின் அறபோதனைகளுமே காரணம்.

உங்களுடைய அடுத்த கட்ட நகர்வு?

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் என்னும் இடத்தில் ஏறத்தாழ 100 ஏக்கரில் ஸாலிஹீன் அறக்கட்டளை மூலமாகக் கல்விக்கூடங்கள், அறநிலையங்கள் உருவாவதற்கõன பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மருத்துவக் கல்லூரியும், ஒரு பன்னோக்கு மருத்துவமனையும் உருவாவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அந்த இடத்தில் 50 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இலவசமாக எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனுடைய விரிவாக்கமும், மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கான முன்னெடுப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.வக்ஃப் வாரியத் தலைமைப் பொறுப்பேற்பதற்கு ஏறத்தாழ 6, 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திட்டம் இது. இந்த இடங்கள் வாங்கப்பட்டதைக் கூட வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து மருத்துவக் கல்லூரி கட்டுகிறார் என ஒரு பொய்ப் பரப்புரையை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அதை நம்புபவர்களும் இருக்கின்றனர். எந்தச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக நாம் இதைச் செய்கிறோமோ அந்தச் சமூகத்தைச் சார்ந்த சிலரே இதற்கு மதிப்பு தரவில்லை என்றாலும் பரவாயில்லை எதற்காக இந்த அளவிற்குத் தரம் இழந்து செயல்பட வேண்டும்? அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

சந்திப்பு :
வி.எஸ்.முஹம்மத் அமீன்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்