
கடந்த இதழ் தொடர்ச்சி...
* முஸ்லிம்களின் வீடுகளுக்குள் செல்ல முடியாது என்ற நிலையில் முஸ்லிம் சமுதாயத்தின் மூலைமுடுக்கெல்லாம் பதிவு செய்துவிட்டீர்களே எப்படிச் சாத்தியமானது?
முஸ்லிம்களின் வீடுகளுக்குள் செல்ல முடியாது என்ற கருத்தை நான் முற்றிலும் மறுக்கின்றேன்.இஸ்லாமியர்கள் குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கின்ற எத்தனையோ கற்பிதங்களைப் போல இதுவும் ஒரு கற்பிதமே!உண்மை அதுவல்ல.இஸ்லாமியர்கள் வீடுகள் என்றில்லை எந்த வீட்டிலும் ஓர் அந்நியர் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது.சினிமா குறித்த ஓர் அச்சம் என்பது எல்லாச் சமூகத்திலும் இருக்கிறது.
சினிமாவையே பார்த்திடாத,ஒரு குறும்படப் படப்பிடிப்பு கூட நடந்திடாத ஓர் ஊருக்குள்ளே அந்த ஊரைச் சாராத நூற்றுக்கும் அதிகமான தொழில்நுட்பக் கலைஞர்கள், லைட்ஸ்,கேமரா,கிரேன் உட்பட உபகரணங்களை எடுத்துச் செல்வது கடினமாகத்தான் இருந்தது.நெருக்கமாக இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள்,கூட்டாக
வாழும் மக்கள் மத்தியில் அதுவரை அவர்கள் பார்த்திடாத ஒரு படப்பிடிப்பை நிகழ்த்துவது சவாலான விஷயம்தான்.
அந்த ஊர் மக்களுக்கு மட்டுமல்ல சினிமா குறித்து எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கிறது.எல்லாக் காலங்களிலும் இஸ்லாமியர்கள் குறித்த புரிதல் இல்லாமல் எதிர்தரப்பில் நிறுத்துகின்ற படங்கள் தொடர்ச்சியாக தமிழ்ச் சினிமாவில் உருவாக்கப்படுகின்றது.இந்த உலகத்துடன் பொருந்திப்போகாத மனிதர்களாக அவர்கள் தனி உலகில் வாழ்வதைப் போல சினிமா இதுவரை காட்டியிருக்கின்றது.
நம்மைக் குறித்து தவறாகச் சித்திரிப்பதற்கு நாமே துணைபோய் விடக்கூடாது என அவர்கள் யோசித்திருப்பார்கள்.ஏனெனில் அதற்குமுன் அப்படியான அனுபவங்கள் இருக்கின்றது.அதற்குக் காரணமே இங்கு உருவாக்கப்பட்ட படங்கள்தான்.அப்படியான மனநிலையில் இருக்கும் மக்களிடம் அந்த அச்ச உணர்வைத் தவறு என்று சொல்ல வும் முடியாது.தொடர்ந்து காலம்காலமாக கல்லடிபடுகின்ற ஒரு சமூகம் தங்களை வைத்தே,தங்களுக்கு எதிராக சினிமா எடுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இருப்பது தவறல்ல.
அப்படிப்பட்ட சூழலில் அந்த மக்களிடம் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல.எல்லாரும் போல நாங்களும் இரத்தமும்,சதையுமான மனிதர்கள்தாம்.எங்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது.நாங்கள் வேறல்ல நாங்கள் ஏற்றிருக்கின்ற மார்க்கம்,எங்களுடைய வழிபாடு போன்றவைதான் வித்தியாசப்படுகின்றதே தவிர மற்ற படி வாழ்க்கை,இந்த உணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருப்பதைப் போல்தான் எங்களுக்கும் இருக்கின்றது.நாங்களும் மனிதர்கள் தாம் என்று அவர்களுக்குப் புரிய வைப்பதற்காக எங்களுக்கு ஓர் அவகாசம் தேவைப்பட்டது.அதைப் புரிந்துகொண்ட பிறகு மிகவும் ஒத்துழைத்தார்கள்.
இந்தப் பட உருவாக்கத்தில் கடையநல்லூர் மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக,மனப்பூர்வமான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள்.அவர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமே இல்லை.நிச்சயமாக வெவ்வேறு நிலப்பரப்பைக்கொண்டு வெவ்வேறு வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் வெவ்வேறு கதைகளைப் பேசுவதற்கு,அவர்களின் வாழ்விடத்திலேயே சென்று பதிவு செய்வதற்கு அனுமதிப்பதற்கான நம்பிக் கையை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது.
இந்தத் தயக்கத்தை உடைத்து இந்தப் படம் கடையநல்லூரில் எடுப்பதற்கு முக்கியமாக இரண்டு நபர்களைச் சொல்ல வேண்டும்.இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியர் அமீனும்,அவருடைய மாமா விஸ்வா ஷாபி அவர்களும் இந்தப் புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள்.அவர்கள் இல்லாமலும் இந்தப் படம் சாத்தியமே இல்லை.மிகவும் ஆத்மார்த்தமாக,பெரிய உழைப்பை அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள்.
* அண்டை மாநிலமான கேரளாவில் நிறைய இஸ்லாமிய வாழ்வியல் சினிமாக்கள் சாத்தியமாகும்போது தமிழ்ச் சினிமாவில் அது நிகழ்வதற்கு ஒரு நூற்றாண்டு பிடித்திருக்கிறதே..!
மலையாள சினிமாவில் இஸ்லாமியர் வாழ்வு சாத்தியமானதற்குப் பல காரணங்கள் உள்ளன.உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தபோதும் சாதி, மதம் கடந்து மொழியின் அடிப்படையில் ஒருங்கிணையக் கூடிய பண்பு அவர்களிடம் இருக்கிறது.இஸ்லாமியர்களும் அதிக அளவில் அங்கே இருக்கின்றார்கள்.ஒரு வணிக சினிமா சந்தைக்கான இடம் அங்கே இருக்கிறது.
அரசியலாகவும்,கலை பண்பாட்டுத் தளங்களிலும் அங்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு கணிசமான அளவு இருக்கின்றது.வைக்கம் முஹம்மது பஷீர்,ஷிஹாபுதீன் போன்றவர்கள் கலை,பண்பாட்டுத் தளத்தில் நீண்ட நெடிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.கலை,பண்பாடு அங்கு பெரும்தாக்கம் செலுத்துகிறது.அரசியல் நுண்ணுணர்வு கொண்டவர்களாக அவர்கள் இருப்பதால் தங்களுடைய பண்பாடு,கலாச்சாரம்,வாழ்வியல்,மதிப்பீடுகள் குறித்து இலக்கியமாகவோ,சினிமாவாகவோ பதிவு செய்வதை விருப்பமாகக் கொண்டிருக்கின்றார்கள். பெருவாரியாக அங்கு இருக்கக்கூடிய இந்து,முஸ்லிம்,கிறித்தவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையில் ஒன்றிணைந்து இருப்பதனால் புரிதலும்,இணக்கமும் இருப் பதும் ஒரு காரணம்.
எல்லாவற்றையும் கடந்து இஸ்லாமிய சினிமாவுக்கான வணிக வெளி அங்கு இருக்கிறது.கல்வி,வாசிப்புத்தளத்தில் அவர்கள் இருப்பதால் விசாலமான பார்வையும் அங்கு இருக்கிறது.தங்களைக் குறித்த விமர்சனங்கள்,முரண்கள் பதிவாவதை அனுமதிக்கும் மனப்பக்குவமும் அங்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது.எல்லாருடனும் இணைந்து வாழும் வாழ்வியல் இயல்பாகவே அங்கு சாத்தியமாகியிருக்கிறது.
‘அவங்க வேற,அங்க நாம செல்லக்கூடாது' என்பன போன்ற பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட கற்பிதம் இங்கு இருக்கின்றது.‘இஸ்லாமிய சினிமா இங்கு அந்நியமாகப் பார்க்கப்படும்,மற்ற மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்'என்ற உணர்வு தமிழ்நாட்டில் இருக்கிறது.கேரளாவில் அப்படி இல்லை.மம்முட்டி,பஹத் பாசில்,துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள்,தொழில் நுட்பக் கலைஞர்கள்,இயக்குநர்கள்,முதலீட்டாளர்கள் பெரும்பகுதியினர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அது தனித்துப் பார்க்கப்படுவதில்லை.
தங்களை முஸ்லிம் அடையாளங்களுடன் வெளிப்படுத்திக் கொள்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.தமிழ்ச் சினிமாவில் அப்படியான ஓர் அச்சம் இருக்கிறது. தலித்கள் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் இணைந்து வேலை செய்வது புரட்சியாகவும்,கலகக் குரலாகவும்,சமூக நீதியாகவும்,தேவையாகவும் பார்க்கப்படுகிறது.அவர்கள் எளிதில் இணைந்து பணியாற்றுவதில் புறவயமான தடைகளும் இல்லை.ஆனால் பொதுத்தளத்தில் இயங்குகின்ற இரண்டு இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்தால் வேறொன்றாகப் பார்க்கப்படுகிறது.சினிமா வாழ்வில் தனிமைப்படுத்தப்படுவோம் என்கிற பய உணர்வு இங்கிருப்பவர்களிடம் இருக்கிறது.பொது அடையாளம் என்பதை நம்புகிறார்கள்.பொது அடையாளம் என்பது ஒன்றும் இல்லை.
நீங்கள் என்னதான் பொது அடையாளத்துடன் இருந்தாலும் தனித்துத்தான் பார்க்கப்படுவீர்கள்.என்னுடைய பெயர் அபுல் ஹஸன்.என் தாயார் பெயர் நல்லமீரா.திமுக குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதாலும்,நல்ல தமிழ்ப் பெயர் வேண்டும் என்பதாலும்,நான் சிறுவயதில் முக்கியமான ஆளுமையாகப் பார்த்த திமுகவின் அன்றைய கழகக் கொறடா சம்சுத்தீன் என்ற கா.மு.கதிரவன் பெயரிலுள்ள ஈர்ப்பினாலும் மீரா கதிரவன் எனும் பொது அடையாளத்துடன் தான் இயங்குகிறேன்.ஆனால் நான் பொதுவாகப் பார்க்கப்படுவதில்லை.நான் எல்லாரையும் இங்கு குறிப்பிடவில்லை.ஒரு கலைஞனாக என்னைப் பார்ப்பவர்களும் இங்கு இருக்கின்றார்கள்.ஆனால் அதையும் தாண்டிய பார்வை பலருக்கும் இங்கு இருக்கிறது.
அதுபோல் இஸ்லாமியப் படம் எடுக்கும்போது இஸ்லாமிய சமுதாயத்திலிருந்தே எதிர்ப்பு கிளம்பிவிட்டால் தியேட்டருக்குப் படம் வராமல் போய்விட்டால் பெரிய முதலீடு இழப்பாகிவிடும் என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.இங்கு அதற்கான அரசியல் பார்வை போதாமை இருக்கிறது.அதனால்தான் நிறைய இஸ்லாமிய தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாழ்வைப் பதிவு செய்ய விரும்பவில்லை.
எல்லாவற்றையும் தாண்டி வியாபாரம்,அதிகாரத்திற்கு முன்னால் மதம்,சாதி எதுவும் இல்லை.வணிக ரீதியான பெரிய நிறுவனமாகவோ,நாங்கள் அணுகிய போது இஸ்லாமியப் படம் என்ற தயக்கத்தையும் தாண்டி முக்கியமான நடிகர்கள் இணைந்திருந்தாலோ எங்களுடன் இணைவதில் சிலர் ஆர்வம் காட்டியிருக்கலாம்.தங்கள் அடையாளங்கள்,வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நியாயமான தயக்கம் அவர்களுக்கு இருக்கலாம்.ஹபீபி அந்தத் தயக்கங்களை உடைக்கும்.மாற்றும்.நாமும் இதைச் செய்யலாம்,மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஆழமான நம்பிக்கையை,உறுதியை ஹபீபி தரும்.
* முஸ்லிம் சமுதாயம் சினிமாவிலிருந்து விலகி இருக்கும்போது ஹபீபியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருக்காதா?
இஸ்லாமியர்கள் இன்று கணிசமாக திரையரங்கிற்கு வரத் தொடங்கியிருக்கின்றார்கள்.அவர்களின் கைகளில் அலைப்பேசி இருக்கிறது. அதன் வழியாகவும் பார்க்கிறார்கள். குறிப்பிட்ட சாரார்தான் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டும் என்பது சரியல்ல. இஸ்லாமியர்கள் திரையரங்கிற்கு வருவதற்கு வேறுசில உளவியலான நம்பிக்கை
சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழல் அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் OTT தளங்கள் இன்று வந்துவிட்ட காலம்.ஊடகப் பயன்பாடு அவர்களிடமும் அதிகரித்து விட்டது.அரபு நாடுகளிலும் திரையரங்குகள் வந்துவிட்டன.எனவே எல்லைகளின்றி எல்லா இடங்களுக்கும் இப்படம் சென்று சேரும்.இஸ்லாமியர்கள் மத்தியிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெரும்.
இஸ்லாம் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் முஸ்லிம்களின் உண்மையான வாழ்வியலை பிற மதத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.இது இஸ்லாமியர்களுக்கான படம் அல்ல.எல்லாருக்குமான படம்.
* ஹபீபி ஒரு தொடர் செயல்பாடாக மாறுமா?
ஹபீபி தொடர் செயல்பாடாக மாற வேண்டிய தேவை இருக்கிறது.15 ஆண்டுகளுக்கு முன்பு தலித்கள் குறித்து தமிழ் சினிமா கொண்டிருந்த பார்வையும் இப்போதுள்ள பார்வையும் வேறாக இருக்கிறது.அதற்குக் காரணம் ரஞ்சித்,மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பார்வையை மாற்றியிருக்கின்றார்கள். அவர்களின் வருகையும்,படங்களும் பொதுமக்கள் மத்தியிலும் ஓர் அசைவை உருவாக்கியிருக்கிறது.
பழங்குடியினர்,தலித்கள்,விழிம்புநிலை மக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் இன்று வெறுப்பரசியலில் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.காஷ்மீர் ஃபைல்ஸ், கேரள ஸ்டோரி போன்ற இஸ்லாமிய வெறுப்பு சினிமாக்களை உருவாக்கி திட்டமிட்ட வெறுப்பை விதைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றது.இங்கிருக்கும் சமய நல்லிணக்கம்,ஒருமைப்பாடு தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு இடையூறாக இருக் கும் என்று நம்பக்கூடியவர்கள் இஸ்லாமியர்கள் குறித்த ஒவ்வாமையையும்,வெறுப்பையும் கட்டமைக்க காட்சி ஊடகங்களை ஆயுதமாக எடுத்திருக்கின்றார்கள்.
சச்சார் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக தலித்களை விடவும் பின்தங்கி இருக்கிறார்கள்.எண்ணிக்கையில் மட்டுமின்றி அதிகாரத்திலும் முஸ்லிம்கள் குறைவாகவே உள்ளனர்.
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவின் வழியாகச் சொல்லி வந்தவர்கள் அதை வெறுப்பரசியலாகக் கூர்மைப்படுத்தியிருக்கின்றார்கள். இஸ்லாமியர்கள் வாழ்வு தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது என்று போராடுவதால் மட்டுமே மாற்றம் உருவாகிவிடாது.அது சிறிய கவன ஈர்ப்பை உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் எதன் வழியாக உங்களை அவதூறு செய்கின்றார்களோ,ஒடுக்குகின்றார்களோ,அடையாளங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கின்றார்களோ அதன் வழியாக பதிலளிப்பதுதான் முக்கியமான நகர்வாக இருக்கும்.
ஒரு காட்டை வெட்டி தடத்தை உருவாக்குவதைப் போல தமிழில் இஸ்லாமிய சினிமா என்ற புதிய தடத்தை உருவாக்கியிருக்கின்றோம்.எல்லாப் படங்களுக்கும் ஒரு ரெபரென்ஸ் படம் இருக்கும்.ஆனால் தமிழ் திரையுலகில் ஹபீபிக்கான ரெபரென்ஸ் எதுவும் இல்லை.ஹபீபிதான் இனிவரும் படங்களுக்கு ரெபரென்ஸாக இருக்கும்.இந்தப் பாதையில் பல்வேறு தடைகள்,சிரமங்களைத் தாண்டித்தான் ஒரு தொடக்கப் புள்ளியை வைத்திருக்கின்றோம்.இந்தத் தொடக்கப்புள்ளியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் இஸ்லாமிய வெறுப்பு சினிமாவுக்கு எதிராகக் களமாடக்கூடிய இஸ்லாமிய வாழ்வியலை இயல்போடு சொல்லக் கூடிய உண்மையை எடுத்துரைக்கும் படங்கள் வரவேண்டிய தேவை இருக்கிறது.அது ஒரு ஹபீபியினால் மட்டுமே சாத்தியமில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். கூட்டியக்கமாகச் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.
இஸ்லாமிய வெறுப்பை உருவாக்குபவர்களின் படைப்புகளில் வடிவ நேர்த்தி இல்லை என்றாலும்,கருத்தியல் செறிவு இல்லையென்றாலும் கூட அவர்களுடன் நின்று அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறார்கள்.ஹபீபி போன்ற படங்களுக்கு ஜனநாயக சக்திகள்,முற்போக்கு களச் செயல்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து நின்று தொடர்ந்து தலித்சினிமாக்கள் மாற்றத்தை உருவாக்கியதைப் போல இஸ்லாமிய சினிமாவைக் கொண்டு வரத் தேவை இருக்கிறது.
வெறும் கதைகளினால் மட்டுமே இது நிகழ்ந்துவிடுவதில்லை.இதற்குப் பின் பெரும் பொருளாதாரத் தேவையும் இருக்கிறது.இப்போது கூட விழித்துக் கொள்ளவில்லை எனில் கடந்த 15 ஆண்டுகளில் எப்படி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் எனக் காட்சிப்படுத்தப்பட்டு குழந்தைகள் உள்ளிட்ட பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டதோ அதுபோன்றே எதிர்கால வெறுப்பரசியலில் அடுத்த தலைமுறையும் வீழ்ந்துவிடும்.எனவே இது தொடர் செயல்பாடாக மாற வேண்டிய தேவை இருக்கிறது.ஹபீபி அதைச் சாத்தியபடுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.