கடந்த இதழ் தொடர்ச்சி...
நீங்கள் சொல்வதைப் போல நரசிம்மராவ் காலத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கியதா? அதற்கு முன்பு வரை ஃபலஸ்தீனுக்கு ஆதரவான நிலைப்பாடு தான் இருந்ததா?
ஃபலஸ்தீன் என்கிற நாடு உருவாவதில் தமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என மோடி கூட சொல்லி இருக்கின்றார். ஆனால் இஸ்ரேலின் அநீதிகள் கண்டிக்கப்பட்ட வேண்டும் அல்லவா? குறைந்தபட்சம் நீங்கள் இருவர் செய்ததும் தவறு என்றாவது சொல்ல வேண்டும். எதுவும் சொல்லாமல் சும்மா இருந்தால் என்ன செய்வது?
உலக நாடுகள் மௌனமாக இருக்கும் வரை இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. சர்வதேசச் சட்டம் என்ன சொல்கிறதோ அதனடிப்படையில் தீர்வு காணவேண்டும். முஸ்லிம்கள், ஃபலஸ்தீன் மக்களுக்குச் சாதகமாக முடிவெடுக்க வேண்டாம். இஸ்ரேலுக்குச் சார்பாகவும் முடிவெடுக்க வேண்டாம். சர்வதேசச் சட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து இஸ்ரேலை வெளியேறச் சொல்கிறது. இஸ்ரேலால் வெளியேற்றப்பட்ட ஃபலஸ்தீனர்களை உள்ளேவிட வேண்டும்.
ஆனால் ஏன் இதுபற்றி ஒருவர் கூட பேசுவதில்லை? இன்று இவ்வளவு பிரச்னைகள் நடக்கிறதே யாராவது ஐ.நாவின் தீர்மானத்தைப் பற்றிப் பேசுகிறார்களா? அதனை யாரும் பேசுவதில்லையே! அந்தத் தீர்மானம் தான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்றும் யாரும் சொல்ல வில்லையே!
இதில் சீன, ரஷ்யாவின் நிலைப்பாடுகள் என்னவாக இருக்கின்றது?
அவர்கள் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ஆதரவு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எதிர் நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இதுவரை புத்தின்(Putin) ஏதாவது பேசியிருக்கிறாரா? சீனாவும் பேசவில்லையே! நான் ஆயுதம் வழங்குகிறேன். உங்களைக் காப்பாற்றுகிறேன் என யாரும் முன்வரவில்லையே! அனைத்து நாடுகளுக்கும் ஒரு கணக்கு இருக்கின்றது. அவர்களின் பொருளாதார, அரசியல் கணக்குகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அதைப் பொறுத்துத்தான் வெளிநாட்டுக் கொள்கைகளும் அமையும். அதனால் அவர்கள் மௌனமாக இருக்க வேண்டிய நிலைதான் இருந்து வருகிறது.
ரஷ்யாவிலும் மிகப்பெரும் விஞ்ஞானிகளாக யூதர்கள் தான் இருக்கின்றனர். அங்கேயும் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. உலக நாடுகள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆகவே தான் அனைவரும் மௌனம் காக்கின்றனர்.
ஐ.நாவின் பொதுச் சபையில் ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் ஃபலஸ்தீன் பிரச்னை பேசப்படும். அதில் 200க்கு கிட்டத்தட்ட 140 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றன. அந்தப் பொதுச் சபைக்குச் செயல்படுத்தும் சக்தி கிடையாது. அவர்களால் தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
அதற்குமேல் பாதுகாப்புக் குழு என்கிற குழு அமர்ந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றுவதைத் தடுத்து ஐ.நா சபையை ஒன்றுக்கும் உதவாத சபையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழு, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அக்குழுவிற்குள் பிற நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் வெறும் ஆறு நாடுகள் மட்டும் அமர்ந்து கொண்டு வேறு எந்த நாடுகளையும் உள்ளே அனுமதிப்பதில்லை.
தற்போது ஐ.நா சமூக சேவை நிறுவனமாக இருக்கின்றதே தவிர உலகப் பிரச்னைகளைத் தீர்க்கும் ஓர் அமைப்பாகச் செயல் படுவதில்லை. ஆகவே தான் அதனை UNO அல்ல USO எனக் கேலி செய்வார்கள். இப்படி உலக நாடுகளுக்கிடையே பிரச்னைகள் வரும்போது தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டும். ஆனால் அப்படி ஒன்றும் செய்யப்படுவதில்லை. அப்படி அமெரிக்காவை மீறி ஏதாவது செய்தால் உடனே அதற்கு வழங்கப்படுகின்ற உதவிகளை அமெரிக்கா நிறுத்தி விடும்.
வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்பிட்டீர்கள். இதுவரை மக்கள் ஒரு கோணத்தில் இந்த விஷயத்தை அணுகி இருப்பார்கள். ஆனால் இது குறித்து மக்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
முதலில் ஆதி முதல் இன்று வரையிலுமான வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். அண்மைக்கால செய்தித் தாள்களிலோ அல்லது ஊடகங்களிலோ வரும் செய்திகளை வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஆரம்பத்திலிருந்து ஃபலஸ்தீன் மக்கள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் முஸ்லிம்களை வெறுக்கின்ற இஸ்லாமோஃபோபியா கோட்பாடு இருக்கின்றது. அது செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இன்னும் அதிகரித்தது. இன்றைய மக்கள் பலரும் அந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு தான் இதனைப் பார்க்கின்றார்கள். அதனாலேயே அவர்களுக்கு உண்மைகள் புலப்படுவதில்லை. மேலும் முழுமையாக ஐ.நாவின் தீர்மானங்களைப் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
உண்மைச் செய்திகள் மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. ஹமாஸை தீவிர வாதிகள் என்று எழுதுகின்றனர். எப்படி தன் நாட்டைக் காக்கப் போராடுகின்றவர்கள் தீவிரவாதி ஆவார்கள்? அப்படியென்றால் இந்தியாவிற்கு விடுதலை பெறப் போராடியவர்கள் தீவிரவாதிகளா? பகத்சிங் தீவிரவாதியா? அவரை தீவிரவாதி என்று அழைப்பார்களா? அப்படிக் குறிப்பிடுவதைக் கைவிட வேண்டும்.
உலக நாடுகள் ஃபலஸ்தீன விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். பிறகு அவர்களிடம் நீங்கள் வன்முறைக்கெல்லாம் செல்ல வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உமது நாட்டைப் பெற்றுத் தருகிறோம் என்று சொல்ல வேண்டும். இது அல்லவா சரியான வழிமுறையாக இருக்க முடியும்.
நீங்கள் நிறையப் படித்திருக்கின்றீர்கள், நிறைய விஷயங்களைக் கோடிட்டுக் காட்டி இருக்கின்றீர்கள். இந்தப் பிரச்னை எப்படி ஒரு முடிவுக்கு வரும் என நினைக்கின்றீர்கள்?
ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் அதற்கு வல்லரசுகளின் ஒப்புதல் தேவை. இப்போது இஸ்ரேல் அமெரிக்கா சொன்னால் மட்டும்தான் கேட்கும். வேறு யாருக்கும் கட் டுப்படாது. அமெரிக்கா இதனை உறுதியாகச் சொல்ல வேண்டும். ஃபலஸ்தீனர்களுக்கு என்று தனிநாடு வழங்கப்பட வேண்டும். பல நாடுகளும் ஐ.நாவின் இருதேசக் கொள்கையைத் தான் வலியுறுத்துகின்றன. ஆனால் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புகளை விரிவாக்கிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக இந்தத் தாக்குதலுக்குக் காரணமே மேற்குக்கரை (West Bank) பகுதியில் புதிய ஆக்கிரமிப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்திக் கொண்டே சென்றதுதான்.
அங்கு பூர்வகுடி மக்களைத் துரத்தி அவர்கள் குடியேறுகிறார்கள். அதற்கு உலகம் மௌனம் காக்கின்றது. ஹமாஸ் தவறு செய்தால் அனைவரும் கண்டிக்கிறார்களே! இதுவரை யாராவது இஸ்ரேலைக் கண்டித்திருக்கிறார்களா? இது எந்த வகையில் நியாயமாகும். இந்தப் பிரச்னை மனிதாபிமானத்தின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும். அங்கு இறப்பது அவர்களுடைய குழந்தைகளாக இருந்தால் சும்மா இருப்பார்களா? அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்டதற்கு என்ன கொதி கொதித்தார்கள். அதற்கு ஆப்கானிஸ்தான் ஈராக் ஆகிய இரு நாடுகளைத் தகர்த்தார்கள் அல்லவா. அவர்களுடைய நாட்டு மக்களின் உயிர் என்றால் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே, பிற நாட்டு மக்களின் உயிர்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.
அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாடு உடைய வேண்டும். தற்போது இஸ்ரேலுக்கு ஒரு நீதி, ஃபலஸ்தீனுக்கு ஒரு நீதி என வைத்திருக்கிறார்களே அந்த நிலை மாற வேண்டும். இதுபோன்ற அவர்களின் இரட்டை நிலை மாறினாலே உலகின் பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
எழுத்தாக்கம் : ஷே. ஹபிபுர் ரஹ்மான்