மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

திணிக்கப்படும் இடைத்தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மெளலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ, October 1-15,2026


திணிக்கப்படும் இடைத்தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

- மெளலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மாநிலத் தலைவர்

2026 செப்டம்பர் 24ஆம் நாள் சென்னை ஜமாலியா IIC அரங்கத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தின் அறிக்கை

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை வரவேற்கின்றோம்...!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்கிற பெயரில் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்திய மக்கள் நலத்திட்டத்தை வரவேற்கின்றோம். மக்கள் நல அரசின் அடையாளமாய் தனிச்சிறப்புமிக்க நடவடிக்கையாய் 1920களில் சென்னை மாநகராட்சியில் நீதிக்கட்சியின் பி.தியாகராயர் செட்டியார் அவர்களால் ஆயிரம் விளக்குப் பகுதி பள்ளியில் தொடங்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கான உணவு வழங்கும் திட்டம், 1950களின் இறுதியில் காமராஜரால் மாநிலம் முழுவதும் மதிய உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1980களில் எம்ஜிஆர் அவர்களால் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு, தொடர்ந்து கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் ஊட்டச் சத்துகளைக் கொண்டு மேம்படுத்தப்பட்டு மு.க.ஸ்டாலின் அவர்களால் காலை உணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க மக்கள் நலத் திட்டமாக முத்திரை பதித்தது.

இந்நிலையில் காலை உணவு அருந்தாமல் வருகின்ற பிள்ளைகளின் சோர்வைப் போக்குகிற, கற்கும் திறனை மேம்படுத்துகின்ற நோக்கத்துடன் 2018 இல் துவரங்குறிச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் 2018இல் தொடங்கி வைத்தனர். கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் இந்தத் திட்டத்தை இடைவிடாமல் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சமரசம் நேரடியாகக் கள ஆய்வு செய்து காலை சிற்றுண்டித் திட்டத்தை வலியுறுத்தி 2019 ஏப்ரல் 16-30 முகப்புக் கட்டுரை வெளியிட்டது.

துவரங்குறிச்சி இஸ்லாமிய மகளிர் அணியினரின் இந்த பாராட்டத்தக்க பணி தமிழ்நாடு அரசின் கவனத்துக்குச் செல்ல, பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு 2022 இல் செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. துவரங்குறிச்சி மகளிர் அணியினர் வரையறுத்திருந்த மெனு கூட முழுமையாக அப்படியே பின்பற்றப்பட்டது. இந்தச் சீர்மிகு திட்டத்தின் மூலமாக ஒரு இலட்சத்து பதினான்காயிரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன் பெற்றனர். தொடர்ந்து 2024-25இல்

இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட, இதன் மூலமாகப் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சமாக உயர்ந்தது.

இப்போது இந்தக் காலை உணவு வழங்கும் திட்டத்தை எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தியாகும். இப்போது இதன் மூலமாகப் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை முப்பத்தி நான்கு இலட்சங்களாக உயர்ந்துள்ளது.

இந்தச் சிறப்பான திட்டத்தின் பயனாக பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. மாணவர்களின் கவனம், நினைவாற்றல், வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகிய அனைத்தும் மேம்பட்டுள்ளன என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும். மேலும் தீவிர நோய்களுக்கு ஆளாகின்ற விகிதமும் குறைந்துள்ளது. பெற்றோரின் சுமை குறைந்துவிட, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே பசியைப் போக்கி கல்வியை மேம்படுத்தும் சமூக முதலீடாக மிளிர்கின்ற இந்தத் திட்டத்தை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் வருகின்ற அக்டோபர் 6 அன்று நடைபெற இருக்கின்றன. தமிழ்நாட்டின் எழுபத்தி நான்கு ஆண்டுக்கால சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத விநோதமான தேர்தல் இது. 1952இல் அமைக்கப்பட்டதிலிருந்து 100க்கும் அதிகமான இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ஆனால் இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் முற்றிலும் மாறுபட்டவை.

பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் மரணமடைந்து விடுகின்ற போதும், தம்முடைய பதவியை விட்டு விலகி விடுகின்றபோதும், சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் முதலமைச்சராகத் தேர்வாகி பொறுப்பேற்கின்ற போது ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும் என்கிற கட்டாயச் சூழல்களின்போதும்தாம் இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டின் முதல் இடைத்தேர்தலே இப்படித்தான் நடந்தது.

குலக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் எழுந்த மிகப் பெரும் எதிர்ப்பின் காரணமாக முதலமைச்சர் இராஜாஜி பதவி விலக, சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய அந்தக் கட்டாயச் சூழலுக்கு ஆளான போது, காமராஜருக்காக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.அருணாச்சல முதலியார் பதவி விலக 1954இல் நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார்.

ஆனால் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் அந்த மாதிரியான கட்டாயச் சூழலினாலோ எம்.எல்.ஏக்கள் இறந்து போனதாலோ நடக்கின்ற தேர்தல்கள் அல்ல. இந்த இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடிய இரண்டு எம்.எல்.ஏக்களும் உயிரோடு தான் இருக்கின்றார்கள். உடல் நலத்தோடும் மன நலத்தோடும்தான் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால்தான் இந்த திடீர் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.

தவெக அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மூன்றில் இரண்டு அளவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் வர ஆயத்தமாகாத நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தினால் தகுதி நீக்கம் செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் மேற்கொண்ட உத்திதான் பதவிவிலகிவிட்டு, தவெக கட்சியில் சேர்ந்து இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக நின்று மறுபடியும் எம்.எல்.ஏ ஆகி விடுகின்ற மிக மோசமான திட்டம்.

இது தற்செயலாகவோ, எதிர்பாராத நிகழ்வினாலோ, திடீர் அரசியல் திருப்பங்களின் விளைவாக ஏற்பட்ட கட்டாயச் சூழலினாலோ நடக்கின்ற இடைத்தேர்தல் அல்ல. இது மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். தனிமனிதர்களின் ஆதாயங்களுக்காக ஒட்டுமொத்த தொகுதி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தேர்தல்தான் இது. கூட்டணியை முறித்தல், கட்சியை உடைத்தல், ஆளுமைகளை விலைக்கு வாங்குதல் என நீளுகின்ற அரசியல் அசிங்கங்களின் மற்றுமோர் சான்றுதான் இந்தத் தேர்தல்.

ஒரு தொகுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடத்துவதற்கு 2024இல் நடந்த விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் செலவைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தேர்தல் ஆணையம் மட்டுமே 94 இலட்சம் ரூபாய்களைச் செலவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் செலவுகளையும் சாமான்யர்கள் அந்த ஒரு நாளை தேர்தலுக்காக ஒதுக்குவதாலும், பயணங்கள் மேற்கொள்வதாலும், பிற செலவுகளையும் கணக்கில் கொண்டால் இது கோடிக்கணக்கானதாய் பேருருவம் எடுக்கும்.

இப்படித் தேர்தல்கள் திணிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும், கட்சித் தாவல்களையும் அணி மாறுகின்ற அவலங்களையும் தடுப்பதற்காகவும் தக்க சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் வகுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஒன்றிய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

தொடரும் மின்வெட்டும் பதறச் செய்யும் மின் கட்டணமும்

மே 10 அன்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் முதன் முதலாகக் கையெழுத்திட்டது இலவச மின்சார அளவீட்டை 200 யூனிட்களாக உயர்த்துகின்ற அரசாணையில் தான். அப்போது இனி மின் கட்டணம் ஒரு பெரிய சுமையாக இருக்காது என்றே மக்கள் எல்லோரும் நினைத்தார்கள். எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை நொறுக்கித் தள்ளுகின்ற விதத்தில் மின் கட்டணங்கள் மக்களைப் பதம் பார்த்தன. இந்நாள் வரை இல்லாத கதையாய் நடுத்தர மக்களின் முதுகை முறிக்கின்ற அளவுக்குக் கட்டணங்கள் கிடுகிடுவென வளர்ந்தோங்கி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

மின்கட்டணங்கள் மக்களைப் பதறச் செய்கின்றன. சென்னையில் மட்டுமின்றி திருச்சி, கடலூர், திருநெல்வேலி, நாமக்கல், மதுரை என மாநிலம் முழுவதிலும் தொடரும் மின்வெட்டுகள் மக்களுக்குச் சொல்லொணா வேதனையைத் தந்து கொண்டிருக்கின்றன. எப்போது மின்வெட்டு வரும், எப்போது மின்சாரம் வரும் என்பது நிச்சயமில்லாத சூழல். வணிகம், தொழில், வேளாண்மை என எல்லாத் தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஆபத்து உள்ளது. இரவு வேளைகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுகின்ற போதோ அது மக்களின் தூக்கத்தை மட்டுமின்றி அரசு மீதான நம்பிக்கையையும் பறித்துவிடும் என்பதையும் மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மின் நுகர்வு அதிகரித்திருப்பதும், தொடரும் வெயிலின் காரணமாக ஏசி, குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றின் பயன்பாடு கூடியிருப்பதாலும் தொழில் வளர்ச்சியின் காரணமாகவும் மின் தேவை அதிகரித்துள்ளது. நம்முடைய மாநிலத்தில் தனிநபர் மின் நுகர்வும் (1800-1935 யூனிட்) தேசிய தனிநபர் மின் நுகர்வைக் (1300-1400 யூனிட்) காட்டிலும் அதிகம். சராசரியாக நாள் தோறும் 400 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகரப்படுகின்றது. அதற்கேற்ப வருமானமும் வாரியத்துக்குக் கிடைக்கின்றது. என்றாலும் வாரியத்தின் கடன் சுமை 2.47 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கின்றது.

அதிகமான தொழில் வளர்ச்சி, நகரமயம், வாழ்க்கைத் தரம் மேம்பாடு ஆகியவற்றின் காரணமாக மின் நுகர்வும் இங்கு அதிகம். அதற்கேற்ப முறையான திட்டமிடலும், தொடர் பராமரிப்பும், சிக்கனமும், வீண் விரயத் தவிர்ப்பும் தேவை. தமிழ்நாடு மின்சாரத் தேவை, மின் நுகர்வு விகிதம், கிடைக்கின்ற வருமானம், பணியாளர் பற்றாக்குறை, கடன் சுமை என திரும்பும் திசையெங்கும் சவால்கள் நிறைந்ததாய் தமிழ்நாட்டு மின்சார விவகாரம் இருக்கின்றது. எனவே போர்க்கால அடிப்படையில் காத்திரமான உறுதியான, திடமான, தொலைநோக்குடன் கூடிய நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த இரு தொகுதிகளிலும் மிகப் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடிய இரண்டு எம்.எல்.ஏக்களும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். உடல் நலத்தோடும் மன நலத்தோடும்தான் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால்தான் இந்த திடீர் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.

பால் தட்டுப்பாடு பேரவலம்...!

சென்னையிலும் கோவை, திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பால் தட்டுப்பாடு காணப்படுவது கவலையளிக்கின்றது. இந்தத் தட்டுப்பாட்டின் விளைவாகப் பால் தினசரி விற்பனை கடந்த ஆறு மாதங்களில் பத்து, பதினைந்து விழுக்காடு சரிந்துள்ளது. குறிப்பாக நடுத்தர மக்கள் பெரிதும் விரும்பும் பச்சை வண்ணப் பாக்கெட் பால் காலை 6 மணிக்கே தீர்ந்துவிட மற்ற நேரங்களில் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. சில சில்லறை வியாபாரிகள் அதிக விலையில் விற்கின்ற அவலமும் நடக்கின்றது.

தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலின் அளவு சரிந்ததும், வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைந்துவிட்டதும் தட்டுப்பாட்டுக்கான காரணங்களாகச் சொல்கின்றார்கள். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்திய பிறகும் பால் தட்டுப்பாடு நீடிப்பது விநோதமே.

மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கின்ற பால் அவர்களுக்குத் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசு இந்த விஷயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்